சென்னை திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலை (1890).
அன்றுஇன்றைய சென்னையில் இருக்கும் மிகவும் பழமையான, ஐரோப்பியரின் வருகைக்கு முற்பட்ட இடங்களில் ஒன்று திருவல்லிக்கேணி. பார்த்தசாரதி சுவாமி ஆலயம் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இங்கே காணப்படும் கல்வெட்டு ஒன்று கி.பி. 808ல் நந்திவர்ம பல்லவர் இந்தக் கோயிலைச் செப்பனிட்டு விரிவுபடுத்திக் கட்டியதாகத் தெரிவிக்கிறது. திருவல்லிக்கேணியில் உள்ள இன்னொரு புராதன ஆலயம் 500 வருடத்துக்கும் மேற்பட்ட திருவட்டீஸ்வரர் கோவில்.பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு, ஆற்காடு நவாபுகளின் தலைமையிடமாக சேப்பாக்கம் மாறியது. இங்கே காணப்படும் முஸ்லிம் சமுதாயத்தினர் கோல்கொண்டாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. வாலாஜா நவாப் காலத்தில் 1795-ல் கட்டப்பட்டதுதான் திருவல்லிக்கேணி பெரிய மசூதி என்று அழைக்கப்படும் வாலாஜா மசூதி. இந்த மசூதியின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்தக் கட்டடத்தில் மரமோ இரும்போ உபயோகப்படுத்தப்படவில்லை என்பதுதான்.மசூதிக்கு அருகில் உள்ள ஹிந்து உயர்நிலைப் பள்ளி 1852-ல் திராவிடப் பாடசாலை என்று அழைக்கப்பட்டு வந்தது. 1897-ல்தான் இப்போதைய கட்டடம் கட்டப்பட்டது. இந்தப் பள்ளியில்தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சந்திரசேகர் படித்தார் என்பது திருவல்லிக்கேணியின் பெருமை!1750-ல் கிழக்கிந்தியக் கம்பெனி விலைக்கு வாங்கிய முதல் கிராமம் திருவல்லிக்கேணிதான். கோட்டைக்கு அருகில் இந்த கிராமம் இருந்ததாலும், மையப் பகுதிகளில் ஈஸ்வரன் கோவிலும், பெருமாள் கோவிலும் இருந்ததாலும், கீழ்நிலை அரசு அலுவலர்களின் குடியிருப்புப் பகுதியாக திருவல்லிக்கேணி திகழ்ந்தது. ஆற்காடு நவாபின் ஊழியர்களும் மசூதி மற்றும் நவாபின் அரண்மனையைச் சுற்றி பெருமளவில் குடியேறினார்கள். இப்போது கிருஷ்ணாம்பேட்டை இருக்கும் இடமும், திருவல்லிக்கேணியில் பெரும்பாலான இடங்களும் அப்போது வயல்வெளியாக இருந்தனவாம்.ஒரு காலத்தில் இன்றைய சேப்பாக்கம் முழுவதுமே ஆற்காடு நவாபுக்குச் சொந்தமானதாக இருந்தது. திப்பு சுல்தானுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டி 1801-ல் கர்னாடக நவாபின் ஆளுமைக்கு உள்பட்ட பகுதிகளை- சென்னையிலிருந்து நெல்லூர் வரை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்- பிரிட்டிஷார் கபளீகரம் செய்து கொண்டு விட்டனர். பெயருக்கு நவாபாக இருந்த குலாம் கெüஸ்கான் பகதூரும் 1855-ல் இறந்துவிட, சேப்பாக்கம் சொத்துகள் ஏலம் விடப்பட்டன. அத்தனையையும் அரசே வாங்கிக் கொண்டு விட்டது."ஆற்காடு நவாப்' என்கிற பெயரை வைத்துக் கொள்ளும் உரிமையுடன், அமீர் மகாலையும் நவாப் குடும்பத்துக்கு பிரிட்டிஷார் அளித்தனர். 1798-ல் கட்டப்பட்ட அமீர் மகால் 1876 வரை நவாப் குடும்பத்தினரால் பயன்படுத்தப்படவில்லை. அங்கே ராயப்பேட்டை காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. ஆற்காடு நவாப் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள ஷாதி மகாலில்தான் தங்கி வந்தார்.14 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்த அமீர் மகாலில் 600க்கும் அதிகமான ஆற்காடு நவாபின் உறவினர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கே இருக்கும் தர்பார் ஹால் மற்றும் பாங்க்வெட் ஹால் அந்த நாளைய நவாப் கலாசாரத்தின் எடுத்துக்காட்டாகவும், 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டடக் கலைக்கு உதாரணமாகவும் திகழ்கிறது.
ஆசிரியர்
இன்று
கருத்துக்கள்
கடந்த நூற்றாண்டு வரை கூட நம் தமிழ் மக்களின் அடிப்படைப் பண்பான விருந்தோம்பலுக்கு எடுத்துக் காட்டான திண்ணைகள் இருந்தமை போன்ற புதிய தகவல்கள் அடங்கிய அருமையான செய்திக் கட்டுரை. இவை தொகுக்கப்பட்டு நூலாக வெளி வரவேண்டும். தலைப்பைச் 'சென்னை நமது சென்னை' எனத் தமிழில் மாற்றுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/30/2009 2:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
8/30/2009 2:36:00 AM