வியாழன், 2 ஜூலை, 2009

ஜூலை 02,2009,00:13 IST





சங்ககிரி: சங்ககிரி சூரிய மலைக்குகையில், 2,500 ஆண்டு பழமை வாய்ந்த சித்தர் ஓவியம், தமிழ் பிராமி எழுத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு வடக்கே உள்ள மலைப்பகுதி, "சூரிய வனம்' என்றழைக்கப்படுகிறது. இந்த சூரிய வனம், 4,000 ஏக்கர் பரப்பளவு கொண்டது; நான்கு மலைத்தொடர்கள் உள்ளன. பெருமலை தொடரில் அமைந்துள்ள குகை, கொங்கண சித்தர் குகை என்றழைக்கப்படுகிறது.



சங்ககிரியில் இருந்து இடைப்பாடி செல்லும் சாலையில், 6 கி.மீ., சென்றால், வேலம்மாவலசு பஸ் நிறுத்தம் வரும். அங்கிருந்து மேற்கே, 2 கி.மீ., தூரம் சென்று, வண்டிகார கோம்பை என்ற மண் சாலையில், 3 கி.மீ., தூரம் சென்றால், கொங்கண சித்தர் குகையை அடையலாம். சமீபத்தில் இந்த குகையில், தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், கொங்கண சித்தர் குகையின் மேற்கூரையில், 2,500 ஆண்டு பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. "ந' என்ற ஒரு எழுத்து மட்டுமே, தெளிவாக இருக்கிறது. இந்த எழுத்து, 50 செ.மீ., உயரம், 4 செ.மீ., தடிமனுடன் உள்ளது. இந்த எழுத்துக்கு சற்று தள்ளி, ஒரு ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில், சித்தர் ஒருவர், பத்மாசனம் இட்டு அமர்ந்த நிலையில் இருக்கிறார். இந்த ஓவியம் 60 செ.மீ., உயரம், 33 செ.மீ., அகலம், 4 செ.மீ., தடிமனுடன் காணப்படுகிறது.



பழமையான கல்வெட்டுக்கள் குறித்து, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, சங்ககிரி கல்வெட்டு ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் கூறியதாவது: பெருமலை தொடரில் உள்ள குகையில், தமிழ் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. காலப்போக்கில், அனைத்து எழுத்துக்களும் மறைந்துள்ளன. தற்போது, "ந' என்ற எழுத்து மட்டும் தெரிகிறது. மலையில் யோக முத்திரையில் அமர்ந்துள்ள உருவத்தை, நாம் கொங்கண சித்தராக கருதலாம். ஏனென்றால், ஓவியம் உள்ள இந்த குகை, இப்பகுதி மக்களால் காலம்காலமாக, "கொங்கண சித்தர் குகை' என்றழைக்கப்பட்டு வருகிறது.



கொங்கண சித்தர், 18 சித்தர்களில் ஒருவர். அவரை, புகழ் பெற்ற பழனி முருகனை உருவாக்கிய போகரின் சீடர் என்று அழைப்பர். சித்தர்கள் வாழ்ந்த காலத்தை, இதுவரை சரியாக கண்காணிக்க முடியவில்லை. 1,000 ஆண்டுகளில் இருந்து 3,000 ஆண்டுகளில், வெவ்வேறு கால கட்டத்தில், 18 சித்தர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொங்கண சித்தர் வாழ்ந்த இந்த குகைக்கு அருகில் உள்ள கொங்கணாபுரம், அவரின் சொந்த ஊராக கருதலாம். கொங்கணசித்தர் காலத்தை பற்றி, பல்வேறு கருத்து வேறுபாடுகள், அறிஞர்கள் மத்தியில் நிலவுகின்றன.



ஒரு சாரார் அவரை, போகரின் காலத்தவர் என்றும், ஒரு சிலர், வள்ளுவர் காலத்தவர் என்றும், சிலர், திருமழிசை ஆழ்வார் காலத்தவர் என்றும், வேறு சிலர், கருவூரார் காலத்தவர் என்றும் கருதுகின்றனர். தற்போது கண்டு பிடிக்கப்பட்ட, யோக முத்திரை கொங்கண சித்தரின் குகை ஓவியம், சந்தேகத்துக்கு இடம் இல்லாமல், 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சித்தர், போகர் காலத்தில் வாழ்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளது.



வாலைக்கும்மி, கொங்கணவாத காவியம், ஞானம், குளிகை, திரிகாவியம், கடைக்காண்டம் முதலிய நூல்களை கொங்கணசித்தர் இயற்றியுள்ளார். இந்த கொங்கண சித்தர் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட யோக முத்திரை உள்ள சங்ககால ஓவியம் போல, இதுவரை இந்தியாவில் வேறு எங்கும் கண்டு பிடிக்கவில்லை. தற்போது தான், சங்க கால யோக முத்திரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக