சென்னை, ஜூலை 3: தமிழக அரசில் தம்மிடம் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதைத் திறம்படச் செய்ய மக்களின் உதவியையும், ஆலோசனைகளையும் தாம் நாடுவதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக தனது பிரத்யேக இணையதளத்தில் (www.mkstalin.net) இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கட்டுரையில் அவர் கூறியுள்ளதாவது: ""துணை முதல்வராகப் பொறுப்பேற்று இருப்பதை தமிழினத்துக்குப் பணியாற்றக் கிடைத்த கூடுதல் வாய்ப்பாக நினைக்கிறேன். வேகமாக வளர்ந்து வரும் உலகில் தொழில் வளர்ச்சி முக்கியமானது. முதல்வர் கருணாநிதியின் வழியில் தொழில் வளர்ச்சியை மேலும் வேகப்படுத்த வேண்டும் என்பதை கடமையாகக் கருதுகிறேன். தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு அதிக சலுகைகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தொழில் உற்பத்தி பெருகுவதுடன், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் பெருகும். தமிழக முதல்வர் கருணாநிதி எனக்கு (மு.க.ஸ்டாலின்) கூடுதல் பொறுப்பினை அளித்திருக்கிறார். இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்திட மக்களின் உதவியை நாடுகிறேன். அவர்களது பங்கேற்பை வரவேற்கிறேன். இளைஞர்களும், மகளிரும், பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை வழங்க வேண்டும்'' என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துக்கள்
'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்' என்பதை உணர்ந்து திறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மையைப் பெற 'செவி கைப்ப பிறர் சொல் கேட்கும்' பண்பு பாராட்டிற்குரியது. நல்லன செய்யும் பொழுது அல்லனவற்றையும் களைய வேண்டும். உற்றார் உறவினர் என்று இல்லாது அல்லனவற்றைக் களையும் துணிவும் மனமும் இருப்பின் நான் முதல்வரின் துறையிலேயே நடைபெற்ற சில ஊழல்களைக் கூறுகிறேன். நடவடிக்கை எடுப்பாரா? தம் கடடுரையி்ன் பின்னூட்டங்களை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதாயின் எழுச்சியுள்ள துணைமுதல்வருக்குப் பாராட்டுகள்! அவ்வாறு எதுவும் நிகழவில்லை எனில், 'ஒப்புக்குச் சப்பாணியாக' இடம் பெற்றுள்ள கட்டுரை பற்றி நாம் ஒன்றும் மகிழத் தேவையில்லை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thilruvalluvan
7/4/2009 3:03:00 AM
7/4/2009 3:03:00 AM