ஞாயிறு, 28 ஜூன், 2009




சித்திரவதைகள், கொலைகள், கலவரங்கள், எதிர்த்தாக்குதல்கள் இவற்றுக்கு மத்தியில் 1974 பிறக்கிறது. இந்த ஆண்டு நான்காவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தும்படி அரசைக் கேட்டுக் கொள்ள ஒரு தூதுக் குழு செல்கிறது. ஆனால் அரசு அதற்கு அனுமதி மறுக்கிறது. அதை ஒரு சவாலாக ஏற்றுத் தாங்களே அம்மாநாட்டை நடத்துவது என்று தமிழ்ச்சமூகம் முடிவெடுக்கிறது.யாழ்ப்பாணத்தில் எப்படியும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை 1974 ஜனவரி 3-10 நாள்களில் நடத்துவது என்பதை அனைத்துத் தமிழ் மக்களும் உறுதியுடன் ஆர்வத்துடன் ஆதரிக்கின்றனர். இந்த மாநாட்டை ஒவ்வொரு தமிழரும் தனது சொந்தக் குடும்ப விழாவாக நினைத்து யாழ்நகரத்தில் குவிகின்றனர்.இம்மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து புலவர் செ.ராசு (ஆசிரியர், கொங்கு), பிரகதம் (கொங்கு), கொடுமுடி ச.சண்முகன் (பொதுப்பணித்துறை), இரா.கணேசன் (சென்னைப் பல்கலை.), வண.தந்தை இராசமாணிக்கம் (லயோலா), பேரா.நயினார் முகமது (ஜமால் முகமது கல்லூரி), நீலகண்டன் (பெங்களூர் தமிழ்ச்சங்கம்), ரேன தா தேசா, ராஜ மகள் (கோவா), டாக்டர் சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், டாக்டர்.மோசூர் வாசுகி அம்மையார், டாக்டர் ரவீந்திர குமார், சேத் (இந்தி மொழியறிஞர்), வி.ஆர்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமானநிலையத்தில் இறங்கிய பலருக்கு 'விசா' அளிக்கப்படவில்லை, வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதன் பின்னர் அமைப்பாளர் குழுவில் பங்குபெற்ற கோ.மகாதேவா, மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஆகியோர் தலைமை அமைச்சரைச் சந்தித்துப் பேசியபின்னர்தான் எல்லா நாட்டினருக்கும் விசா வழங்கப்பட்டது.நகர் விழாக்கோலம் பூண்டது. கடைவீதிகளில் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. மின்விளக்கு அலங்காரம் இரவில் ஒளி வீசியது. உலகமே கண்டிராவகையில் முழுத்தென்னை, பனை, பாக்கு, மூங்கில், மா மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரங்களில் நடப்பட்டிருந்தன. பனை மற்றும் தென்னை மரங்களில் வாழைமரங்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன.வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு நாகசுரம் முழங்க பூரண கும்ப மரியாதை அளித்து, கொழுக்கட்டை, சீடை, பிட்டு என பண்டைய தமிழ்ப் பலகாரங்கள் தந்து உபசரித்தனர் -என்று மாநாட்டில் தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட தஞ்சைப் பல்கலைக்கழகக கல்வெட்டு தொல்லியல்துறைத் தலைவர் செ.ராசு வியந்து மகிழ்கிறார். (தகவல்: கொங்கு இதழ் மற்றும் மறவன்புலவு க.சச்சிதானந்தம் எழுதிய 'எனது யாழ்ப்பாணமே').தமிழ் அறிஞர்களின் பேச்சுகளைக் கேட்க ஆண், பெண் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கில் மக்கள் கூடினர். ஓர் உணர்ச்சி மயமான சூழ்நிலையில் விழா நடந்து கொண்டிருக்கிறது. இதைக் கண்டு பொறுக்காத சிங்கள அரசும், இனவெறிச் சக்திகளும் ஆத்திரமும் கோபமும் ஆவேசமும் கொள்கின்றன. இதன் விளைவாக அரசின் காவல்துறை தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்தது. அன்றைய சம்பவங்களை நேரில் கண்ட ஒருவரின் நேரடி வர்ணனை இது-திருச்சி ஜமால் முகமது கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் நயினா முகமது உணர்ச்சி மயமாக உரையாற்றிக் கொண்டிருக்கும்போது திடீரென வேறு ஏதோ ஒலிபெருக்கிக் குரல் தூரத்திலிருந்து வந்து மோதியது. என்னவென்று விளங்கவில்லை. அணி வகுத்து வந்த காவலர்கள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். அளவுக்கதிகமாக வீசியதால் நெஞ்சை அடைத்தது. மேடையில் அமர்ந்திருந்தவர்களின் மீதும் வீசினார்கள். தூரத்தில் ஒரு பேருந்தில் உள்ளமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோர் மீதும், பேருந்திற்குள்ளும் வீசினர்.பயந்துபோய் பதுங்க இடம்தேடிப் பறந்து சென்ற மக்களை பிரம்பால் மிருகத்தனமாக அடித்துத் தாக்கினர் காவல்துறையினர். நாலாபக்கமும் சிதறி ஓடினர் மக்கள். பலர் மிதிபட்டுத் துயருற்றனர். தாயைப் பிரிந்த குழந்தைகள், கணவரைப் பிரிந்த மனைவியர் போன்று ஏராளம். அருகிலே சேறு நிறைந்த குளம் ஒன்று இருந்தது. அதில் பலர் விழுந்தனர். செருப்புகளைத் துறந்தனர். பல பெண்கள் புடவைகளை இழந்து ஓட வேண்டியதாயிற்று.தீரமிக்க யாழ் நகர் இளைஞர்கள் தமக்கு வந்த இடரையும் பொருட்படுத்தாது பலரைக் காத்தனர். குளத்தில் விழுந்தவர்களைத் தூக்கிவிட்டனர். தனியாக நின்ற குழந்தைகளைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.கண்ணீர்ப் புகையால் திணறிய இந்திய நாட்டினரை யாழ் நகர் இளைஞர்கள் சூழ்ந்துகொண்டு ஒவ்வொருவரையும் காப்பாற்ற முனைந்தனர்.புலவர் இராசு அவர்களை வீரசிங்கம் மண்டபத்திற்குப் பின்புறம் இழுத்துச்சென்று சுற்றுச்சுவர் மீது ஏற்றிப் பின்பக்கம் குதிக்க வைத்தனர். குதித்த இடம் சாக்கடை. அதிலேயே சற்றுதூரம் நடந்துசென்று சாலையேறி, தொடர்ந்து வந்து, எதிரில் வந்த கார் ஒன்றில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவர்களும் பின்னர் வந்து, இவர் வீடு வந்து சேர்ந்ததை உறுதி செய்துகொண்டனர்.அதே போல இரவீந்தர்குமார்சேத், நயினார்முகமது, சனார்த்தனம் ஆகியோர் தத்தம் துணிமணிகளை இழந்து பல துயருற்று பத்திரமாக வீடுவந்து சேர்ந்தனர்.தென் ஆப்பிரிக்காத் தமிழர் முதியவர். கையில் அடிபட்டு வீடு வந்து சேர்ந்தார்.காவல்துறையினர் சனார்த்தனம் பேசக்கூடாதென்று சொல்லியிருந்ததாகவும், பேராசிரியர் நயினார்முகமதுவின் பேச்சை தவறாகப் புரிந்துகொண்டு, இரா.சனார்த்தனம் பேசுவதாகக் கருதிக் கூட்டம் சட்டவிரோதமானதென்று அறிவித்துக் கலைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. கூட்டத்தில் குழப்பம் என்பது பச்சைப் பொய்.எனினும் மேடையில் அமர்ந்திருந்த இந்தியர்களையும், பிற வெளிநாட்டாரையும் பாதுகாக்க முயலாமல் மேடை மீதும் கண்ணீர்ப்புகை வீசியதைப் போன்ற கொடுமை வேறு இருக்க முடியாது.யாழ் நகரப் படுகொலைக்கு இலங்கை அரசு என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைக் காலம்தான் நிர்ணயிக்க வேண்டும்! தமிழன்னையின் கண்ணீர்த்துளிகள் வீணாவதில்லை. (கொங்கு இதழில் வந்தபடி).அதன் விளைவாக மின்சாரம் தாக்கியும் கூட்டத்தில் சிக்குண்டும் 9 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.விழாவிற்கு வந்த உலகத் தமிழ் அறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போதைய யாழ்மேயர் ஆல்பிரட் துரையப்பா அளித்த விருந்துக்குப் போகக்கூடாது என்று 'பொடியன்கள்' (தமிழ் இளைஞர்கள்) தடுத்தனர். அவர் தமிழ்மாநாட்டு எதிரி என்பது அவர்களின் வாதம். 'கவரிமான்' என்ற பெயரில் யாழ் நகர இளைஞர்கள் துண்டுப்பிரசுரங்கள் வழங்கினர். 'பொடியன்களை' பெரியவர்கள் நம்பினர். ஈழத் தமிழர் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சம்பவம் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக