வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளை அடுத்து, வட மாகாணத்தில் யாரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவில்லை. தேர்தல் பணிபுரிய, அதிகாரிகளாகப் பணியாற்றவும் யாரும் முன்வரவில்லை. கொழும்பிலிருந்து விமானத்தின் மூலம் சிங்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினர், அமைதிப்படை பாதுகாப்புடன் கடைசி நிமிடத்தில் மனு செய்தனர் (சஞ்சீவி வார இதழ்-8.10.88). ஈபிஆர்எல்எஃப் குழுவினர் மனுத் தாக்கல் செய்யும் வரை (வேட்பு மனுத் தாக்கல் செய்ய இறுதிநாள் 10.10.1988) காத்திருந்த அமைதிப்படை, வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்துவிடாதபடிக்கு, அந்தப் பகுதியில் திடீரென ஊரடங்கு அமல்படுத்தி, அரசு அலுவலகத்தருகே நெருங்கவிடாதபடியும் செய்தது பெரும் புதிராக இருந்தது. யாழ் தவிர்த்து இதரப் பகுதிகளின் நிலை என்ன? "கடந்த ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை வவுனியா பகுதியில் உத்தியோகப் பற்றற்ற ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருந்தது. நகரின் உட்பிரவேசிக்கவோ, உள்ளிருந்து வெளியேறவோ எவரும் அனுமதிக்கப்படவில்லை, கச்சேரி (கலெக்டர் அலுவலகம்) மற்றும் நகரின் சுற்றுப்புறங்கள் எங்கணும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன' என்று உதயன் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினர் வவுனியா, மன்னார் பகுதிகளில் போட்டியிட முன்வந்த போதிலும் காலதாமதமாக வந்ததாகக் கூறி அவர்களின் மனுக்கள் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன. (வீரகேசரி-12.10.1988) வவுனியாவில் வேட்புமனுவை ஏற்பதற்கென கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகளிடம், ராணுவ வாகனத்தில் வந்திருந்த ஈஎன்டிஎல்எஃப் நிர்வாகி, 7 பேருக்கான வேட்புமனுக்களைத் தான் ஒருவராகவே தாக்கல் செய்துவிட்டு, அதே ராணுவ வாகனத்தில் திரும்பிச் சென்றார். இதுவும் உதயன் பத்திரிகை செய்திதான். மனுத்தாக்கல் செய்யவந்தவர்கள் யாருமே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படாதது மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. மனுத்தாக்கல் செய்த நபர் யார் என்றாவது காண்பியுங்கள் என்று பத்திரிகையாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நின்று கோரிக்கை வைத்தனர்; கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு தேர்தல் நடைமுறைகளைப் பற்றிய உண்மைத் தகவல்களை அறியச் செய்த காரணத்திற்காக, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த உதயன் நாளிதழுக்குத் தேர்தல் முடியும் நாள் வரை தடை விதிக்கப்பட்டது. இதே போன்று கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழுக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பகுதிகளில் தேர்தல் முடியும்வரை விநியோகிக்கத் தடை விதிக்கப்பட்டது. அமைதிப்படையின் தணிக்கைக்கு உட்படாத பத்திரிகை வீரகேசரிதான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. (வீரகேசரி கொழும்பில் அச்சாகி வெளிவரும் தினசரி ஆகும்). கிழக்குப் பகுதிகளில், தேர்தல் நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. வேட்பாளர்களுக்கான சுவரொட்டிகள் தமிழ்நாட்டில் அச்சடிக்கப்பட்டு, விமானம் மூலம் வடக்கு-கிழக்கு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. கொடிகள், தோரணங்களும் அப்படியே. இலங்கைத் தேர்தல் சட்டப்படி இதுபோன்ற நடவடிக்கைகள் குற்றமாகும். வேட்பாளர் வண்டியில் மட்டுமே கொடிகட்ட அனுமதியுண்டு. இந்தியாவில் உள்ள நடைமுறையின்படி அமைதிப்படை கடைப்பிடித்ததால் ஏற்பட்ட தவறு இது. கொழும்புப் பத்திரிகைகள் அனைத்துமே கண்டித்தன. ஈபிஆர்எல்எஃப் அணியினர் இந்திய ஹெலிகாப்டரில் பறந்து சென்று பிரசாரப் பணிகளை மேற்கொண்டதும் விமர்சனத்துக்குள்ளானது. கிழக்குப் பகுதி மக்கள் வாக்களிப்பதற்காக 576 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், இதில் தேர்தல் பணியாற்ற 5,000 அலுவலர்கள் தேவைப்படுவர் என்றும், இவ்வளவு அலுவலர்களைக் கொழும்பிலிருந்து வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்ல இயலாது என வாக்குச்சாவடி எண்ணிக்கைகளைத் திடீரெனக் குறைத்தனர். கொழும்பிலிருந்து வந்திருந்த 600 அலுவலர்களுக்கு ஏற்ப 324 வாக்குச் சாவடிகள் மட்டுமே இயங்கும் எனவும் அறிவிப்பு கூறியது. 252 வாக்குச் சாவடிகள் ரத்து செய்யப்பட்டதால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வேண்டிய வாக்காளர்கள் வேறு எந்த வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பது எனத் தெரியாமல் குழம்பினர். மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மூலம் அடையாள அட்டை வாக்காளர்களுக்கு உரிய நேரத்தில் விநியோகிக்கப்பட்டிருக்கவேண்டும். மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் பணியாற்ற மறுத்துவிட்ட காரணத்தால் வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டைகள் வழங்கப்படவில்லை. அந்த வாக்காளர் அட்டைகள் தேர்தல் அதிகாரிகளால் ஈபிஆர்எல்எஃப் அணியினரிடமே வழங்கப்பட்டன. அதை அவர்கள் தேர்தல் தினத்தன்றே விநியோகித்தனர். தேர்தல் சட்டத்தை மீறி வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்தனர். தேர்தலுக்குச் சில தினங்கள் முன்பாகவே தேர்தல் நாள் வரை பாதுகாப்புக் காரணம் கூறி கிழக்கு மாகாணத்துக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உள்ளூர் போக்குவரத்துச் சேவையும் சீராக இயங்கவில்லை. அசம்பாவித சூழ்நிலையால் இருப்பிடத்தைவிட்டு இடம்பெயர்ந்து வெளியூர்களில் சென்று இருந்தவர்கள் வாக்களிக்கச் செல்ல முடியவில்லை. தேர்தல் நாளன்று, பெரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் வாகனங்கள் கூட இயங்கவில்லை. போக்குவரத்துச் சேவை முற்றாகச் சீர்குலைந்து இருந்தது. அம்பாறையில் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் வரையில் விற்கப்பட்டது. ஓடிய தனியார் வாகனங்களும் பயணக்கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்தின (வீரகேசரி-23.11.88). பாதுகாப்புக் காரணம் கருதி திருகோணமலையில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் என்பவற்றில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், வாக்களிக்க விரும்பியோர், போக்குவரத்து வசதியும் இல்லாமல் எங்கு சென்று வாக்களிப்பது என்றும் தெரியாமல், வாக்காளர் அட்டையும் இல்லாமல் பல மைல் தூரத்திற்கொன்றாக இருக்கும் வாக்குச்சாவடிகளில் எந்த வாக்குச் சாவடியில் தாம் வாக்களிக்கவேண்டும் என்பதைத் தேடியலைந்து கண்டுபிடித்து, அங்கு தமது வாக்கு இருப்பதை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து, உறுதிசெய்துகொண்டுதான் வாக்களிக்க வேண்டியிருந்தது. இதனால் காலை 7 மணிக்கே வாக்களிப்பு ஆரம்பமானபோதிலும், வாக்களிக்க விரும்பிய வாக்காளர்கள் தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களைத் தேடிக் கண்டுபிடித்து காலை 10 மணிக்கு மேல்தான் வாக்களிப்பு நிலையங்களைச் சென்று அடைந்தனர். இதனால் அநேகமாக எல்லா வாக்குச் சாவடிகளிலும் காலை 10 மணி வரை வாக்காளர்கள் ஒரு சிலர்தான் வாக்களித்தனர். அசம்பாவிதம் காரணமாக இடம்பெயர்ந்து இருந்த வாக்காளர்கள், தாம் தங்கியிருக்கும் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க ஜனாதிபதி தேர்தலில் அனுமதிப்பது போன்ற வசதிகள் எதுவும் இத் தேர்தலில் செய்யப்படவில்லை. ஒப்புக்கு ஒரு கண்துடைப்புத் தேர்தல் நடத்தப்படுகிறது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அதற்கு முன் நடைபெறாத அளவுக்குக் குளறுபடியான ஒரு தேர்தலை அமைதிப் படையின் உதவியுடனும், மேற்பார்வையுடனும் ஜெயவர்த்தனா அரசு நடத்த முற்பட்டது.நாளை: வரலாறு காணாத தில்லுமு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக