ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

ஐ.நா., குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்-உருத்திரகுமாரன்


தமிழர் படுகொலை காணொலி தொடர்பாக ஐ.நா., குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம்: வி.உருத்திரகுமாரன் உ
பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் - 4' காணொலி வெளியிட்ட கானொலி தொடர்பாக ஐக்கிய நாடுகளுக்கான சபை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியன நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் குரூரமாகப் படுகொலை செய்யப்படும் காணொலி பிரித்தானியாவின் 'சனல் - 4' நிறுவனத்தால் வெளியிடப்பட்டத்தை அடுத்து, 'இந்தியா ருடே' ஆங்கில வார ஏட்டுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது நேர்காணல் குறித்து 'இந்தியா ருடே' வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

சிறிலங்காப் படையினரால் மிகச் சாதாரணமாக மனிதத்துக்கு எதிரான பயங்கரக் குற்றம் இழைக்கப்பட்டிருப்பது தன்னை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக விடுதலைப் புலிகளின் மூத்த தலைவரான (செல்வராசா பத்மநாதனின் கைதுக்குப் பின்னர்) விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

பிடித்து வைக்கப்பட்டிருந்த 8 தமிழர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய காணொலி வெளியான பின்னர் முதல் தடவையாக அது குறித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இப்படி கூறியுள்ளார்.

எப்படி இருந்தாலும், நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் சிறிலங்கா அரசின் காட்டுமிராண்டித்தனமான ஈனச் செயல்கள் பகிரங்கமாக வெளிப்படுவது இது ஒன்றும் முதல் தடவையல்ல.

வாகரையில் அரச படையினரால் - சொல்லப்போனால் - தூக்கில் தொங்கவிட்டுக் கொலை செய்யப்பட்ட சிறுவர்களின் ஒளிப்படங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். படையினரால் மேற்கொள்ளப்பட்ட வன்புணர்ச்சியை மறைப்பதற்காக தமிழ்ப் பெண்ணின் பிரத்தியேக உறுப்புக்குள் குண்டை வைத்தும் வெடிக்கச் செய்திருக்கிறார்கள்.

இவற்றைவிடவும் பெருமளவான அட்டூழியங்கள் நடைபெற்றிருக்கலாம் என்றுதான் நாங்கள் அச்சப்படுகின்றோம். கடந்த 25 வருடங்களாக பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள் என்பதுடன் சட்டத்துக்குப் புறம்பாகக் கொலை செய்யப்பட்டும் இருக்கிறார்கள்.

என்ன ஒரு விடயம், இந்தச் சம்பவம் மட்டும் காணொலியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது என்றார் உருத்திரகுமாரன்.

ஜேர்மனியைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடவியலாளர்' அமைப்பு வெளியிட்ட குறிப்பிட்ட காணொலி சிறிலங்கா அரசுக்கு எதிரான சட்டபூர்வமான பரப்புரைக்குப் பயன்படுத்தப்படும் என உருத்திரகுமாரன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் சட்டப்பூர்வமான பரப்புரையில் நிச்சயமாக இந்தக் காணொலி ஒரு பகுதியாக பயன்படுத்தப்படும். இவ்வாறான வெளிப்படுத்துகைகள் அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியைத் தைக்கும் என நாம் நம்புகின்றோம்.

30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்ட பின்னரும் 3 லட்சம் மக்கள் ஏனையவர்களிடம் இருந்து முற்றாகப் பிரிக்கப்பட்டு தனித்து அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும் சிறிலங்காவானது சாதாரணமான ஓர் அரசாக இன்னும் நடத்தப்பட்டு வருவது எம்மைத் திகைக்க வைக்கிறது.

இந்தக் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்துவதில் அனைத்துலக சமூகம் கண்டுள்ள தோல்வியானது தமிழர்களுக்கு அனைத்துலகம் இழைத்த நம்பிக்கைத் துரோகத்தை மேலும் வலுப்படுத்துவது மட்டுமல்ல, சட்டம் ஒழுங்கைக் கேவலப்படுத்துவதுடன் ஐக்கிய நாடுகள் சபை போன்ற அனைத்துலக நிறுவனங்களின் நாணயத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற சட்டவாதிகள் இது தொடர்பில் சுயமான விசாரணைகளை நடத்துவார்கள் என்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு விடயத்தை எடுத்துச் சொல்லி, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரத்தைத் தாக்கல் செய்வதற்கான அனுமதியைப் பெறுவார்கள் எனவும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

நீதியை நோக்கிய அத்தகைய நடவடிக்கை எதற்கும் இந்தியாவின் ஆதரவு மிக முக்கியமானது என உருத்திரகுமாரன் மேலும் தெரிவித்தார்.

வடக்கு இலங்கையில் சிறிலங்கா அரசால் உருவாக்கப்பட்டுள்ள நாட்டுக்குள் இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குள் 3 லட்சம் தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அவர் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.

முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைப் பாதுகாப்பு குறித்து நாம் மிகவும் கவலை கொண்டுள்ளோம். அத்துடன் முன்னாள் போராளிகளின் நிலை பற்றித் தெரியவில்லை.

எந்தக் கணக்கு வழக்குகளும் இன்றி முகாம்களில் உள்ளவர்கள் பிடித்துச் செல்லப்படுவது அவர்கள் மோசமாக நடத்தப்படுவதற்கு அல்லது காணாமல் போகச் செய்யப்படுவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்திவிடும் என மனித உரிமைகள் காப்பகம் தெரிவித்திருக்கிறது. அந்த நிலையில் முகாம்களில் இருந்து நாளாந்தம் 4 தொடக்கம் 5 வரையான போராளிச் சந்தேக நபர்கள் படையினரால் பிடிக்கப்படுவதாக ஜெனரல் சரத் பொன்சேகா கூறியிருக்கிறார் என்றார் உருத்திரகுமாரன்.

விடுதலைப் புலிகளுடனான சிறிலங்கா அரசின் கடைசிக் கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துலக நியமங்களைத் தெளிவாக மீறியுள்ளன. அத்துடன், போர்க் குற்றங்களாகவும் இனப் படுகொலைகளாகவும் கணிக்கப்படக் கூடியவை என உருத்திரகுமாரன் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசினால் போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டன என்பதில் எந்தச் சந்தேகங்களும் கிடையாது. போரின் கடைசி 10 நாட்களுக்குள் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதை தனி ஒருவனால் எப்படி விபரிக்க முடியும்?

ஆயிரக்கணக்கான மக்களை அடியோடு கொன்று அழித்ததற்கு மேலாக 3 லட்சம் மக்களை மாதக்கணக்காகத் திட்டமிட்டு பட்டினி போட்டது சிறிலங்கா அரசு.

மருத்துவ நிலையங்கள் குண்டு வீச்சுக்களுக்கு உட்படுத்தப்பட்டன. மருத்துவமனைகள், வீடுகள், கோவில்கள் என்பவற்றின் மீது தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் காலவரையறை இன்றி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் ஜெனீவா பிரகடனத்தின் இனப்படுகொலை என்ற வரையறைக்குள் தெளிவாகப் பொருந்தி வரக்கூடியவை. அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து அவர்களது உள்நோக்கம் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்களை இல்லாது ஒழிப்பதுதான் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமான ஒன்றல்ல என உருத்திரகுமாரன் மேலும் கூறினார்.

போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது. தற்போது வெளியாகி உள்ள காணொலி குறித்தோ ஏனைய குற்றச்சாட்டுக்கள் குறித்தோ உள்நாட்டிலோ அல்லது அனைத்துலக ரீதியிலோ விசாரணைகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அது கூறிவருகின்றது.

வேறு எதனை இந்த அரசிடம் இருந்து எதிர்பார்க்க முடியும்? குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று காட்டுவதற்காகவே அவர்கள் உள்நாட்டு விசாரணைகளைக் கூட மேற்கொள்வதற்கு முன்வரவில்லை என்பதே உண்மையானது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக