மதுரை, ஆக. 31 : தமிழகத்தின் பண்டைய வரலாற்று ஆவணங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று வ.உ.சி. கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் வலியுறுத்தினார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 4-வது புத்தகத் திருவிழாவின் 3-ம் நாளான திங்கள்கிழமை, "புதிய வரலாற்று ஆவணங்களைத் தேடி' எனும் தலைப்பில் அவர் பேசியதாவது:
ஒரு நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கு கல்வெட்டு, செப்புப் பட்டயம், வெளிநாட்டுப் பயணிகள் எழுதிய குறிப்புகள், சிற்பங்கள், பழைய ஓவியங்கள் ஆகியவை அடிப்படைக் கருவியாக உள்ளன. இக்கருத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது.
அந்த வகையில், 2 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தமிழக வரலாற்றின் பழமையான ஆவணங்கள் நம்மால் பாதுகாக்கப்படவில்லை.
தமிழகத்தில் தஞ்சை நாயக்கர், செஞ்சி நாயக்கர், மதுரை நாயக்கர் மன்னர்கள் ஆட்சி செய்தாலும், மதுரை நாயக்கர் வரலாறு மட்டுமே பரவலாகப் பேசப்படுகிறது.
அக்காலத்தில் தமிழகத்தில் கத்தோலிக்க மதம் பரவிய நிலையில், சேசு சபை துறவிகள் சமயத்தை பரப்புவதற்காக ஐரோப்பாவில் உள்ள போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வந்தனர்.
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் ஆட்சியின்போது பிரமலைக் கள்ளர் சமூகத்தை ஒடுக்குவதற்காக மதுரைவீரனை அவர் அழைத்து வந்ததாக செய்தி உண்டு.
சாலியர் என்ற சேசு சபைத் துறையின் 16 பக்கம் கொண்ட ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட ஸ்பானிஷ் மொழியிலான ஒரு கடிதத்தில் இத் தகவல் உள்ளது.
இதுபோன்ற நமது வரலாறு குறித்த பல விஷயங்கள் பிரெஞ்சுமொழி, போர்த்துக்கீசிய மொழியில் உள்ளன. நாம் மொழியின் மீது அக்கறை செலுத்துவதில்லை. அதனால்தான் நமக்குத் தமிழகத்தின் வரலாறு குறித்த பல ஆவணங்கள் இருந்தும் நாம் பயன்படுத்தவில்லை.
அரசு ரகசியம் பாதுகாக்கும் பொருட்டு மராட்டிய மொழியில் உள்ள மோடி எழுத்து முறையில் பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான மறைந்த வ.அய்.சுப்பிரமணியன், தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள மோடி மொழியில் இருந்த ஓலைச்சுவடிகளை அம்மொழி அறிந்தவர்களைக் கொண்டு தமிழ்ப்பல்கலைக்கழகம் சார்பில் "மோடி ஆவணம்' எனும் தலைப்பில் மூன்று தொகுதிகளாக வெளியிட்டார். அதில், தமிழகத்தில் பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணி அதற்குப் பின்னர் தொடரப்படவில்லை.
புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும் என்று முழங்குவதுடன் நாம் நின்றுவிடுகிறோம். ஆனால், பல்வேறு நாடுகள் வரலாற்றுத் தேடல்கள் மூலம் ஆவணங்களைப் பாதுகாத்து பயன்படுத்துகின்றன. நமது வரலாறு குறித்த ஆவணம் எல்லாம் ஐரோப்பிய நாடுகளிலும், வட இந்தியாவிலும் பரவிக் கிடக்கிறது. இதை மீட்டெடுக்க நாம் அனைவரும் முயல வேண்டும் என்றார் அவர்.
அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் இணை ஆணையர் இராஜநாயகம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன், வணிக வரித்துறை துணை ஆணையர் பா.தேவேந்திரபூபதி உள்ளிட்ட பலர் பேசினர்.
முற்றிலும் உண்மை. எனினும் மத்திய மாநில அரசுகள் இதில் கருத்து செலுத்தாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. தமிழ்ப்பல்கலைக்கழகமும் பிற பல்கலைக்கழகங்களும் தன்னார்வத் தமிழ் அமைப்பினரும் இணைந்தும் முயன்றும் தமிழகப் பண்டைய வரலாற்று ஆவணத்தை மீட்டெடுக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன்
9/1/2009 3:21:00 AM