Last Updated :
நாள்தோறும் பெருக்கி மெழுகித் தூய்மையாக வைத்துக் கொள்ளப்படும் வீட்டிலும் தூசி சேரும்! ஆகவே தூசி அகற்றல் என்பது நாள்தோறும் செய்யப்பட வேண்டிய ஒரு பணி ஆகிறது. ஒரு சமூகமும் அத்தகையதுதான். பெரும்பான்மையான மக்கள் எளியவர்கள். நல்லதன் நன்மையையும், தீயதன் தீமையையும் பாகுபடுத்தி அறியத் தெரியாதவர்கள். ஒரு குதிரைப் பாகன் குதிரையை நிலமறிந்து செலுத்துமாறுபோல, மக்களைத் தலைமை சான்றவர்கள் நெறியறிந்து செலுத்தும்போதுதான் சமூகம் வாழத்தக்க நாகரிகமுடையதாகிறது. மக்களைக் கூட்டமாகச் செயல்பட வைக்கும் ஒரு கொள்கை தலைதூக்கி நிற்கும்போது, அது ஓர் இயக்கமாக உருமாறுகிறது. இருபதாம் நூற்றாண்டில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத காந்தியின் விடுதலை இயக்கம், பெரியாரின் தன்மான இயக்கம், அண்ணாவின் தமிழியக்கம், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் எதேச்சாதிகார எதிர்ப்பு இயக்கம், லோகியா, கிருபளானிகளின் சோஷலிச இயக்கங்கள் என்பன போல பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலாரால் கட்டப்பட்ட சன்மார்க்க இயக்கம், 6-ம் நூற்றாண்டு தொடங்கி 400 ஆண்டுகள் நீடித்த பக்தி இயக்கம் எனச் சுழித்தடித்தார்த்த இயக்கங்கள் பல. இந்த இயக்கங்களின் நோக்கங்கள் வேறு வேறு என்றாலும், இந்த இயக்கங்களால் மக்கள் ஓர் இலக்கு நோக்கிச் செலுத்தப்பட்டனர். பிடிப்பற்ற தலைமுறையினர்க்கு இந்த இயக்கங்களால் ஒரு பிடிப்புக் கிடைத்தது. அவற்றால் மக்கள் ஒரு கூட்டமாக மாற்றமுற்றனர். ஓர் இயக்கங் கட்டுவதென்பது ஒரு மலையேறும் முயற்சி! எதிர்நோக்கு, நிகழ்காலச் சிக்கல்கள் குறித்த தெளிந்த பார்வை, அந்தச் சிக்கல்களை அவிழ்க்கும் திறன், கூரிய அறிவு, தன்னல மறுப்பு ஆகியவை இயக்கங் கட்டுபவர்களுக்குத் தேவையான அடிப்படைக் குணங்கள். இந்தக் குணங்களெல்லாம் மேலே கூறப்பட்ட இயக்கங்களின் தலைவர்களுக்கு முற்றாக இருந்தன. ஆகவே அந்த இயக்கங்கள் வெற்றி பெற்றன. மக்களை மடைமாற்றம் செய்தன. காந்தியின் விடுதலை இயக்கம் நீங்கலாகத் தன்மான இயக்கம், தமிழ் மறுமலர்ச்சி போன்றவை எல்லாம் அழுத்தப்பட்ட நிலைக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றவை. ஆனால் போராளிகளை நெறிப்படுத்தும் தன்மை கொண்டவை அல்ல. அதனால் போர் நடக்கும்போது அவர்கள் எந்தவித ஆதாயத்தையும் எதிர்பார்க்காத குறிக்கோட் பற்றினர்தாம் என்றாலும் போர், வெற்றியில் முடிந்த பிறகு, பழைய கால முடிமன்னர்களின் போர்வீரர்கள் வெற்றிபெற்ற நாட்டைக் கொள்ளையடித்துச் சூறையாடி விடுவது போல, இந்த அரசியல் கட்சியினரும் போராட்டம் முடிந்து ஆட்சிக் கட்டிலில் அமரும் நிலையில், அலிபாபா கதையில் வரும் நாற்பது திருடர்களைப்போல் ஆகி விடுகின்றனர். கொள்ளையடிக்க விடவில்லை என்றால் "கட்சி நிற்காது' என்று இன்றைய கட்சித் தலைவர்கள் சொல்வது போலத்தான், பழைய கால மன்னர்களும் போர்வீரர்களைக் கொள்ளையடிக்கவும் சூறையாடவும் அனுமதித்தனர். காந்தி ஒருவர்தான் அரசியலில் அறத்தைப் பின்னியவர்! வெள்ளைக்காரனை விரட்டி விட்டால் போதும்; நாட்டில் பாலும் தேனும் பெருகிஓடும் என்பன போன்ற வீண் நம்பிக்கைகளை அவர் வளர்க்கவில்லை. மக்கள் நெறிசார்ந்த அரசியலுக்கு மாறாவிட்டால் விடுதலை அடைந்தும் பயனிருக்காது என்று கடுமையாக எச்சரித்தவர் அவர். பெரியாரும், அண்ணாவும் ஆர்ப்பாட்டம், மறியல், கறுப்புக்கொடி என்று நடத்திய போராட்டங்களெல்லாம் காந்திய வழிப் போராட்டங்களே! "காந்தி ஒழிக' என்று சொல்லிக் கொண்டே வெட்கமில்லாமல் காந்தியிடம் கற்றுக்கொண்ட போராட்ட முறைகள் அல்லவா இவை! ஆயுதந் தாங்கிப் போராட வேண்டிய பொதுவுடைமைக் கட்சியினரே, அஞ்சலகம் கண்ட இடங்களிலெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுக் கலைந்து போய்விடுகிறார்களே! மனிதச் சங்கிலிப் போராட்டங்களெல்லாம் அவர்கள் மார்க்சிடம் கற்றுக்கொண்டவை அல்லவே! காந்தியின் பிடியிலிருந்து சர்வதேசக் கட்சிகளும் தப்ப முடியவில்லையே! எதிரியை வருத்தாமல் தானாகவே உவப்போடு முன்வந்து அடிபட்டும், சிறைப்பட்டும் தன்னை வருத்திக்கொண்டு, மக்களிடம் தன்னைக் குறித்த பரிவையும், அதன் வழியாகக் குறிக்கோள் பற்றிய விழிப்புணர்வையும் உண்டாக்கிப் போராடும் முறை உலகம் முழுவதிலும் எங்கும் கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் காந்திக்கு முன்னால் கற்பனையாகக்கூட நினைத்துப் பார்க்க முடிந்த ஒன்றல்லவே! இவ்வளவு பெரிய ஊழித்தலைவன் காந்தி நடத்திய கட்சியே அந்தத் தலைவனின் மறைவுக்குப்பிறகு, அவன் வகுத்துத்தந்த நெறிசார்ந்த ஆட்சியை மத்தியிலும் மாநிலங்களிலும் இருபது ஆண்டுகளுக்குத்தான் வழங்க முடிந்தது! 1967-ல் காந்தியம் என்பது கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு கடந்த காலக் கனவாகிவிட்டதே! எந்த ஓர் இயக்கமும் அது தோன்றிய நோக்கம் நிறைவேறிய கையோடு, இயற்கையாகவே காலமாகி விடவேண்டும். இல்லாவிடில் அந்த இயற்கை விதியை மீறி மிச்சமிருக்கிற இயக்கம் ஒரு பயனுமில்லாத தொங்கு சதையாகிவிடும். சில சமயங்களில் தோன்றிய நோக்கத்துக்கு முரணாகக்கூடச் செயல்படத் தொடங்கிவிடும்! இதுதான் காலாவதி ஆகிவிட்ட கட்சிகளால் நேரும் மிகப்பெரிய கேடு! பல கட்சிகள் நெருக்கடி நிலைக் காலத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனால் ஒன்று கூட்டப்பட்டு ஜனதா கட்சி ஆனது! நெருக்கடி நிலை வதைகளையும், சொல்லொணாத் துயரங்களையும் உறுதி குலையாமல் எதிர்கொண்ட அந்தக் கட்சி, மக்களால் பதவியிலும் அமர்த்தப்பட்டது. அது பதவியிலமர்ந்து மீண்டும் ஒரு சர்வாதிகார ஆட்சி இந்தியாவில் தோன்றிவிடா வண்ணம், அரசியல் நிர்ணயச் சட்டத்தில் வலுவான திருத்தங்கள் செய்து முடித்துவிட்டு, இரண்டரை ஆண்டுகளில் அந்த ஆட்சியும் கலைந்து கட்சியும் மண்டையைப் போட்டு விட்டது! இனிக் கல்லறைத் திருவிழா நாள்களில் அந்த வரலாற்றுப் புகழ்மிக்க கட்சி மலர்வளையம் வைத்து மறக்காமல் நினைவு கூரப்படும்! அவ்வளவுதான், அதனுடைய வரலாற்றுத்தேவை! அதுபோலவே விடுதலை அடைந்தவுடன் காந்தி விரும்பியவாறு காங்கிரஸ் கட்சி கலைக்கப்பட்டிருக்க வேண்டும்! நேருவும், படேலும் அதற்கு இசையவில்லை. வயதான காலத்தில் ஆளுக்கொரு கொள்கை உடைய அவர்கள், ஆளுக்கொரு கட்சி கட்ட விரும்பவில்லை. காங்கிரஸின் பெயராலேயே ஆட்சியில் இருந்துவிட்டுப் போகவிரும்பினர். ஆனால், அவர்களிருவரும் காந்தியின் வளர்ப்பு என்பதால், நெறிசார்ந்த அரசியலை விட்டு அணுவளவும் மாறவில்லை! நாட்டுக்கும் அவர்களால் நன்மையே விளைந்தது! ஆனால் நேருவுக்குப்பிறகு இந்தியாவில் முதலில் குடும்பக் கட்சியாகி வம்சாவளி ஆட்சிக்கு வித்திட்ட கட்சி காங்கிரஸ் கட்சிதான்! அதனால்தான் எங்கே ஆட்சி நம் வம்சத்தின் கையை விட்டுப் பறி போய்விடுமோ என்னும் அச்சத்தில், விடுதலையைப் பெற்றுத்தந்த காங்கிரஸின் பெயராலேயே விடுதலையைப் பறித்தார் இந்திரா காந்தி! இது ஓர் எதிர்நிலை அல்லவா? சோஷலிசம் பேசிய காங்கிரஸ், இன்று பன்னாட்டுப் பெரு முதலாளிகளுக்கும், பாரதப் பெரு முதலாளிகளுக்கும் பாதபூஜை செய்து கொண்டிருக்கிறது! இந்த முரண் காரணமாகத்தான் நாட்டில் மூன்றில் ஒரு பகுதி நக்சலைட்டுகளின் பிடிக்குள் போய்விட்டது! காங்கிரஸின் கருப்பைக்குள் வளர்ந்து கொண்டிருக்கும் அதன் எதிர் சக்தி நக்சலிஸம்! பசியை நீக்கு; வறுமையை ஒழி! அம்பானிகள் "ஆகாய அரண்மனைகளில்' வாழ்வார்கள்; குப்பன் கூவச் சாக்கடையில் குடியிருக்க வேண்டுமா? இவற்றையெல்லாம் மாற்று; முதலில் பாதபூஜை செய்வதைக் கைவிடு; நக்சலிஸம் தானாக ஆற்றல் இழக்கும்! இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, உள்துறை அமைச்சர் ராணுவத்தின் துணைகொண்டு அவர்களை ஒடுக்குவாராம்! பதினாறாம் லூயியிடம் ராணுவம் இல்லையா? பிரெஞ்சுப் புரட்சியை ஒடுக்க முடிந்ததா? சார் மன்னனிடம் ராணுவம் இல்லையா? லெனின் முளைத்தானே? இவற்றையெல்லாம் உள்துறை அமைச்சருக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சொல்லிக் கொடுத்ததில்லையா? கேளம்பாக்கம் மாநகராட்சிப் பள்ளியில் கூடச் சொல்லிக் கொடுக்கிறார்களே! வரலாற்றுத் தேவைக்கு மேல் ஒரு கட்சியின் ஆயுள் நீள்வதால் ஏற்படும் கால முரண்கள் இவை! இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் தோன்றிய பெரியாரின் தன்மான இயக்கம், தமிழர்களைச் சூத்திர நிலையிலிருந்து விடுவித்தது. தொட்டால் தீட்டு; பார்த்தால்கூடத் தீட்டு என்று பன்னூறு ஆண்டுகளாய் நிலவிவந்த இழிநிலை. பெரியாருடைய பிறப்பையே அர்ப்பணித்த ஓய்வறியாத் தொண்டால் ஒழிந்தது! இந்த அரிய பணியோடு திராவிடர் கழகத்தின் வரலாற்றுப் பணி நிறைவுற்றது! தன்னுடைய காலத்திற்குப் பிறகு தன்னுடைய கருத்துகள் பரப்பப்படாமல் மறக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சி, அவற்றைப் பரப்புவதற்குத் தன்மான இயக்கத்தின் பேரால், தான் அனுபவிக்காமல் சேர்த்துவைத்த சொந்தச் சொத்தையும், மக்கள் தந்த சொத்தையும் சேர்த்து, பன்னூறு கோடி மதிப்புள்ள ஓர் அறக்கட்டளையை நிறுவினார். பணம் சேர்த்து வைத்ததுதான் பெரியார் செய்த பிழை! அன்றே திராவிடர் கழகம் திருமடங்களின் நிலையை அடைந்துவிட்டது. பெரியாருடைய நூல்களை அச்சிட்டுப் பரப்ப கோவை ராமகிருஷ்ணனின் திராவிடர் கழகம் முனைந்து நின்றபோது, அதைத் தடுக்க உயர் நீதிமன்றத்தின் தயவை நாடினாரே வீரமணி. ஏன்? ஆகாத போகாத நூல்களைக்கூட நாட்டுடைமையாக்குகிற கருணாநிதி, பெரியாரின் நூல்களை நாட்டுடைமையாக்கவில்லையே ஏன்? வீரமணியின் இந்தத் தடைச் செயல் கருணாநிதிக்கு உடன்பாடுதான்! ஆனால், பெரியார் இதற்கு உடன்பட்டிருப்பாரா? இது தோன்றிய நோக்கத்துக்கு எதிராகச் செயல்படும் போக்குத்தானே? முரண்நிலை தானே? அதுபோல் 1949-ல் அண்ணா ஒரு கட்சியைத் தோற்றுவித்து, தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தை வெற்றியை நோக்கிச் செலுத்தினார். அக்கிராசனர் தலைவரானார்; பிரசங்கி சொற்பொழிவாளரானார்; ரமேஷ் அறிவுநம்பி ஆனார்; பஸ் ஸ்டாண்டு பேருந்து நிலையமானது; மதறாஸ் ராஜ்ஜியம் தமிழ்நாடு ஆனது! இந்தி எல்லா நிலைகளிலும் எதிர்க்கப்பட்டுத் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாவது தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தி எதிர்ப்பு என்னும் முழுமுதல் அரசியல் கொள்கை அண்ணாவை அரியணையிலும் ஏற்றிவிட்டது. அண்ணாவின் திராவிட இயக்கத் தேவை நிறைவெய்திவிட்டது. அண்ணாவின் மறைவோடு அந்த இயக்கம் முற்றுப் பெற்றிருக்க வேண்டும்! அதற்கு மாறாக அது நீடித்ததால், எந்த ஈழத் தமிழர்களின் கண்ணீரால் கடல்நீர் உப்புக் கரிக்கிறது என்று அண்ணா சொன்னாரோ, அந்த ஈழத்தமிழினம் அழிவதற்கு, அந்தக் கட்சியே காரணமானது! சுத்தியல் கொடுத்தது இந்தியா; அடித்தது அரக்கன் ராஜபட்ச; அப்படி அடிக்கும்போது அடிபட வேண்டிய இரும்புத் தண்டு மண்ணுக்குள் புதைந்து அடியின் வேகம் தைக்காமல் போய்விடாதபடி அதற்குத் தாங்கு பட்டறையாகச் செயல்பட்டது அண்ணா கலைத்து விட்டுப் போயிருக்க வேண்டிய அவருடைய கட்சிதான்! ""சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை'' (821) என்பார் அறிஞர்க்கெல்லாம் அறிஞரான வள்ளுவர். போர் நிறுத்தத்துக்காகக் கருணாநிதி ஒருவேளை உண்ணாநோன்பு போல பல நாடகங்களை அரங்கேற்றினார்! தமிழ்நாட்டில் காங்கிரஸின் தயவிலிருக்கும் தன்னுடைய ஆட்சியைப் பலி கொடுத்து விடாமல் தடுப்பதற்கு ஈழத் தமிழினத்தைப் பலி கொடுத்தார் கருணாநிதி. இதுதான் திமுக தோற்றுவிக்கப்பட்ட நோக்கமா? இது எதிர்நிலைதானே! காலத்தால் தோன்றிய முரண்நிலை அல்லவா? அவை போல் கடவுள் மறுப்புச் சமயங்களான சமணமும், பௌத்தமும் ஆயிரம் ஆண்டுகள் கோலோச்சி விட்டுத் தளர்ந்தபோது, விண்ணப்பிப்பதற்கோர் கடவுள் வேண்டும் என்பதை மூல முழக்கமாகக் கொண்டு சைவமும், வைணவமும் பக்தி இயக்கத்தைத் தோற்றுவித்தன. இந்தப் போரில் பக்தி இயக்கம் கடவுளை வெற்றிகரமாக நிறுவியது. சமணமும் பௌத்தமும் தமிழ் மண்ணில் வேரற்றுப் போயின. ""தீவினை செய்தால் தீர்ந்தாய்'' என்று மிரட்டிய பௌத்தத்தையும் சமணத்தையும் விட, ""கும்பிட்டு விழுந்து சரி செய்து கொள்ளலாம்'' என்று சொன்ன சைவ, வைணவ சமயங்கள் எளிமையாக இருந்ததால் மக்கள் கூட்டமாக இவற்றுக்கு இடம்பெயர்ந்தார்கள்! தமிழ்நாட்டை ஆட்டிவைத்த இயக்கம் பக்தி இயக்கம்! மக்கள் ஐயப்பன் கோயிலுக்குப் போகிறார்கள்; பழனிக்கு நடக்கிறார்கள்; நாக்கில் வேல் குத்திக் கொள்கிறார்கள்; தீ மிதிக்கிறார்கள்; ஆனால், எதுதான் மாறியிருக்கிறது? பசித்தோர் பசியாறவில்லை; கடவுளின் பெயரால் பலிகள் நடக்கின்றன; மனித வயிறுகள் கல்லறைகள் ஆகின்றன. பக்தி இயக்கம் தேக்கமுற்று விட்டது; அதன் தேவை முடிந்துவிட்டது; அது திருத்தத்துக்கு உரியதாகிவிட்டது. இந்நிலையில் 19-ம் நூற்றாண்டில் திருவருட் பிரகாச வள்ளலார் வந்தார். சைவத்துக்கெதிரான போர் தொடங்கியது. சன்மார்க்க இயக்கமாக அது வெளிப்பட்டது! பசி நீக்கம், உயிரிரக்கம் இரண்டுமே அவருடைய மூல முழக்கங்கள்! வள்ளலார் கடவுளைச் சற்று பின்னுக்குத் தள்ளினார். பலி கேட்கிற சிறு தெய்வங்களை எல்லாம் தூக்கி வீசிவிட்டார்! பசியோடு வந்தவனுக்குச் சோறிடுவதைக் கணவன் தடுத்தால், மனைவி கேட்க வேண்டாம். கடவுள் தடுத்தால் அடியார் கேட்க வேண்டாம்! இது தமிழுக்குப் புதிய குரல்! பிற உயிர்களிடம் தயவு காட்டாமல் கடவுளின் தயவைப்பெற முடியாதென்றார். வழிபாடு முக்கியமில்லை. தயவைக் கொண்டுதான் தயவைப்பெற முடியும் என்றார். இதிலே பேரவலம் வள்ளலாரைச் சைவ சமயம் உறிஞ்சிக் கொண்டுவிட்டதுதான்! தேக்கமுற்ற நிலையிலேயே சைவம் நீடிக்கிறது! காங்கிரஸ், தி.க., தி.மு.க., பக்தி இயக்கம், சன்மார்க்க இயக்கம் என்று அடுத்தடுத்து வந்த பல்வேறு இயக்கங்களில் பக்தி இயக்கம் தேக்கமுற்றது; சன்மார்க்க இயக்கம் சைவத்தால் உறிஞ்சப்பட்டுவிட்டது! காங்கிரஸ், தி.க., தி.மு.க. ஆகியவை வரலாற்றுத் தேவை முடிந்தும் ஆயுள் நீள்வதால் முரண்பாடுகளில் சிக்கிச் சீரழிகின்றன. தான் தோன்றிய நோக்கத்துக்கு எதிராக அவை திரிபடைந்துவிட்டன. தேவைக்கதிகமாக நீளும்போது எதிர்நிலையாய்த் திரிவதுதானே இயற்கை விதி!
By Ilakkuvanar Thiruvalluvan
10/7/2009 4:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *