வாஷிங்டன், செப். 1: இலங்கையில் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் பத்திரிகையாளர் ஜே.எஸ்.திசநாயகத்துக்கு அமெரிக்காவில் செயல்படும் 2 சர்வதேச அமைப்புகள் விருது வழங்குவதாக அறிவித்துள்ளன. ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசநாயகம் (45) தீவிரவாதத்தை ஆதரித்தது உறுதிப்படுத்தப்பட்டதால் 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி கொழும்பு உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான "நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு' என்ற பத்திரிகையில் கட்டுரை எழுதியதற்காக 2008 மார்ச் 7-ல் திசநாயகம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், துணிச்சலுடன் உண்மைகளை எழுதியதற்காக "பீட்டர் மெக்லர்' விருதுக்கு திசநாயகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாக "ரிப்போர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ்' (எல்லைகள் இல்லா செய்தியாளர்கள்) என்ற அமைப்பு திங்கள்கிழமை அறிவித்தது. அதேபோன்று, "கமிட்டி டு புரொடெக்ட் ஜர்னலிஸ்ட்' (பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு) என்ற அமைப்பும் திசநாயகத்துக்கு சர்வதேச பத்திரிகை சுதந்திர விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இலங்கையின் திசநாயகம் போன்றவர்கள் கைது செய்யப்பட்டது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலுக்கு வருந்தத்தக்க உதாரணம் என அமெரிக்க அதிபர் ஒபாமா உலக பத்திரிகைச் சுதந்திர நாளான மே 3-ம் தேதி உரையாற்றுகையில் கூறியது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்
தினமணி வாசகர்கள் சார்பாகப் பன்னாட்டு விருதுகள் பெற்ற இதழாளர் வீரத்திரு திசைநாயகத்திற்குப் பாராட்டுகள்! இதழ் உரிமையையும் அதன் வழித் தமிழர்களுக்கு எதிரான கொலைக் கொடுமைகளுக்கான எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்தும் விருதுகள் வழங்கிய எல்லையிலா இதழாளர் அமைப்பையும் இதழாளர் பாதுகாப்புக் குழுவையும் நன்றியுடன் பாராட்டுகிறோம்! விரைவில் அவரும் சிங்களக் கொட்டடியில் வதைபடும் பிற இதழாளர்களும் விடுதலையாகப் பன்னாட்டு அழுத்தம் மூலம் நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம். ஓங்குக இதழாளர்கள் உரிமை! வெல்க தமிழ் ஈழம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2009 4:26:00 AM
9/2/2009 4:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *