புதன், 7 அக்டோபர், 2009

மக்கள் விரும்பினால் பாமக தலைமையில் 3-வது அணி: ராமதாஸ் பேட்டி



நாகர்கோவில், அக். 6: தமிழக மக்கள் விரும்பினால், காலத்தின் கட்டாயம் என்றால், பாமக தலைமையில் 3-வது அணி அமையும் என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய அவர் மேலும் கூறியதாவது: அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியதற்கான காரணத்தை ஏற்கெனவே விளக்கியுள்ளேன். சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படும்போது இதுபோன்ற முடிவுகள் எடுக்க நேரிடுகிறது. 1971-ல் திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்கவில்லை. திமுக குறித்து சி.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியதால் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் என்று திமுக விலகியது. அதிமுக முன்புபோல் இல்லை. அக் கட்சியில் கோஷ்டிகள் அதிகரித்துள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் அக் கட்சி தொண்டர்கள் பலர் திமுக கூட்டணிக்கு விலைபோயினர். தற்போது அதிமுக மிகவும் பலவீனமான கட்சியாக மாறிவிட்டது. பாமகவுக்கு திமுகவின் கதவு மூடியிருப்பதாக சொல்ல முடியாது. சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. எனவே கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி முடிவு எடுக்கும். எந்த கூட்டணி சிறந்தது? அதிமுகவிலிருந்து பாமக விலகியது கட்சியின் நிர்வாகக் குழு எடுத்த முடிவு. அந்த முடிவுக்கு நான் கட்டுப்பட வேண்டும். சொந்த காரணங்களுக்காக கூட்டணியிலிருந்து வெளியேறியதாக கூறமுடியாது. திமுக, அதிமுக கூட்டணியில் எது சிறந்தது என்பது குறித்தும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், அதிமுக தலைமையுடன் தொடர்பு கொள்ளவே முடியாது. திமுக தலைமையுடன் தொடர்பு கொள்ள முடியும். முல்லை பெரியாறு அணை பிரச்னை: முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது காலம் கடந்த முடிவாக இருந்தாலும் வரவேற்கிறோம். கட்சிகளுக்கு வேண்டுகோள்: கேரளத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் எதிரான கொள்கைகளையே கொண்டுள்ளனர். ஆனால், அவர்களை சகோதரர்களாகவே தமிழர்கள் கருதுகிறார்கள். தற்போது எழுந்துள்ள பிரச்னைகள் காரணமாக தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழகத்துக்கு சொந்தமானவை என்று இங்குள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பதை வரவேற்கிறோம். ஆனால், அது நடக்காது என்பதையும் கூறிவருகிறோம் என்றார் ராமதாஸ்.

கருத்துக்கள்

திமுக பட்டுக் கம்பள விரிப்பு வரவேற்பிற்கு ஆயத்தமாக இல்லை என்பது இவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் ஒரு நப்பாசை. இவ்வாறு அறிக்கை விடுகிறார். தன் சாதி முகத்தைத் தூக்கி எறிந்து விட்டு இன நலனுக்கான குரலை மட்டுமே உயர்த்தினால் வைகோவின் தலைமையை ஏற்றுக் கொண்டு அவரது தலைமையில் ஓர் அணி அமைக்க முன்வரவேண்டும். அவ்வாறு அமைந்தால் திருமா.வும் இங்கு வருவார். தமிழ் உணர்வாளர்கள் இவர்கள் பக்கம் நிற்பர். ஆனால், எங்கே ஒட்டினால் என்ன பதவி கிடைக்கும் என்ற கணக்கில் திட்டம் தீட்டினாலும் தோல்வி அச்சத்தில் வன்னியர் குரலை உயர்த்தினாலும் என்ன பயனும் இலலை. தேய்பிறையைச் சந்திக்க விரும்பினால் இதே நிலையைத் தொடரட்டும்! வளர்பிறையைச் சந்திக்க விழைந்தால் இன அணியை உருவாக்கி இணையட்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/7/2009 4:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக