செவ்வாய், 1 செப்டம்பர், 2009

தொழிற்கல்வி பாடப் பிரிவில் மாற்றம்:
கேள்விக்குறியாகும் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலம்



மதுரை, ஆக. 31: தொழிற் கல்விப் பாடப் பிரிவில் உள்ள "கணக்குப் பதிவியலும் தணிக்கையும்' உள்ளிட்ட சில பாடப் பிரிவுகளை பொதுப் பிரிவுக்கு மாற்றம் செய்யும் கல்வித் துறையின் நடவடிக்கையால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பரவலாக புகார் எழுந்துள்ளது.


தமிழகத்தில் 1978-ம் ஆண்டு பள்ளிக் கல்வியில் மேல்நிலைப் பிரிவு கொண்டுவரப்பட்டபோது பொதுக்கல்வி, தொழிற்கல்வி என இரு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

தொழிற்கல்வியில் 6 பெரும் பிரிவுகளும், 67 உட்பிரிவுகளும் தொடங்கப்பட்டன. மனையியல், விவசாயம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், வணிகமும் வியாபாரமும், மருத்துவம், புகைப்படமும் இசையும் என 6 பெரும் பிரிவுகள் போக, 67 உட்பிரிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கிராமப்புற ஏழை மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் 10-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றபோதிலும், படிப்பை இடைநிறுத்திவிடாமல் தடுக்கவும், சுயவேலைவாய்ப்பு பெற்றிட வேண்டும் என்ற உயர் நோக்கிலும் இந்த தொழிற்கல்வி பிரிவு ஏற்படுத்தப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.
தமிழகத்தில் சுமார் 1,631 பள்ளிகளில் செயல்பட்டுவரும் தொழிற்கல்வி பிரிவுகளில் சுமார் 1.60 லட்சம் மாணவ, மாணவியர் பயின்று வருதாகவும், இதில் 50 சதவீதத்திற்கு மேல் அதாவது சுமார் 1 லட்சம் மாணவர்கள் "கணக்குப் பதிவியலும் தணிக்கையும் மற்றும் வணிகவியல்' பாடப் பிரிவில் படித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிற்கல்விப் பிரிவை மேம்படுத்திட பள்ளிக் கல்வித்துறை முன்னாள் இயக்குநர் எச்.எஸ்.எஸ். லாரன்ஸ் தலைமையில் 11.06.1993-ல் ஏற்படுத்தப்பட்ட ஓர் உயர்நிலைக் குழு, அரசுக்கு அளித்த ஆய்வறிக்கையில் தொழிற் கல்வியை சீரமைக்க பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.

அதன்பின்னர் 12.6.2007-ல் திட்டக் குழு உறுப்பினர்- செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஓர் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.


இக்குழுவானது மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ள தொழிற்கல்விப் பிரிவுகளைப் பள்ளிகளில் இருந்து நீக்கிடவும், தேவையான புதிய மாற்றங்களைச் செய்திடவும், நடைமுறையில் உள்ள பாடங்களைச் சீரமைக்கத் தேவையான தொழில்நுட்பத்தை ஏற்படுத்தவும் ஆலோசித்துள்ளது.

இந்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை இன்னும் வெளியிடப்படாத நிலையில், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும், நகர்ப்புற பகுதி பள்ளிகளில் 15 மாணவர்களுக்கும் குறைவான சேர்க்கை உள்ள தொழிற் கல்விப் பாடப் பிரிவை நீக்கிட அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், 66 பள்ளிகளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.


தற்போது ஆடிட்டிங், காப்பீடு, வங்கி சார்ந்த நிதித் துறைகளில் வேலைவாய்ப்பை அளிக்கக் கூடியதாக உள்ள "கணக்குப் பதிவியலும் தணிக்கையும்' என்ற பிரிவை பொதுப் பிரிவுக்கு மாற்றப் போவதாக வெளியான செய்திகள், இப் பிரிவு ஆசிரியர்களையும், மாணவர்களையும் குழப்பமடையச் செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் சங்கத் தலைவர் எம்.அரியநாயகம் கூறியதாவது:

கடந்தாண்டு "கணக்குப் பதிவியலும் தணிக்கையும்' பாடப் பிரிவை கட்டாயம் 100 பள்ளிகளில் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இப் பிரிவை பொதுப் பிரிவுக்கு மாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது மாணவர்களைப் பாதிக்கும் செயல். மேலும், தொழிற் பிரிவு ஆசிரியர்களும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது.

பொதுப் பிரிவுக்கு மாற்றுவதால் நன்கு படிக்கும் மாணவர்களுடன் குறைந்த மதிப்பெண் பெறும் ஏழை மாணவர்கள் போட்டி போட முடியாத சூழல் ஏற்படும்.


இதனால், தேர்ச்சி விழுக்காடு குறைவதுடன் அரசு வழங்கும் சலுகைகளையும் இழந்து இடஒதுக்கீட்டையும் பெற முடியாமல் அவர்கள் கல்வி கற்கும் நிலை கேள்விக் குறியாக மாறிவிடும்.

இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கணினிப் பிரிவில் "அக்கவுண்டிங் அண்ட் டேலி' எனும் பாடப் பிரிவைச் சேர்த்து கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.
ஆகவே, "வணிகவியல் வியாபாரம்' என்ற தொழிற்கல்விப் பாடப் பிரிவில் உள்ள கணக்குப் பதிவியலும் மற்றும் தணிக்கையியல் பாடத் திட்டத்தில் கணினி சார்ந்த பாடத் திட்டத்தை சேர்த்து நடைமுறைப்படுத்தி, தொழிற்கல்வியை மேம்படுத்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இதற்கு இப் பாடப் பிரிவை ஏற்கெனவே உள்ள தொழிற்கல்வி பிரிவிலேயே தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும்.
ஒரு லட்சம் மாணவர்கள் விரும்பிப் படிக்கும் "கணக்குப் பதிவியலும் தணிக்கையியலும்' என்ற பாடப் பிரிவை கிராம ஏழை, எளிய மாணவ, மாணவியர் நலன் கருதி அதைத் தொழிற் கல்வித் தலைப்பிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும். இதன் மூலம், 10-ம் வகுப்புடன் தனது படிப்பை ஏழை மாணவர்கள் நிறுத்திவிடாத சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் என்றும் என்றார் அவர்.

கருத்துக்கள்

நல்ல கருத்து. அரசு விழிப்புடன் இருந்து சிக்கலைத் தீர்க்கட்டும்! ஊரக மாணாக்கர்கள் வாழ்வில் ஒளி யேற்றட்டும்!பயன்பாட்டுக் கல்வியையே மாணாக்கர்க்கு அளிக்கட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/1/2009 3:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக