புதன், 2 செப்டம்பர், 2009

மெழுகு குலையாத பழங்கள்



வெகு நாட்களுக்கு முன் நாகர்கோவில் செல்லும் வழியில் மணிமேடை சந்திப்பில் காலை வேளையில் அவ் வழியாகச் செல்லும்போது அங்குள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் கூடைகூடையாக ஆப்பிள் பழங்களும் ஆரஞ்சுப் பழங்களும் இறங்கும். பழங்களெல்லாம் பாதுகாப்பாய் வைக்கோலால் பொதியப்பட்டிருக்கும். மொத்த விற்பனையாளர் அந்தப் பழங்களை இறக்கி, சில்லறை விற்பனையாளர்களுக்கு வினியோகித்துக் கொண்டிருப்பார்.
அன்று நாம் பார்த்த பழங்கள் மெருகு குலையாதவை. இன்றைய பழங்கள் மெழுகு குலையாதவை. அறிவியலும் தொழில்நுட்பமும் நன்மையோடு தீமையையும் செய்து கொண்டிருக்கின்றன.
இன்று பழம் விளைகிற ஊரில் பழத்தை வாங்க முடியாத அளவுக்கு விலை. விளைகிற ஊரிலிருந்து பழங்கள் வாகனங்கள், ரயில், விமானமென ஆயிரக்கணக்கான மைல் தூரங்களைக் கடந்து உலகின் எந்த மூலைக்கோ பயணப்படுகிறது.
வழக்கமாக அமெரிக்கா, தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஆப்பிள், ஆரஞ்சு, டிராகன், கிவி போன்ற பழங்கள் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன.
அந்தப் பழம் கெட்டுப் போகாமல் அது பயணப்படும் காலத்தையும் கால நிலையையும் தாங்கிக் கொள்ளும் விதமாக அது பதப்படுத்தப்படுகிறது.
குறிப்பாக பார்க்கப் பளபளப்பாக இருக்கும் விலை உயர்ந்த ஆப்பிள் பழங்கள் ரசாயன மெழுகால் பூசப்பட்டு பொதியப்பட்டவை. கையால் அப்பழத்தைச் சுரண்டிப் பார்த்தாலே அந்தப் பழத்திலிருந்து மெழுகு உதிர்வதைக் காணலாம்.
பெரும்பாலானவர்கள் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களின் பளபளப்பில் அதுவே தரமான ஆப்பிளாகக் கருதி அதிக விலை கொடுத்து வாங்கிவிடுகின்றனர். அந்த ஆப்பிள் பழத்தில் பூசப்பட்டிருக்கும் மெழுகு இயற்கைத் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட உண்ணத் தகுந்தவையா, ரசாயனப் பூச்சா என யாராலும் பகுத்தறிய இயல்வதில்லை.
ரசாயனப் பூச்சு மெழுகும் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பது குறித்த முறையான ஆய்வும் இல்லை. மக்களுக்கும் அது குறித்த போதுமான விழிப்புணர்வும் இல்லை.
பழங்கள் சாதாரணமாக நான்கு வகைகளில் மெழுகு பூசப்படுகின்றன. முதலாவது முறையில் பழங்களை சூடான பாரஃபின் மெழுகில் முக்கி எடுப்பார்கள். இந்த முறையில் பழத்தில் மெழுகின் பூச்சு அதிக அளவில் காணப்படும்.
இரண்டாவது முறையில் விரைந்து சுழலும் தூரிகைகளின் மூலமாக பழத்தில் மெழுகு அழுத்திப் பூசப்படும்.
மூன்றாவது முறை தெளிப்பு முறையாகும். இதில் உருகிய மெழுகை பழத்தின் மேல் தெளித்து தூரிகையால் தடவி, தேவையான திடத்துக்கு கொண்டு வருவார்கள்.
நான்காவது முறையில் பழங்களை நன்றாகக் கழுவி உலர்வதற்கு முன் குறிப்பிட்ட அடர்த்தியுள்ள மெழுகு திரவக் கலவையில் முக்கி எடுப்பர். அவற்றைப் பெட்டிகளில் அடுக்கும் முன் காயவைப்பர்.
சுத்தப்படுத்தப்பட்ட மெழுகானது சுவையற்றது, மணமற்றது, விஷமற்றது. ஆனால், இந்தப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கே உரிய மெழுகைத்தான் இந்த வணிக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றனவா என்றால் பெரும்பாலும் இல்லை.
பழங்களுக்கு மெழுகு பூச்சிடுவதால் வணிகர்களுக்குச் சாதகமான அம்சங்கள் நிறைய இருக்கின்றன. மெழுகிடுவதால் பழங்களின் எடைக்குறைவைத் தவிர்க்க இயலும்.
பளபளப்பான தோற்றம், பழத்தின் இளமையைக் கூட்டுதல், பழத்தின் நீர்மம் ஆவியாகாமலும் பழம் சுருங்கிவிடாமலும் தடுத்தல், பழத்தின் பருமனைப் பெருக்கிக் காட்டுதல், பூச்சிகளிலிருந்தும் மற்ற காரணங்களாலும் பழம் பழுதடையாமல் காத்தல் என பல அம்சங்கள் அவர்களை இந்த மெழுகிடும் வேலையைச் செய்விக்கின்றன.
உடலுக்குக் கெடுதல் விளைவிக்காத பூச்சிடத்தகுந்த சாதனங்கள் விலை அதிகமானவை. அதனால் தரங்குறைந்த மெழுகுகளால் மெழுகப்பட்ட பழங்கள் பல பெரிய நிறுவனங்களின் அலமாரிகளை பளபளப்புடன் அலங்கரிக்கின்றன. அந்தப் பழங்களுக்கு மெழுகோடு ஆஸ்திரேலிய, அமெரிக்கப் பெயர்களும் பெருமையுடன் சூட்டப்படுகின்றன.
மெழுகிடப்பட்ட இந்தப் பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு தொடர்புடைய நோய்களுக்கு வழிவகுப்பதோடு, புற்று நோய்க்குக்கூடக் காரணமாகிவிடும் என்ற மக்களின் அச்சத்துக்கு வலுவான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
இன்னொரு பக்கம் கார்பைடு கற்களால் செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைத்து விற்கப்படுகின்றன. பணமே முக்கியமாகிவிட்டது. நாட்டின் ஆரோக்கியத்தைப் பற்றி எவருக்கும் அக்கறை இல்லை.
அந்தந்த ஊரில் விளையும் கொய்யா, மாங்காய், பப்பாளி, வாழை, திராட்சை போன்றவற்றிலேயே நமது ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் உள்ளன. அதைப் பறித்த குறைந்த கால அளவுக்குள் அந்தந்த ஊர் மக்களும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் உட்கொள்ளலாம்.
பழங்கள் குளிர்பதனப் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு விமானங்களில் பயணப்படுவதால் அதிக அளவில் கரியமிலவாயு காற்று மண்டலத்தில் வெளியேற்றப்படுகிறதாம்.
சாலை, ரயில், கப்பல் போக்குவரத்தைவிட பழங்களின் விமானப்பயணத்தால் காற்று அதிக அளவில் மாசுபட்டு சுற்றுச்சூழலும் சீர்கெட்டு வருகிறதாம்.
ஒரு கிலோ ஆப்பிள் 6,000 மைல்களைக் கடக்கிறபோது, விமானப் பயணத்தில் 10.6 கிலோ கரியமிலவாயுவும், கப்பல் வழியாக வரும்போது 1.2 கிலோவும், ரயில் வழியாக வரும்போது 0.2 கிலோவும், சாலை வழியாக வரும்போது 2.6 கிலோ கரியமிலவாயுவை காற்று மண்டலத்தில் கக்குகிறதாம்.
இப்படி ஆறாயிரம் மைல்கள் கடந்து வரும் ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் காற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம் அதன் மேல் பொதிந்திருக்கும் ரசாயனப் பூச்சால் வயிற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம்.
இந்நிலையில் நாகரிக உலகத்தைப் பார்த்து ஆப்பிளும் மெழுகைப்பூசி தன் அழகை மெருகேற்றிக் கொண்டதோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக