சனி, 4 ஜூலை, 2009

இடம்பெயர்ந்தோர் பிரச்சினையை தீர்க்காவிட்டால்
அகதி முகாம்களில் இருந்தே
அடுத்த பிரபாகரன் உருவாகுவார்:
ஜே.வி.பி.
[வெள்ளிக்கிழமை, 03 யூலை 2009, 05:38 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் அகதி முகாம்களில் இருந்தே அடுத்த பிரபாகரன் உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக சிறிலங்கா அரசுக்கு அந்நாட்டின் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு இன்று ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காத அரசு, பேச்சுவார்த்தைகளிலேயே காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கின்றது எனவும் ஜே.வி.பி. குற்றம் சாட்டியிருக்கின்றது.

இதனால் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு கிடைத்துள்ள மிகவும் சிறந்த சந்தர்ப்பம் இழக்கப்பட்டு மீண்டும் பிரிவினையை நோக்கிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனவும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ரில்வின் சில்வா மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

"இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களின் நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. அரசின் தகவல்களின்படி இந்த முகாம்களில் சுமார் 3 லட்சம் மக்கள் உள்ளனர். அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு மற்றும் கழிவு அகற்றல் - சுகாதார வசதிகள் இங்கு போதுமானதாக இல்லை.

அரசியல் கட்சிகள் ஒன்றிணைவதால் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்திவிடமுடியாது. அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரே மேடையில் கொண்டுவருவதன் மூலமாக மட்டும் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்திவிட முடியாது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும். மக்கள் இடையே இருதரப்பு புரிந்துணர்வு அவசியம்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிப் பொருட்களை கொண்டுசென்று வழங்குவதற்காக ஜே.வி.பி. அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இடம்பெயர்ந்த மக்களுக்காக உணவுப் பொருட்களைச் சேகரித்து அனுப்புவதற்காக நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கும் அரசு அனுமதி வழங்கவில்லை" எனவும் ரில்வின் சில்வா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக