கூவம் நதிக் கரையில் ராஜஸ்தான் மாநிலத்தவரால் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள செராமிக் கலைப் பொருள்கள். ஈச்சங் குச்சிகள் மற்றும் பிரம்புகளால் செய்யப்பட்ட கை
சென்னை, செப். 1: சென்னை சேத்துப்பட்டில் கூவம் நதிக் கரையில் குடியிருக்கும் கைவினைஞர்களால் ஈச்சங் குச்சிகள் மூலம் பலவகை கலைப் பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. எழும்பூரிலிருந்து சேத்துப்பட்டு மேயர் ராமநாதன் சாலை வழியாக செல்வோர் அனைவரும் இடதுபுறம் உள்ள கூவம் நதிக் கரையை நோக்கி திரும்பாமல் இருக்க முடியாது. ஏனெனில் ஈச்ச மரக் குச்சிகளால் செய்யப்பட்ட ஏராளமான கலைப்பொருள்கள் அங்கு அடுக்கப்பட்டிருப்பதே அதற்கு காரணம். ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த 4 குடும்பங்கள் சுமார் 20 ஆண்டுகளாக சேத்துப்பட்டில் உள்ள கூவம் நதிக் கரையில் குடிசை போட்டு வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் ஈச்சங் குச்சி மற்றும் பிரம்பு கம்புகளைக் கொண்டு கைவினைப் பொருள்களை உருவாக்குவதாகும். ஈச்சங் குச்சிகளைப் பயன்படுத்தி மலர் கொத்து வைக்கும் கூடை, இரவு விளக்கு அலங்கார விளக்குகளை பொருத்தும் ஸ்டாண்ட், தட்டு மற்றும் விதவிதமான கூடைகள் ஆகியவற்றை செய்கின்றனர். பிரம்பு கம்புகளைப் பயன்படுத்தி ஊஞ்சல், நாற்காலி, உணவு மேசை, சோபா, டி.வி. ஸ்டாண்ட் உள்ளிட்ட பொருள்களை உருவாக்குகின்றனர். ஈச்சங் குச்சிகளை நெல்லூர் பகுதிகளில் உள்ள காடுகளுக்குச் சென்று சேகரித்து வருகின்றனர். பிரம்புகள் அசாம் மாநிலம் மற்றம் அந்தமான் தீவுகளிலிருந்தே கிடைக்கிறது. எனவே அங்கு சென்று நெல்லூர், சிதம்பரம், கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் பிரம்புகளை வாங்கி வருகின்றனர். அவர்களிடம் இருந்து இந்த கைவினைஞர்கள் சில்லறையாக பிரம்புகளை வாங்குகின்றனர். குடும்பத்திலுள்ள தம்பதி பிள்ளைகள் என அனைவரும் இந்த கலைப் பொருள்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். அங்கேயே செய்து, அங்கேயே விற்பனைக்காக பரப்பி வைக்கப்படும் இந்தப் பொருள்கள் அவ்வழியே செல்லும் பொதுமக்களை பெரிதும் ஈர்க்கிறது. இது குறித்து அத்தொழிலில் ஈடுபட்டுள்ள சு. நாகராஜன் கூறியதாவது: இது எங்கள் பரம்பரை தொழில். ஒவ்வொரு கலைப்பொருளையும் உருவாக்கி முடிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. அதே பொருள் விற்பனை ஆகி காசாக மாறும்போது மகிழ்ச்சி மேலும் இரட்டிப்பாகும். சில நேரங்களில் அதிக விற்பனை நடக்கும். வேறு சில நேரங்களில் அறவே விற்பனை இல்லாமல் கஷ்டப்படுவோம். எனினும் வேலை செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருக்க மாட்டோம். விற்பனை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தால்தான் எங்களுக்கு திருப்தி. குச்சிகள் இருப்பு உள்ள வரை புதிய, புதிய பொருள்களை செய்து கொண்டே இருப்போம். குச்சிகள் தீர்ந்தவுடன் புதிய குச்சிகளை வெட்ட, காட்டுக்குப் புறப்பட்டு விடுவோம். விற்பனையை பொருத்தவரை வாழ்க்கையை தொடர்ந்து கஷ்டமின்றி நடத்தும் வகையில் நடைபெறுகிறது. எங்களுக்கு சில நிரந்தர வாடிக்கையாளர்களும் உள்ளனர் என்றார். இப்போது அதே இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இன்னொரு குடும்பத்தினரும் வந்து சேர்ந்து விட்டனர். அவர்கள் செராமிக் கலைப் பொருள்களை அங்கு விற்பனைக்காக வைத்துள்ளனர். துர்நாற்றம் வீசும் கூவம் நதிக் கரையில் அந்த இடம் மட்டும் ஒரு கலைக்கூடம் போல் காட்சியளிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக