செவ்வாய், 1 செப்டம்பர், 2009

இலங்கையில் சீனத் துறைமுகம்; இந்தியாவுக்குப் பேராபத்து: நெடுமாறன் தகவல்



பரமக்குடி, ஆக. 31: இலங்கையில் சர்வதேச துறைமுகத்தை நிறுவி வருகிறது சீனா. இதனால் இந்தியாவுக்கு பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் எச்சரித்தார்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நெடுமாறன் பேசியது:
மன்னார் வளைகுடா படுகையில் பெட்ரோல் எடுக்கும் உரிமையை சீனாவிடம் கொடுத்து விட்டது இலங்கை. இந்திய தென்பகுதியில் பாதுகாப்பு கேடயமாக இருந்த இலங்கை, இப்போது சீனாவுக்கு எல்லா ராணுவத் தொழிற்சாலைக்கும் அனுமதி அளித்து விட்டது. இது இந்தியாவுக்கு பேராபத்து.
பிரபாகரன் பற்றி பலவிதமான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் பிரபாகரன் நன்றாக பத்திரமாக இருக்கிறார். உலக அளவில் வாழும் 9 கோடி தமிழர்களும் ஒன்றுகூடி மீண்டும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் முன்னெடுத்து போரிட வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
ஈழத் தமிழர் படுகொலையில், சர்வதேச அரங்கில் தமிழக முதல்வர் கருணாநிதி முதல் குற்றவாளி, இரண்டாவது குற்றவாளி பிரதமர் மன்மோகன் சிங், மூன்றாவது குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபட்ச. சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி இவர்களை குற்றவாளிகளாக நிரூபிக்காமல் விடமாட்டோம் என்றார் நெடுமாறன்.

கருத்துக்கள்

நம்பிக்கையே வாழ்க்கை. இந்தியத் தென்பகுதி நலனுக்காகத் தமிழ் ஈழ இறையாண்மை காக்கப்படவேண்டும்; போற்றப் பட வேண்டும்; பேணப்பட வேண்டும். இனியேனும் விழிக்கட்டும் இந்தியா! வல்லரசு ஆசையை விட்டு விட்டு நல்லரசாக மாறட்டும்! சீனா, பாக்., சிங்கள அரசுகளிடமிருந்து அரசியல் சூழ்திறனில் ஒரு பகுதியையாவது பெறட்டும்! இந்திய இறையாண்மை காக்கப்படத் தமிழ் ஈழம் மலரட்டும்! வெல்லட்டும்! தமிழ்த் தேசிய ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் தலைமையில் உருவாகும் ஈழ-இந்திய உறவு நிலைக்கட்டும்! போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதன் மூலம் இனி யெங்கும் பேரழிவு அவலம் தலைகாட்டாது இருக்கட்டும்! உயிர்கள் உரிமை எங்கும் ஓங்கட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/1/2009 3:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக