வெள்ளி, 9 அக்டோபர், 2009

ஜெகத் காஸ்பர் அவர்களே சற்று நிறுத்த முடியுமா உங்கள் அறிக்கை மழையை

08 October, 2009 by admin

"சஞ்சனா அனுபம்" என்ற தலைப்பில் நக்கீரனில் மீண்டும் உங்கள் அறிக்கை மழை எம்மையெல்லாம் நனைத்து நிற்கிறது. தடிமன் காச்சல் வராத குறைதான். சூறாவழி, புயல்காற்று எல்லாம் ஓய்ந்த பின்னரும் உங்கள் அறிக்கை மழை மட்டும் இன்னமும் ஓயவில்லை. சிலர் பரபரப்புச் செய்தியை வெளியிட்டு பணம் சம்பாதிப்பார்கள், ஆனால் பணம் சம்பாதிக்க பரபரப்புச் செய்திகளை உங்களை வைத்து உருவாக்குகிறார்கள் நக்கீரன் பதிப்பகத்தினர்.

உங்கள் கட்டுரைகளை கடந்த 5 மாதங்களாகப் படித்துவருகிறேன். மே மாதம் 18ம் திகதிக்குப் பின்னர் உக்கிரமடைந்துள்ள நீங்கள், பிரபல்யமாவதற்கும், பணம் சம்பாதிக்கவும் எமது உன்னத விடுதலைப் போராட்டமா கிடைத்தது ?. நீங்கள் ஈழத்திற்குச் சென்றிருந்தபோது வெரிடாஸ் வானொலியின் அறிவிப்பாளர் என்ற வகையில் ஒரு மரியாதையின் நிமிர்த்தமாக தேசிய தலைவர் உங்களுடன் 6 நிமிடம் பேசினார். அப்போது அங்கு நின்றிருந்தவன் நான். ஆம் அதே நீல நிற ஆடையில்.

நலம் விசாரித்த தலைவரிடம், உங்களை அறிமுகப்படுத்தி அங்கிருந்து அகன்றீர்கள். பின்னர் கிடைத்த ஈழத்து நட்புகள் அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லும் செய்திகளை சேகரித்து, உங்கள் அனுபவமாக அல்லவா வெளிவிடுகிறீர்கள். இதில் கொடுமையான விடையம் என்னவென்றால் நான் உங்களுக்குச் சொன்ன செய்தியையும் நீங்கள் சமீபத்தில் நக்கீரனில் உங்கள் அனுபவம்போல வெளியிட்டுள்ளீர்கள். இது ஒன்று மட்டும் போதுமே.

அத்துடன் இன்றைய தினம் நக்கீரனில் சஞ்சனா அனுபவம் என்ற தலைப்பில் ஒரு யாழ்ப்பாணப் பெண்மணியை பேட்டி காண்பதுபோலவும், அவர் கருத்துக்கள் போல உங்கள் கருத்துக்களைக் கூறியிருப்பதும் வியப்பாக உள்ளது. இது நாள் வரை தமிழீழம் மற்றும், தேசிய தலைவர் மற்றும் போராட்டம் என நீங்கள் பேசிவந்ததால் எல்லாரும் மொளனமாக இருந்தார்கள். ஆனால் தற்போது யாழ்ப்பாணப் பெண்மணியூடாக இந்திய குடிவரவு அதிகாரிகள் மென்மையாக நடந்துகொண்டார்கள் என்றும் ப.சிதம்பரம் சமாதானத்திற்காக பாடுபட்டார் எனவும் நீங்கள் கூற முனைவதை எந்தத் தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ் நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு இலங்கைத் தமிழர்களும் கியூ பிரிவால் அவதானிக்கப்படுவதும், ஆங்காங்கே கைதுசெய்யப்படுவதும், வேலைகளில் அமர்த்தப்படுவதில் வேற்றுமை பார்க்கப்படுவதும் யாவரும் அறிந்த உண்மை. மண்டபம் முகாம் தொடக்கம் செங்கல்பட்டு சிறப்பு முகாம்வரை ஈழத்தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் மத்திய அரசிற்கு வக்காளத்து வாங்க ஆரம்பித்திருப்பது பெரும் சந்தேகங்களைக் கிளப்புகிறது.

இந்திய உளவுப் பிரிவினருடன் நீங்கள் சேர்ந்து இயங்குவது போலான தோற்றப்பாட்டை உருவாக்குகிறது. தொடர்ந்தும் அந்தக் கட்டுரையில் ப.சிதம்பரம் சமாதானத்திற்காய் உழைத்தவர் என்று நீங்கள் பகிரங்கமாக குறிப்பிடுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏன் எனில் இறுதிப்போர் நடைபெறும் கால கட்டத்தில் விடுதலைப் புலிகளை சரணடையச் சொன்ன நபர்களில் ப.சிதம்பரமும் அடங்குகிறார்.

கலைஞர் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கும்போது, பறந்துவந்து அதனை முடிவுக்குக் கொன்டுவந்த சிதம்பரம் அவர்கள், இலங்கையில் உடனடிப் போர் நிறுத்தம் வந்துவிட்டதைப்போல பேசியதும் நாம் அறிவோம். உங்களுக்கும் கலைஞர் மகள் கனிமொழிக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் நாம் நன்கு அறிவோம் ! இந்தச் சூழலில் வெறும் அறிக்கைகளை வெளியிட்டு, புகழைச் சம்பாத்திக்க நினைக்காமல் ஈழத் தமிழர்களுக்கு உங்களால் உதவமுடியுமா எனப் பாருங்கள். எமது இனத்தின் விடுதலைக்கு உரம் சேர்க்கமுடியுமா எனச் சிந்தியுங்கள்.

வார்த்தைகளோடு விளையாடும் நீங்கள்.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள்.

உங்கள் மனதை நான் ஏதேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்

இங்கணம்

தமிழரசு


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 3768

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக