சனி, 4 ஜூலை, 2009

"தமிழ் மக்கள் அவர்கள் தாயக மண்ணில்
அமைதியுடன் வாழ்ந்து ஓங்க அனுமதிக்கப்பட வேண்டும்":
பேராசிரியர் எலி விசெல்
[வெள்ளிக்கிழமை, 03 யூலை 2009, 01:51 பி.ப ஈழம்] [க.நித்தியா]
"சிறுபான்மை சமூகத்தினர் எப்பகுதியில் என்றாலும் அடக்குமுறைக்குள்ளாகும் போது, நாம் அவர்களுக்காக உரத்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஆதாரபூர்வமான தகவல்களின் பிரகாரம் சிறிலங்கா அரசினால் தமிழர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்படுகின்றனர். இந்த அநீதி நிறுத்தப்பட வேண்டும். தமிழ் மக்கள் அவர்கள் தாயக மண்ணில் அமைதியுடன் வாழ்ந்து ஓங்க அனுமதிக்கப்பட வேண்டும்."

இவ்வாறு 1986 ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்றவரும் ஹிட்லரின் யூத இனப் படுகொலை தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டவருமாகிய பேராசிரியர் எலி விசெல், ஜூன் மாதம் 30 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமாதனத்திற்கான பரிசை தெரியப்படுத்துகையில், நோர்வே நாட்டின் நோபல் தலமையகம் பேராசிரியர் எலி விசெலினை "மனிதத்தின் தூதுவர்" என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் எலி விசெல் 40-க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 5 ஆம் நாள், அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா, ஜேர்மன் அரச தலைவர் அஞ்செலா மேர்க்கல் ஆகியோர் சகிதம் தான் சிறை வைக்கப்பட்டிருந்த ஜேர்மனியில் வைமர் நகரில் உள்ள புச்சென்வால்ட் வதைமுகாமுக்கு பேராசிரியர் எலி விசெல் பயணம் செய்திருந்தார்.

அங்கு உரையாற்றிய பேராசிரியர் எலி விசெல், "இங்கு வருபவர்கள் துயர நினைவுகளை மீட்பது இதயங்களில் குரோத உணர்வினை விதைப்பதற்கல்ல. மாறாக எம்மை நாடுவோருக்காக கூட்டு ஒருமைப்பாட்டினை கொண்டு இயங்க அது வழியமைக்கின்றது,” எனத் தெரிவித்திருந்தார்.

பேராசிரியர் எலி விசெல், ஈழத் தமிழர் பற்றி கருத்து தெரிவித்துள்ளமையைத் தொடர்ந்து, சிறிலங்கா அரசின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி கருத்து வெளியிட மேலும் பல சுயாதீன அமைப்புக்கள் மற்றும் மனிதநேய ஆர்வலர்கள் முன் வரலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக