புலிகள் இயக்கத்தை மீளவும் கட்டியெழுப்பக்கூடிய உறுப்பினர்கள் இன்னமும் உள்ளனர் |
பிரசுரித்த திகதி : 31 Aug 2009 |
முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் இடம்பெற்றபோது விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பற்றாக்குறை இருந்திருக்கலாம், ஆனால் நன்கு திட்டமிடப்பட்டு சில நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக சர்வதேச பாதுகாப்பிற்கான கொள்கை மையம் இன்று கருத்து வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு மீளவும் கட்டியெழுப்பப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், அவர்கள் விரைவில் இராணுவத்திற்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்தக்கூடும் எனவும் அந்த மையம் எச்சரித்துள்ளது. இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் சில முக்கிய நபர்கள் தப்பிச் சென்றதாகவும், அவர்களே புலிகள் அமைப்பை மீளவும் கட்டியெழுப்ப முனைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புலிகள் தமது உறுப்பினர் தொடர்பான ஆவணங்களை முள்ளிவாய்க்காலில் வைத்து எரித்திருப்பதாகக் கூறப்படுவதும், இலங்கை இராணுவம் இதுவரை புலிகளின் உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய கோவையை கைப்பற்றவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. புலிகள் இறுதிவரை சில ஆவணங்களை தம்முடன் எடுத்துச் சென்றதாகவும், பின்னர் அவை மே16 இல் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட முன்னர், சுமார் 1 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் அவர்கள் முடங்கியபோது, பல நேர்த்தியான திட்டங்கள் தலைமையினால் போடப்பட்டதாகவும் தெரிவிக்கிறது சர்வதேச பாதுகாப்பிற்கான கொள்கை மையம். இதன் காரணமாகவே இராணுவத்தினர் குழப்பமடைந்துள்ளதாகவும், புலிகளில் யார்யார் இறந்துள்ளனர், யார் தமது கட்டுப்பாட்டில் உள்ளனர் மற்றும் தடுப்புமுகாமில் இருக்கும் விடுதலை புலிகள் யார் என்பது குறித்து தகவல் சேகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இலங்கை அரசாங்கம் தடுப்புமுகாமில் உள்ள மக்களை வெளியே அனுமதிக்காமல் இருக்க, இப்படியான தகவல்களை வெளியிட்டு ஒரு பரப்புரையை மேற்கொள்ளலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. போர் முடிவுற்றுப் பல நாட்கள் ஆகியுள்ள நிலையில் சர்வதேச பாதுகாப்பிற்கான கொள்கை மையம் இவ்வாறு ஒரு அறிவித்தலை விடுவது சந்தேகமாக உள்ளதென, ஆராய்வாளர்கள் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்தனர். |
செவ்வாய், 1 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக