சென்னை, ஜூன் 30- தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் தனக்கு வேண்டியவர் ஒருவருக்கு ஜாமீன் வழங்குமாறு தன்னை வலியுறுத்தியதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி நேற்று கூறியிருந்தார். இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
"நீதிபதியின் புகார் குறித்து நான் ஊடகங்கள் மூலமே தெரிந்துகொண்டேன். என்ன நடந்தது என்று முதலில் நான் விசாரிக்க வேண்டும். அதன் பின்னரே, அந்த பிரச்னை குறித்து நான் கருத்துக் கூறமுடியும். எனினும், இதுபோன்ற பிரச்னைகளில் சட்ட அமைச்சகம் தலையிடக்கூடாது. நீதிபதிகளிடம் இதுபற்றி நேரடியாக நாங்கள் விசாரிக்க இயலாது. நீதித்துறை அல்லது சட்ட அதிகாரிகள் தான் இதை கவனிக்க வேண்டும்" என்றார் வீரப்ப மொய்லி.
புதுவைப் பல்கலைக்கழக ஊழியர் ஒருவரின் உதவியுடன் டாக்டர் ஒருவர் தனது மகனின் எம்.பி.பி.எஸ். மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்ததாக சிபிஐ அவர்கள் இருவர் மீதும் வழக்குத் தொடர்ந்தது. இதில், சம்பந்தப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கோரி தன்னை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தியதாக நீதிபதி ரகுபதி குறிப்பிட்டிருந்தார். மேலும், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
குற்ற வழக்கில் உள்ள ஒருவர் பிணையில் செல்ல பிணை உறுதி தேவைப்படுகிறது. அதனை அமைச்சர் ஒருவர் தருகையில் அதனைத் தவறாகக் கருதாமல் ஏற்கலாமே! அமைச்சர் விடுதலை செய்யுமாறு கூறினால்தான் தவறு. அல்லது நீதி மன்ற விசாரணைகளில் தலையிட்டு விசாரணைப் போக்கை மாற்றினால்தான் தவறு. பிணையுறுதி தருகின்ற அமைச்சரின் வேண்டுகோளை ஏற்பதும் ஏற்க மறுப்பதும் நீதிபதியின் முடிவுரிமையின் பாற்பட்டது. எனவே, அமைச்சர் மிரட்டும் தொனியில் இல்லாமல் வேண்டுகோள் விடுத்திருந்தால் தவறாக எண்ணி மன்னிப்பு கேட்கச் சொல்லுவதோ இதனை அரசியல் ஆக்குவதோ முறையன்று.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
6/30/2009 7:22:00 PM