திங்கள், 31 ஆகஸ்ட், 2009

வவுனியா தமிழ் மாணவர் ஒன்றியம் என்ற அமைப்பின் அறிக்கை
பிரசுரித்த திகதி : 30 Aug 2009

வவுனியா தமிழ் மாணவர் அமைப்பு என்றழைக்கப்படும் ஒரு அமைப்பால் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனைச் சுயாதீனமாக உறுதிசெய்யமுடியவில்லை. அத்தோடு பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்கள் தம்மை அடையாளப்படுத்த விரும்பவில்லை எனத் தெரிவித்து இந்த ஊடக அறிக்கையை அதிர்வு இணையத்தளத்திற்கு அனுப்பியுள்ளனர்.

--------------------------------------------------------------------------------------------------------

தமிழ் மாணவர் ஒன்றியம்
வன்னி மாவட்டம்
வவுனியா

30-08-009

வெலிக்கடைச்சிறையில் தமிழ் அரசியல் கைதியின் மரணம் தொடர்பாக நீதி வேண்டும்...

கடந்த 26-08௨009 அன்று சின்னையா தேவேந்திரன்(30) என்ற தமிழ் அரசியல் கைதி இயற்கை மரணம் அடைந்துள்ளதாக வட்டுக்கோட்டையில் வசிக்கும் அவரது மனைவிக்கு வெலிக்கடை சிறைச்சாலை நிர்வாகத்தினரால் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தேவேந்திரனின் மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளதா அவரது மனைவி தெரிவித்துள்ளார். அத்துள்ளடன் வெலிக்கடைச்சிறையில் உள்ள சக அரசியல் கைதிகளும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தேவேந்திரன் இறப்பு தொடர்பாக உரிய நீதி விசாரணை நடாத்தப்படல் வேண்டும்.

அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உள்ளது. காலில் சிறு கட்டி உள்ளது என்று அதற்கு சிகிச்சை வழங்க வேண்டும் என்றே அவர் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு எந்த சுகயீனமும் அவருக்கு காணப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் காலில் இருந்த சிறு கட்டி எப்படி மரணம் சம்பவிக்க காரணமானது என்பது பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்திற்கான முழுப் பொறுப்பினையும் இலங்கை அரசாங்கமே ஏற்க வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழ் அரசியல் கைதிகளாலும்; மற்றும் பொது அமைப்புக்களிடம் இருந்தும் விடுக்கப்பட்டுவரும் நிலையில் இக் கொலை இடம் பெற்றுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளிடம் இருந்து தமது விடுதலை தொடர்பான அழுத்தங்கள் ஏற்படுவதனை தவிர்க்கும் நோக்கில் கைதிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையாக கூட தேவேந்திரன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் உள்ளன. தேவேந்திரன் அவர்களின் சுகவீனத்திற்காக தவறான மருந்துகள் ஏதாவது வேண்டுமென்றே கொடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது அவருக்கான சிகிச்சை உரிய முறையில் அளிக்கப்படாமல் அவர் இறப்பதற்கு விடப்பட்டிருக்கலாம். சிறைச்சாலைகளில் உள்ள ஆண் பெண் கைதிகளுக்கு உரிய சிகிச்சை வசதிகள் சிறைச்சாலை அதிகாரிகளால் வழங்கப்படுவதில்லை என்பது பலருக்கும் தெரியாத விடயமாகும்.

அடிப்படை வசதிகள் அற்ற சிறைச்சாலை மருத்துவ மனையிலேயே கொடூரமான சூழ்நிலையில் சிகிச்சைகள் வழங்கப்படுவதே வழமையாக உள்ளது.

கடந்த காலத்திலும் சிறைச்சாலைகளில் இவ்வாறான கொடூரமான படுகொலைகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இடம் பெற்றுள்ள தேவேந்திரனின் மரணம் தொடர்பாக உரிய நீதி விசாரணைகள் நடாத்தப்படாவிட்டால் ஏனைய கைதிகளும் இவ்வாறு படுகொலை செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

இலங்கையில் தற்போது 10000 திற்கும் அதிகமானோர் அரசியல் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள நிலையில் கைதிகள் விடயத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட மனித உரிமை அமைப்புக்கள் அனைத்தும் உரிய கரிசனை எடுத்து விரைவாக செயற்பட்டு கைதிகளின் மனித உரிமைகள் நிலைமை சர்வதேச தரத்தில் இருப்பதனை உறுதிப்படுத்தவும் நீண்காலமாக நீதி விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கும் அனைத்துக் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகின்றோம்.

இவ்விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அதிக அக்கறை எடுத்து எங்கள் உறவுகளை காக்க நடவடிக்கை எடுக்கும் படி வேண்டுகின்றோம்.
நன்றி

தலைவர்
தமிழ் மாணவர் ஒன்றியம்
வன்னி மாவட்டம்
வவுனியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக