கோவை: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதுபற்றிய நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன, என்ற இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
3 மாதங்களுக்கு முன், புலிகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்ட தகவல் வெளியானபோது, 'இன்னும் சில நாட்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று புலிகளே அறிவிப்பார்கள்... சூழ்நிலை கருதி அப்படியொரு அறிக்கை வெளியாகும்!" என்று மதுரையில் இவர்தான் பேட்டி கொடுத்தார். அடுத்த சில தினங்களிலேயே அப்படியொரு அறிக்கையை செல்வராசா பத்மநாதன் வெளியிட்டார்.
இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம்,
எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்.
அவர் இறந்துவிட்டதாக செல்வராஜா பத்மநாதன் கூறியிருப்பதில் ஏதேனும் அரசியல் சூசகம் அடங்கியிருக்கலாம்.
பத்மநாபன் கைது முதற்கொண்டு பல விஷயங்களை நாங்கள் அப்படித்தான் கருதுகிறோம். தேசிய தலைவர் இறந்துவிட்டதாக எந்த தகவலும் எங்களுக்கு உறுதியாக, ஆதாரங்களுடன் கிடைக்கவில்லை. இலங்கை அரசு அதற்கான ஆதாரங்கள் எதையும் தரவுமில்லை.
நான் தமிழ்மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான். தேசிய தலைவர் உயிருடன் உள்ளாரா என்பதற்கு காலம் பதில் சொல்லும். தற்போதைய உடனடி தேவை அகதிகளாக உள்ள 3 லட்சம் மக்களை அங்கிருந்து காப்பாற்றி, அவர்களின் இடங்களில் குடியமர்த்துவதுதான்.
மற்றபடி தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு என்பது சுய அரசியல் நிர்ணய சபையுடன் கூடிய தமிழீழமே. ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்பது விடுதலைப் புலிகளின் கையில்தான் உள்ளது என்றார். |
| |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக