புதன், 2 செப்டம்பர், 2009

இலங்கையில் மனித உரிமை மீறல்: ஐ.நா. கவலை



நியூயார்க், செப். 1: இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகவும் கவலை தரக் கூடியது என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. இதேபோல, இலங்கை ராணுவத்தினரால் சித்ரவதை செய்யப்பட்டு, தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது தொடர்பாக பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விடியோ காட்சியும் மிகுந்த கவலை அளிப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஒகாபே நியூயார்க்கில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் நடைபெற்றுள்ள போர்க் குற்றங்கள் உள்பட கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் ஐ.நா.வுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. தங்களிடம் பிடிபட்ட தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கியால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான விடியோ காட்சியை பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சி கடந்த வாரம் ஒளிபரப்பியது. இந்த விடியோ காட்சியின் உண்மைத்தன்மை இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் அண்மையில் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்த போது, மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என இலங்கையிடம் வலியுறுத்தினார். அவரது அந்தப் பயணத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பல்வேறு வாக்குறுதிகளை இலங்கை அரசு குறிப்பிட்டிருந்தது. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை அறிய இலங்கையுடன் ஐ.நா. தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளது என்றார் மேரி ஒகாபே.
கருத்துக்கள்

கவலைப்படுவதாக நாடமாடுவதால் என்ன பயன்? நூறாயிரக்கணக்கான உயிர்களைத்தான் கொடூரமான முறையில் பறித்து விட்டீர்களே! இனியேனும் அல்லலுக்கும் இன்னலுக்கும் கொடுமைகளுக்கும் நலிவிற்கும் உறுப்புப் பறிப்புகளுக்கும் உயிர்ப் பறிப்புகளுக்கும் ஆளாகும் எஞ்சிய தமிழர்களையாவது காப்பாற்ற ஐ.நா.வின் பன்னாட்டுப் படையை அனுப்பி வையுங்கள். பான்.கி.மூன் முதலான மூத்த பொறுப்பாளர்களைப் பணி நீக்கம் செய்து போர்க்குற்றவாளிகளாக ஆக்குங்கள். உலகம உங்களை மன்னிக்கும். இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2009 4:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக