சனி, 4 ஜூலை, 2009


பாவை சந்திரன்
First Published : 04 Jul 2009 10:45:00 PM IST

Last Updated :

ஸ்ரீமாவோ - லால்பகதூர் சாஸ்திரி


சுதந்திரத்திற்குப் பின், இலங்கையும், இந்தியாவும் இரு மாநாடுகளை நடத்தின. 1953-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் லண்டனில் நேரு-டட்லி சேனநாயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிரஜா உரிமையற்ற மலையகத் தமிழர்களை யார் ஏற்றுக் கொள்வது என்பதுதான் பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம். ஆனால் இப்பேச்சுவார்த்தை எந்தத் தீர்வும் இன்றித் தோல்வி அடைந்தது.

பின்னர் நேரு-கொத்தலாவலை பேச்சுவார்த்தை புது டெல்லியில் 1954-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. இதுவும் தோல்வி அடைந்தது. இந்திய அரசாங்கம் நாடற்ற மலையக மக்களை இலங்கையர் என்றது; இலங்கை அரசோ அவர்களை இந்தியர் என்றது. இவ்வாறு இப்பிரச்னை இழுபறியான சமயத்தில் ஒரு திடீர் சூழ்நிலை ஏற்பட்டது.

1964-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி அன்று, பர்மாவில் இருந்தும் (3,00,000 பேர்), உகாண்டாவில் இருந்தும் (28,755 பேர்) அந்த நாட்டு அரசாங்கங்கள் இந்தியர்களை விரட்டி அடித்தன. இத்தகைய ஒரு நிலை இலங்கையிலும் ஏற்பட்டு விடக்கூடாது என இந்தியா விரும்பியது. அடுத்ததாக நடைபெற்ற சீன-இந்திய யுத்தத்தைத் தொடர்ந்து, சீனாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த இலங்கையுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள இந்தியா விரும்பியது.

இறுதியாக, அப்போது பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த அயூப்கான், ""இலங்கையில் உள்ள சகல பாகிஸ்தானியர்களையும் தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயார்'' என்று இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதினார். அப்போது இலங்கையில் 5749 பாகிஸ்தானியர்களே வாழ்ந்தார்கள். அதனால் பாகிஸ்தானுக்கு அவர்களை ஏற்றுக் கொள்வது அவ்வளவு சிரமமானதாக இல்லை.

அதே கடிதத்தில் அவர் ""இந்தியா தனது அண்டை நாடு எதனுடனும் சுமுகமாகப் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவில்லை'' எனக் குற்றம் சாட்டி இருந்தார். எனவே, சீனாவுடனான யுத்தத்தினால் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து சர்வதேச அரங்கில் இந்தியா தன் பெயரை நிலைநிறுத்த வேண்டிய நிலையில் இருந்தது.

இந்தச் சமயத்தில் நேரு காலமானார். அதற்குப்பின் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். இவருக்கும், இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கும் இடையே 1964-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதியன்று பேச்சுவார்த்தை துவங்கியது. ஆறு நாட்கள் தொடர்ந்த இப்பேச்சுவார்த்தை அக்டோபர் 30-ஆம் தேதியன்று ஒரு முடிவுக்கு வந்தது.

அன்றுதான் உலகமே கண்டித்த, மிக மோசமான சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

இலங்கையில் இந்தியர்களின் மக்கள் தொகை 1964 செப்டம்பர் 25-ஆம் தேதி கணக்குப்படி 10,08,269 பேர் ஆகும்.

இதில் இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்போரின் எண்ணிக்கை 28,269. மீதம் இருந்த 9,75,000 பேரின் பிரஜா உரிமை பற்றியே இம்மாநாடு முடிவு செய்தது.

சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தின்படி, 9,75,000 பேரில் 5,25,000 பேருக்கு 15 வருடகாலத்தில் (அவர்களின் இயற்கை அதிகரிப்புடன்) இந்தியப் பிரஜை உரிமை வழங்குவதென்றும், அதே காலத்தில் 3,00,000 பேருக்கு அவர்களின் இயற்கை அதிகரிப்புடன் இலங்கைப் பிரஜா உரிமை வழங்குவதெனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

எஞ்சியுள்ள 1,50,000 பேரின் பிரஜா உரிமை அந்தஸ்து பற்றி 1974-ஆம் ஆண்டு தீர்மானிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி 1974-ஆம் ஆண்டு ஜனவரியில் செய்து கொள்ளப்பட்ட ஸ்ரீமாவோ- இந்திரா ஒப்பந்தத்தின்படி இலங்கையும், இந்தியாவும் 1,50,000 பேரையும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டன.

இந்த ஒப்பந்தங்களைக் கண்டிக்காத சர்வதேச மனிதாபிமான இயக்கங்களே இல்லை எனலாம். இருந்தும் இரு அரசாங்கங்களும் அவற்றைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

இந்த ஒப்பந்தத்தை மனிதாபிமான அமைப்புகளும் இயக்கங்களும் சர்வதேச அளவில் கண்டித்தன. ஆடு, மாடுகளைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொள்வதுபோல மனிதர்களைப் பங்குபோடும் அதிகாரத்தை அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அளித்தது யார் என்கிற கேள்விகள் உலகில் பல பகுதிகளிலிருந்தும் எழுப்பப்பட்டன.

சம்பந்தப்பட்ட மக்களின் கருத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இரு அரசுகளும் தான்தோன்றித் தனமாக நிறைவேற்றிய ஒப்பந்தம் இது. அதாவது இதனை ஒரு சமூகம் சம்பந்தப்பட்ட பிரச்னையாகப் பாராமல் அந்தப் பத்து லட்சம் மக்களின் தலைவிதியை, அவர்கள் பங்கு பெறாமலே இரு அரசாங்கங்களும், வெறும் எண்களைக் கருத்தில் கொண்டு கணித முறையில் முடிவு செய்தன.

இப்பேச்சு வார்த்தை நடந்தபோது குறைந்தபட்சம் அம்மக்களின் பிரதிநிதியின் கருத்துகூட கேட்டு அறியப்படவில்லை.

இவ்வாறு முடிவு செய்யப்பட்டதும் அம்முடிவு ஒருகட்டாய அடிப்படையில் அமல் நடத்தப்பட்டது என்பதுதான் அதைவிட வேடிக்கை. இதற்கான மனுக்கள் கோரப்பட்டபோது இலங்கை பிரஜா உரிமை கோரி சுமார் 7,00,000 மனுக்கள் தாக்கல் ஆயின. ஆனால், இவ்வொப்பந்தப்படி இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட வேண்டியவர்கள் 3,75,000 பேர் மாத்திரமே. இந்தியப் பிரஜா உரிமை 6,00,000 பேருக்கு வழங்கப்படும் என்ற நிலைமை இருக்கும்போது இந்தியப் பிரஜா உரிமை கோரி மனு செய்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 மட்டுமே. ஒருவேளை இலங்கை பிரஜா உரிமை மறுக்கப்பட்டால் இந்தியப் பிரஜா உரிமையாவது கிடைக்கட்டுமே என்று இரண்டிற்கும் மனு செய்தவர்கள் தொகை கணிசமானது.

அதுமட்டுமல்ல, இந்த ஒப்பந்தம் அமலாகும்போது இந்தியாவில் அமையப்போகும் ""புதுவாழ்வு'' பற்றி மிகக் கவர்ச்சியான சித்திரங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன. இத்தனைக்குப் பிறகும்கூட இந்தியா செல்வதற்கு இவர்கள் மத்தியில் இருந்து மிகக் குறைவாகவே ஆர்வம் காணப்பட்டது.

இவ்வாறு இம்மக்களின் சுய விருப்பத்திற்கு மாறாகப் பல்வேறு நிர்பந்தங்களாலும், ஏமாற்றுகளாலும் திணிக்கப்பட்ட இவ்வொப்பந்தம் மனித அடிப்படை உரிமைக்கு முரணானது.

1948 டிசம்பர் 10-ஆம் தேதி இயற்றப்பட்ட உலக மனித உரிமைகள் சாசனத்தின் 15-வது ஷரத்து * பின்வருமாறு கூறுகிறது:

""தேசிய இனத்துவ உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒருவருடைய தேசிய இனத்துவம் வேண்டுமென்றே பறிக்கப்படுவதோ, அல்லது அவரது தேசிய இனத்துவத்தை மாற்றிக் கொள்வதற்குள்ள அவரது உரிமையை மறுப்பதோ கூடாது.''

இதன்படி பார்க்கும்போது இந்த இரு அரசாங்கங்களுமே உலக மனித உரிமை சாசனத்தை மிக மோசமாக மீறி இருக்கின்றன என்பது புலனாகிறது.

இந்தியா செல்வதற்குத் தயாராதல், புறப்படுதல் போன்ற முறைகளில் இம்மக்கள் அடைந்த துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்தியக் கடவுச் சீட்டு வழங்கப்பட்ட நாளில் இருந்து சகல ஒப்பந்தங்களையும் செய்து முடிக்க 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை அவகாசம் (விசா) வழங்கப்படுகிறது. ஊழியர் சேமலாப நிதி, சேவைக் கால உபகாரப் பணம், நாணயப் பரிவர்த்தனை, அனுமதிப் பத்திரம், குடும்ப அட்டை ஆகிய அனைத்தையும் ஒரு வருட காலத்துக்குள் கல்வி அறிவு அற்ற இத்தொழிலாளர் பெற்றுத் தீர வேண்டும். இதனால் தொழிற்சங்க நிர்வாகிகள் தோட்ட நிர்வாகிகள் போன்றோர், இடைத் தரகர்களாக மாறி இவர்களைக் கொள்ளை அடித்தனர்.

இதன் பின்னர் வெளியேற்ற அறிவித்தல் (ணன்ண்ற் சர்ற்ண்ஸ்ரீங்) வழங்கப்படுகிறது. அதற்கு மேல் தங்கினால் அவரைக் கைது செய்து நாடு கடத்தும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு. 1971-77 ஆண்டுகளில் நாய்களைப் பிடித்துச் செல்வது போல இம்மக்களைப் பிடித்து ஜீப்புகளில் ஏற்றி, இடுப்புத் துணியோடு இந்தியாவுக்கு நாடு கடத்திய சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்றன. இதிலும் சாத் முரண்பாடு தலைதூக்கியது. தாழ்த்தப்பட்ட ஜாதியினர்தான் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதைவிடக் கொடுமை என்னவென்றால், அவர்கள் ராமேஸ்வரம் வரை பயணம் செய்யும்போது, பியூன் முதல் போர்ட்டர் வரை, கிளார்க் முதல் உயர் அதிகாரி வரை அனைவரும் இவர்களை ஏமாற்றி லஞ்சம் வாங்கிக் கொண்டனர்.

இவ்வாறு குடிபெயர்ந்து செல்வோரின் குடும்ப உறவுகள் துண்டிக்கப்பட்டன. பிரஜா உரிமை முடிவு செய்யப்பட்டபோது மைனர் குழந்தைகளுக்குத் தந்தையுடன் சேர்த்து அதே பிரஜா உரிமை வழங்கப்பட்டு விடுகிறது. அனால் 18 வயது கடந்த அவர்களது குழந்தைகள் தனியாக மனு செய்து இலங்கை அல்லது இந்தியாவில் பிரஜா உரிமை பெறவேண்டும். வெளியேற்ற அறிவித்தல் வந்துவிட்டால்... தந்தையும், குடும்பத்தினரும் பிரிய நேரும். ஒரே குடும்பத்தில் அண்ணனுக்கு இலங்கைப் பிரஜா உரிமையும், தம்பிக்கு இந்தியப் பிரஜா உரிமையும் வழங்கப்பட்டு விடுகிறது.

பிறந்த நாட்டையும், வளர்ந்த மண்ணையும், பழகிய நண்பர்களையும் விட்டுப் பிரியும்போது அழுது, கதறித் துடிக்கும் பரிதாபகரமான காட்சியை மலை நாட்டில் உள்ள சகல புகைவண்டி நிலையங்களிலும் காண முடிந்தது. காதலனைப் பிரியும் காதலி, அண்ணனைப் பிரியும் தம்பி, பெற்றோரைப் பிரியும் பிள்ளை, இப்படி மனித உறவை அறுத்தெறியும் அந்தக் கொடிய காட்சி இரும்பு இதயத்தைக்கூட உருகச் செய்யும்.

புதுவாழ்வைத் தேடி இந்தியாவுக்கு விரட்டப்பட்ட இவர்களுக்கு இந்திய மண்ணில்கூட நிம்மதியோ, மகிழ்ச்சியோ கிடையாது. இன்று இந்த அகதிகள் இந்தியத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். இவர்களின் கண்களின் வெறித்த பார்வையில், தங்கள் பிறந்த மண்ணும், உற்றார் உறவினரும், வஞ்சிக்கப்பட்ட தங்கள் தலைவிதியும் அடிக்கடி வந்து போகும் விஷயங்கள் ஆகிவிட்டன.

மலையகத் தமிழர்களின் தலைவராக இருந்த எஸ்.தொண்டமான், பெரிய கங்காணி ஒருவரின் மகனாக இருந்து ஆரம்ப காலத் தியாகத்தால் மலையக மக்கள் இதயத்தில் வலுவான இடம்பெற்றுவிட்டவர். இலங்கையில் ஒரு தனிநபரின் குரலுக்கு ஆறு லட்சம் மக்கள் அணி திரள்கிறார்கள் என்றால், அது தொண்டமானுக்கு மட்டும்தான் இருந்தது.

அவர் தனிநபரல்ல; அவருக்குப் பின்னால் ஸ்தாபனப்பட்ட 6 லட்சம் தொழிலாளர்கள் இருந்தார்கள். அந்தத் தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் 60 சதவிகிதம் தமது கைகளில் வைத்திருக்கிறார்கள். விண்ணை அதிரவைக்கும் இந்த மகத்தான சக்தியால் தாங்கப்படும் ஒரு மனிதர் எவ்வளவு வலிமை மிக்கவராக இருக்க வேண்டும்? ஆனால் தொண்டமானோ அற்பப் பதவிக்காக ஜெயவர்த்தனாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார் என்ற பலமான குற்றச்சாட்டு இவர் பேரில் உண்டு.

இந்த நிலையில் மலையகத் தமிழ் தொழிலாளர்களுடைய நிலையைச் சுருக்கமாகச் சிலவரிகளில் கூறிவிடலாம். பொருளாதார ரீதியில் சாகாமல் எப்படி உயிர் வாழ்வது என அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு இலங்கையில் விலைவாசி அதிகரித்துவிட்டிருந்தது.

தமிழர் என்ற முறையில் எப்படி சிங்கள குண்டர்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிப் பிழைக்கலாம் எனச் சதா சிந்தித்துக் கொண்டிருந்தனர். அந்த அளவுக்குத் தேசிய இன ஒடுக்குமுறை உச்ச கட்டத்தை அடைந்திருந்தது. மேலும் அரசியல் விழிப்புணர்ச்சி மிக்க நல்ல தலைமையை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது கூட அவர்கள் சிந்தனையில் இடம்பெற ஆரம்பித்தது.

இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான காலகட்டத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக மற்றும் ஜெயவர்தன போன்ற சிங்கள இனவாதத் தலைவர்களில் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு, ஈழத்தமிழர்களும், மலையகத் தமிழர்களும் பலியானார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. தமிழன் என்ற உணர்வுடன் இவர்கள் கைகோர்த்து செயல்படத் தவறியதையும், ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுகியதையும் சிங்கள அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

மலையகத் தமிழர்களை அரவணைத்துச் செல்லாமல் போனதால் ஏற்பட்ட விளைவுதான் இலங்கையில் தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள முடியாமல் போனதற்கு முக்கியமான காரணம் என்பதை சரித்திரம் மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்யும். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எழுந்துவிட்ட தமிழர்களின் உரிமைக் குரல் இன்றும் ஒரு நியாயமான முடிவை எட்ட முடியாமல் போனதற்கு, இவர்களுக்குள் காணப்பட்ட பிளவுதான் காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.



* Article 15 of Universal Declaration of Human Rights. (Dec.10.1948) ‘‘Every one has the right to a nationality; no one shall be arbitarily deprived of his nationality nor denied the right to change his nationality.’’



நாளை : தமிழ் ஈழத்துக்கான முதல் குரல்!

கருத்துக்கள்

If Aryans utilized Tamil society s education, knowledge without favouritism, by this time China & western would have behind India. But unfortunately Aryans wants to dominate Diravidans esp Tamils and loosing all their safety & power to China. See one example: South East Asia
By Rayudu
7/4/2009 8:59:00 AM

Dravidians do not have unity. Tamils also do not have Unity. So we are just ruled by foolish & uneducated Aryan
By Dravidan
7/4/2009 8:50:00 AM

India want tamil nadu vote. they never ever want tamil people,,,,,,,,, yograjiv
By rajiv
7/4/2009 6:39:00 AM

India spoiled tamils life, tamilnadu should be separated from India to save tamils and a nation to be formed Tamilnadu tamils and Eelam Tamils.
By yogaraja
7/4/2009 3:24:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக