சென்னை, அக். 3: அதிமுகவுடன் கூட்டணி உறவைத் தொடர்வது குறித்து பாமக நிர்வாகக் குழுவில் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
திண்டிவனத்தில் கடந்த 2004-ம் ஆண்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உறவினர் கொலை செய்யப்பட்ட வழக்கில், எங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை.
ஈ, எறும்புக்குக் கூட எங்களது குடும்பத்தினர் கெடுதல் நினைத்தது இல்லை. தினமும் மக்களின் நன்மைக்காகவே நான் தியானம் செய்கிறேன். நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கைச் சட்டப்படி சந்திக்கத் தயாராக உள்ளோம்.
எனினும், இந்த வழக்கு குறித்து பாமக நிர்வாகக் குழுவில் விவாதித்து முடிவு செய்யப்படும்.
இந்த வழக்கைத் திரும்பப் பெறுவது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, பாமக தலைவர் ஜி.கே. மணி சந்தித்தது உண்மை. ஆனால், இக் கோரிக்கையை ஜெயலலிதா மறுத்ததாக வெளிவந்தத் தகவல்கள் உண்மை அல்ல.
அதிமுக-பாமக கட்சிகளிடையேயான கூட்டணி உறவு குறித்தும் நிர்வாகக் குழுவில் முடிவு செய்யப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு: உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு, நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பாமக போட்டியிடாது என ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இத் தேர்தலில் போட்டிடும் அதிமுகவுக்கு, பாமக ஆதரவு அளிக்கும்.
இலங்கைத் துணைத் தூதர் தேவை இல்லை: சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் வேவு பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய தூதரகம் இங்கு தேவை இல்லை. இருந்தாலும் அதை நாம் வெளியேற்ற முடியாது. ஏனெனில், இதுகுறித்து முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக மாநில சுயாட்சிக் குறித்து நாம் பேசி வருகிறோம். ஆனால், அதில் எவ்விதப் பலனும் இல்லை என்றார் ராமதாஸ்.
இராமதாசு தன்னை வன்னியராக மட்டும் கருதினால் அரசியல் முகமூடியைக் கழற்றி எறிந்துவிட்டு வன்னியருக்காகப் பாடுபட வேண்டும். தமிழ் நல நாடியாகச் செயல்பட விரும்பினால் வன்னியத்தைத் தூக்கி எறிய வேண்டும். இவ்வாறில்லாமல் பதவிச் செல்வாக்கை மட்டுமே நம்பி அரசியலில் நிலைக்க விரும்பினால் அவர் எக் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் இதயக் கூட்டணியில் இடம் பெற மாட்டார்.
அவரது தமிழ்ப்பணி தழைத்தோங்க விரும்பும்
இலக்குவனார் திருவள்ளுவன்
10/4/2009 4:03:00 AM