சென்னை, ஜூலை 2: "திராவிட நாடு' கொள்கை கைவிடப்பட்ட விஷயத்தில் வரலாற்று பூர்வமான உண்மையைத் திரித்து கூறுகிறார் முதல்வர் கருணாநிதி என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஈழத்தமிழர் பிரச்னையிலும் காங்கிரஸ் கட்சிக்கு கோபமூட்டி அதன் விளைவாகத் தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கொள்கையைக் கைவிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். "திராவிட நாடு' கொள்கையை திமுக கைவிட்டதற்கு காரணம் கட்சியை ஒழிப்பதற்கு சட்டம் வந்தபோது திராவிட நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது. எனவே, முதலில் கட்சிதான் வேண்டுமென்று முடிவெடுத்ததாகவும் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை கருணாநிதி கூறியிருக்கிறார். பிரிவினைக் கேட்கும் கட்சிகள் தடை செய்யப்படும் என்ற சட்டம் கொண்டு வரப்படவில்லை. பிரிவினைக் கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு இச்சட்டம் தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கை குழி தோண்டி புதைக்கப்பட்டது. வரலாற்று பூர்வமான இந்த உண்மையைத் திரித்துப் பேசுகிறார் கருணாநிதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக