சென்னை, ஜூன் 28: தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வன்னியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அதன் நிர்வாகத் தலைவர் சி.என்.ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் மத்தியில் 2 சதவீதமும், மாநிலத்தில் 20 சதவீதமும் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கை. பல்வேறு தொடர் போராட்டத்துக்குப் பின் வன்னியர் உள்ளிட்ட 108 சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
எனினும் இதுவரை வன்னியர்களுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை. எனவே, வன்னியர்களுக்கு தாற்காலிகமாக 15 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். தலித்துகள், கொங்கு வேளாளாளர், முக்குலத்தோர், நாடார், யாதவர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையான சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் சமூக நீதியை நிலை நாட்ட, ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழகத்தில் இன்னமும் 69 சதவீத ஒதுக்கீடுக்குப் பதிலாக 50 சதவீத ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.
வன்னிய சமுதாய முன்னோர்கள் தங்களது சந்ததியினர் நலனுக்காக ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் சொத்துகளை விட்டுச் சென்றுள்ளனர். இச் சொத்துகளை மீட்டு, ஒருங்கிணைத்து "வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்' அமைக்கப்பட வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் நிர்வாகிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, விரைவில் போராட்டம் நடத்தவும் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் ராமமூர்த்தி.
கருத்துக்கள்
சாதிச் சங்கங்களைத் தடைசெய்தால்தான் நாடு உருப்படும். வன்னியராக எண்ணி அன்னியப்பட்டுப் போகாமல் தமிழராக எண்ணி தமிழ் நாட்டுமக்களுக்கு உழைத்தால் நீங்களும் உயருவீர்கள்! நாடும் உயரும்! சாதிச் சங்கங்கள் இல்லாக் காலமே நாட்டின் பொற்காலம். 'சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே' என்னும் பாவேந்தர் பாரதிதாசன் கவலை தீரும் நாளே நமக்கெல்லாம் பொன்னாள்! அதற்கு முதற்படியாகச் சாதிச் சங்கங்களைத் தடை செய்வீ்ர்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/29/2009 3:58:00 AM
6/29/2009 3:58:00 AM