மூன்று லட்சம் அப்பாவி தமிழர்களுக்கு நம்பிக்கையூட்ட மகிந்த இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' ஏடு குற்றச்சாட்டு |
[வெள்ளிக்கிழமை, 03 யூலை 2009, 05:39 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] |
இலங்கையில் முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' ஏடு குற்றம் சாட்டியுள்ளது. |
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் தமிழிலும் சிங்களத்திலும் உரையாற்றும்போது, இந்தப் போர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரே தவிர தமிழ் மக்களுக்கு எதிரான போர் அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வெற்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியே தவிர, தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றி அல்ல என்றும் இது ஒட்டுமொத்த இலங்கை மக்களின் வெற்றி என்றும் கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு, முகாம்களில் உள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வரையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இதுவரையில் எதுவும் செய்யவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியைத் தொடர்ந்து நடந்த வெற்றிக் கொண்டாட்டங்களில், தமிழ் மன்னனைத் தோற்கடித்த சிங்கள மன்னன் துட்டகைமுனுவுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுவதைக் கேட்டு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மகிழ்ச்சி அடைந்து வருவதாகவே தோன்றுகிறது. விடுதலைப் புலிகளை வெற்றி கண்டு ஆறு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டன. போர்ப் படையினரால் நடத்தப்படும் அகதிகள் முகாம்களில் உள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களைத் தடையின்றி சந்தித்துப் பேசி உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பணியாளர்களையோ, பிற அனைத்துலக நாட்டு அமைப்புக்களின் உதவிப் பணியாளர்களையோ அனுமதிப்பதற்கு சிறிலங்கா அரசு இன்னும் மறுத்து வருகிறது. அரசைக் குறை கூறுபவர்கள் தொடர்ந்து மிரட்டலுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகின்றனர். எதிர்வரும் செப்ரெம்பரில் ராஜபக்ச ஆட்சியை இழப்பார் என்று சோதிடம் சொன்ன புகழ்பெற்ற சோதிடக்காரர் கைது செய்யப்பட்டிருப்பதே இதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டாகும். படையில் மேலும் 50 ஆயிரம் பேரைச் சேர்க்கத் திட்டமிட்டிருப்பதாக சிறிலங்கா அரசு இந்த வாரம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே சிறிலங்காப் படையில் 3.5 லட்சம் பேர் உள்ளனர் என்பதும், அவர்கள் எல்லோருமே சிங்களவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் வரும் ஓகஸ்ட் 8 இல் உள்ளாட்சி சபைத் தேர்தல் நடைபெறும் என சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. அப்பாவித் தமிழ் மக்களை அவர்களின் சொந்த ஊர்களில் மீண்டும் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்காமலும், அரசை விமர்சிப்பவர்களைத் துன்புறுத்திக்கொண்டும், மறுசீரமைப்புக்குச் செலவிடுவதற்கு மாறாக அரசு பணத்தைப் படையினருக்கு செலவிட்டுக்கொண்டும் சிறிலங்கா அரசு இருக்குமானால் இந்தத் தேர்தல்களுக்கு அர்த்தமே இல்லை என்றுதான் நிதான உள்ளம் படைத்தவர்கள் சொல்வார்கள். |
சனி, 4 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக