உதகை, ஜூன் 29: கூடலூர் அருகே உள்ள பந்தலூர் சேலக்குன்னா அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி போதிக்க ஆசிரியர் இல்லாததால் 33 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கூடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகள் தமிழ் மற்றும் மலையாள மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன.ஆனால், மலையாள மொழி தலைமையாசிரியரை கொண்டுள்ள பள்ளிகளில் தமிழ் வழி மாணவர்கள் முறையாக கவனிக்கப்படுவதில்லை என்ற புகார் பரவலாக உள்ளது.பந்தலூரில் சேலக்குன்னா அரசு தொடக்கப் பள்ளியில் மலையாள மொழி தலைமையாசிரியர் மட்டுமே பணியாற்றிவரும் நிலையில் தமிழ் வழி மாணவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக எழுந்த புகார்களையடுத்து தமிழ் ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது அவரும் மாற்றலாகிச் சென்று விட்டார்.எனவே, பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஒரு தமிழ் ஆசிரியை நியமிக்கப்பட்டார். ஆனால் போதிய சம்பளம் இல்லாததால் அவரும் பணிக்கு வருவதில்லையாம்.இதற்கிடையே இப் பள்ளியில் மலையாள வழிக் கல்வியை கற்று வந்த 5 மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்ந்துவிட்டனர்.இப் பிரச்னைகளுக்காக தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் மாற்று சான்றிதழ் கேட்டும் அதை பள்ளி நிர்வாகம் தர மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப் பள்ளியிலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 33 பேர் தமிழ் ஆசிரியர் இல்லாமலும், வேறு பள்ளிகளில் சேர முடியாமலும் தவிக்கின்றனர்.
கருத்துக்கள்
மத்திய அரசு இந்தியைப் பரப்பும் நோக்கத்தில் மாநகர்களெங்கும் தன் பள்ளியைத் தரமான முறையில் நடத்துகிறது. அதுபோல் தமிழக அரசும் ஒவ்வொரு வட்டத்திலும் விடுதி வசதியுடன் கூடிய தரமான தமிழ்வழிக் கல்வியை வழங்க வேண்டும். தமிழ் வழிக் கல்விக்கூடங்களுக்கு மட்டும் நிதியுதவி சலுகைகள் ஆகியன அளித்தல் வேண்டும். தமிழ் வழி பயிலும் மாணாக்கர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகையும் பரிசுகளும் அளித்தல் வேண்டும். இதன் மூலம் 'எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!' என்பதைக் கனவு நிலையில் இல்லாமல் நனவாக்கலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/30/2009 7:34:00 PM
6/30/2009 7:34:00 PM