மரணம்வரை மடியாது
எங்கள் தமிழ் மான உணர்ச்சி!
ஈரோடு மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் 21.06.2009
மிகுந்த மகிழ்ச்சியோடும், எதிர்காலத்தைப்பற்றிய நிறைந்த நம்பிக்கையோடும் இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் உங்கள் முன்னால் நிற்கின்றேன். சில ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு, ஈரோடு மாவட்டம் ஆர்த்தெழுந்துள்ளது, 90 களில் நான் கண்ட ஈரோடு மாவட்ட எழுச்சியை மீண்டும் இன்றைக்குப் பார்க்கிறேன். இது மிகைப்படுத்திப் பேசுகிற பேச்சு அல்ல. நமது இயக்கத்துக்கு எந்தச் சரிவும் கிடையாது. ‘நடப்பது எல்லாம் நன்மைக்கே’ என்றுதான் நான் எடுத்துக் கொள்கிறேன். என் தோல்வியிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
அண்ணன் துரைசாமி அவர்களும், மாவட்டச் செயலாளரும் சொன்னதைப்போல, எதையும் தோல்வி என்று கருதி சோர்வு அடைவது இல்லை. அந்த நிமிடத்திலேயே அடுத்தக் களத்துக்கு நான் ஆயத்தமாகி விடுவேன். இம்முறை அந்த ஊக்கத்தைத் தந்தது நீங்கள் பெற்றுக் கொடுத்த வெற்றி; ஈரோடு பெற்றுத்தந்த வெற்றி; என் வீரச்சகோதரன் கணேசமூர்த்தி பெற்ற வெற்றி. (பலத்த கைதட்டல்)
என் நெஞ்சில் ஒரு சுமை இருந்தது; என் மனதில் ஒரு முள் இருந்தது; என் உள்ளத்தில் ஒரு குறை இருந்தது. 2004 ஆம் ஆண்டு அவரை நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பி வைக்க இயலாமற் போயிற்றே. ஈரோடு கழகக் கண்மணிகளின் முகத்தைப் பார்க்கிறபோது, அவர்களது மனக் கவலைகளைப் பார்க்கிறபோது, எங்கள் கணேசமூர்த்திக்கு இம்முறை இடம் இல்லையா என்று உள்ளுக்குள் அவர்களுக்குள் கவலை மூண்டு இருந்ததைப் பார்க்கிறபோது, அது எனக்கு ஆறாத காயமாக இருந்தது. அந்தக் காயம் ஆறிவிட்டது, அந்தக் குறை நீங்கிவிட்டது, அந்த முள்ளை வெளியே எடுத்துப் போட்டாகிவிட்டது. இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
ஈரோடு தொகுதி உறுதியாக வெற்றிபெறக்கூடிய நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை, நல்லமனதோடு இந்தத் தொகுதியை நமக்கு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பேச்சுவார்த்தையில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்காக ஒரு முறிவு வந்துவிடக்கூடாது என்று கணேசமூர்த்தி கவலைப்பட்டார்.
தாயகத்தில் என்னை அழைத்துப் பேசினார். பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வெளியில் முரணான செய்திகள் கசிகின்றன. நம்மை அழிக்க நினைப்பவர்கள் அந்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி ஏடுகளுக்குத் தருகிறார்கள்.
அந்த வேளையில், கணேசமூர்த்தி அவர்கள், ‘எப்படியாவது உடன்பாட்டில் நீங்கள் கையெழுத்திட வேண்டும்; ஈரோட்டில் பிடிவாதமாக இருக்காதீர்கள். அதனால் உடன்பாட்டுக்குக் குந்தகம் வந்து விடக்கூடாது. திருவள்ளூரைப் பெறுங்கள் - ஆரணியைப் பெறுங்கள்’ என்றார். அந்த நல்ல உள்ளம், உள்ளத்தில் உயர்ந்த உள்ளம், அதுதான் அந்தத் தொகுதியை அண்ணா தி.மு.க. தந்தது. அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் சகோதரர் இராமலிங்கம், பி.சி.ஆர். , நான் எந்நாளும் மதிக்கின்ற மதிப்புக்குரிய துரை.ராமசாமி, அருமைச் சகோதரர் முன்னாள் அமைச்சர் ஈரோடு முத்துசாமி, உள்ளிட்ட அனைவருமே நம் கணேசமூர்த்தி வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்று உழைத்தார்கள். ஒன்றிய, நகரச் செயலாளர்கள் பாடுபட்டார்கள். அவர்கள் ஆற்றிய பணிகளுக்கு, தோழமைக்கட்சியினரான பொது உடைமைக் கட்சியினர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ் உணர்வாளர்கள், மனிதநேய மக்கள் கட்சி அப்படி உழைத்திட்ட பலருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 16 ஆவது ஆண்டின் தொடக்கத்தை நடத்த, நான் ஈரோட்டைத் தேடி ஓடோடி வந்தேன். தந்தை பெரியார் சிலைக்கு அருகில், கொடிமரத்தில் நம் கொடியை உயர்த்தினோம். சூளுரை மேற்கொண்டோம்.
கணேசமூர்த்தி அவர்கள், இன்று காலை நாமக்கல் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கூறினார் ‘முதல்சுற்றில் இருந்தே எனக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. உறுதியாக வெற்றி பெறுவோம் என்று தெரிந்து விட்டது. ஆனால், அதில் மகிழ்ச்சி இல்லை.’ ஏனென்றால், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தமட்டில் மகிழ்ச்சிகரமான செய்தி வரவில்லை. அது முன்னும்பின்னுமாக இருக்கிறது, ஓட்டுகள் இன்னும் குறைவாக இருக்கிறது என்றும் மிகுந்த கவலையோடு இருந்தேன்’ என்று அவர் குறிப்பிட்டார்.
நான் விருதுநகர் தொகுதியில் பின்தங்கி இருக்கிறேன் என்று கணேசமூர்த்தி கவலைப்பட்டார். அதே வேளையில், நான் தொலைக்காட்சிக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு, ஈரோடு முன் நோக்கிப் போய்க் கொண்டே இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு இருந்தேன்.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே இமாலய ஊழல் செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு நபரை, நீலகிரியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக ஆக்கி, ஓட்டுக்கு 5,000 ரூபாய், தங்கக் காசுகள், தங்க மோதிரம் கொடுத்து, லட்சம் கோடி ரூபாய் ஊழலுக்குக் காரணமான ஒருவரை எம்.பி.யாக்கி திரும்ப அதே இலாகாவையே தந்துவிட்டார் மன்மோகன்சிங். அதே இலாகாவைத் தருகிற அளவுக்கு என்ன கட்டாயம்? அப்படி யாராவது வற்புறுத்தி இருந்தால், பெரும்பகுதி ஊழல் பணம் அவரது வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.
ஈரோடு தொகுதி வெற்றியால், நமது இயக்கத்துக்கு ஒரு உந்துதல் கிடைத்து இருக்கிறது. கவலைப்படுவதற்கு ஒன்றும் கிடையாது. பண வெள்ளத்தைத் தாண்டி நீங்கள் இந்த வெற்றியைப் பெற்று இருக்கிறீர்கள்.
மே 6 ஆம் தேதி அன்று ஈரோட்டில் புறப்பட்டு, வெள்ளகோயிலுக்குப் போகிறபோது, நம் மதிப்புக்கு உரிய துரை.ராமசாமி அவர்கள், என்னை வரவேற்றார். அவருடைய இயல்புக்கு, நெடுஞ்சாலையில் காத்து இருந்து வரவேற்பது என்பதெல்லாம் உண்மையில் அது நம்மைப் பெருமைப்படுத்திய காரியம். நமது வெள்ளகோயில் பெரியசாமி, வெள்ளகோயில் சண்முகம் இந்த இயக்கத்துக்கு வித்து ஊன்றிய காலத்தில் இருந்து எனக்குத் தோள் கொடுத்து இருக்கக்கூடிய என் உயிரான சகோதரர்களுக்கு அவர்களுக்கும் இப்பொழுதுதான் மனதில் ஒரு திருப்தி, மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
அந்தத் தேர்தல் களத்தில் பணியாற்றிவிட்டு, பகலில் அவருடைய சகோதரர் மகன் இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நான் அனைவருடனும் சேர்ந்து உணவு அருந்திவிட்டு, அந்த வீட்டில் சற்றுநேரம் ஓய்வு எடுக்கலாம் என்று மாடியில் தங்குகிற அறைக்கு அழைத்துச் சென்றபோது, மூலனூர் ஒன்றியச் செயலாளர் பட்டுத்துறை மாரிசாமி அவர்கள் அங்கே வந்தார்கள். அவரது உடல்நலத்தை விசாரித்தேன். இப்போதும், அவருக்கு உடல்நலம் சரியில்லாததால், இந்த நிகழ்ச்சிக்கு அவர் வர முடியவில்லை. அதைப் போலவே, நம்முடைய தியாகராஜன், சென்னியப்பன், சுப்பிரமணியம் ஆகியோரும் உடல்நலம் சரியில்லாததால் வர முடியவில்லை. அவர்கள் முழு உடல் நலம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் நல்ல நலத்துடன் இயக்கத்துக்குப் பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
பட்டுத்துறை மாரிசாமி அவர்கள் என்னிடம் எப்பொழுதும் உரிமையாகப் பேசுவார். ‘நான் காலையில் இருந்து பார்க்கிறேன். வெயிலில்கூட மக்கள் திரண்டு வந்து வரவேற்கிறார்கள். நமது கணேசமூர்த்தி உறுதியாக வெற்றிபெற்று விடுவார். நான் இன்றைக்கு மகிழ்ச்சியோடு இருக்கிறேன்’ என்று சொன்னவுடன், அவர் என்னிடம் மகிழ்ச்சியாகப் பேசவில்லை.
‘கணேசமூர்த்தி உறுதியாக வெற்றி பெற்று விடுவார். நீங்கள் அதைப்பற்றிக் கவலையேபட வேண்டாம். எங்கள் கவலை எல்லாம் இப்பொழுது உங்களைப்பற்றித்தான். விருதுநகர் தொகுதியைப் பற்றித்தான். வருகிற செய்திகள் நன்றாக இல்லை. நிறைய பணத்தைக் கொட்டுகிறார்கள் என்று எங்களுக்குத் தகவல் வருகிறது. நீங்கள் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். மற்ற நிகழ்ச்சிகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, முதலில் உங்கள் தொகுதிக்குச் செல்லுங்கள். அங்கு அதிக நாட்களைச் செலவழியுங்கள்.
எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்கிறது’ என்று அவர் கவலையோடு என்னிடம் சொன்னார். நான் ஒன்றும் மறுத்துச் சொல்லவில்லை.அவரிடம் சரி அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னேன்.
என்னுடைய பயணத் திட்டத்தை எப்படி மாற்ற முடியும்? நம்முடைய நான்கு தொகுதிகளுக்கு மட்டும் அல்ல, அண்ணா தி.மு.க. - பாட்டாளி மக்கள் கட்சி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என எல்லாத் தொகுதிகளுக்கும் நான் நாட்களை ஒதுக்கித் தந்து இருந்தேன். அது ஏடுகளில் வரவில்லையே தவிர,வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, திருவண்ணாமலை இந்தப் பகுதிமுழுவதும் பிரச்சாரம் செய்துவிட்டு, அதைப்போலவே, தஞ்சை, கோவை, மதுரையில் இரண்டுநாட்கள், தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, வெற்றிபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட தென்காசியில் பிரச்சாரம் என்று பயணத்திட்டத்தை அந்த 20 நாட்களுக்குப் பிரித்து வகுத்து விட்டேன்.
பொதுக்குழுவுக்குப் பின்னர்தான் பிரச்சாரத்துக்குச் செல்ல முடிந்தது. அதற்கு முன்னர் நான் வெளியில் செல்ல முடியவில்லை. விருதுநகர் உறுதியாக வெற்றிபெறும் என நம்பியதற்குக் காரணம், நான் அந்தத் தொகுதியில் நல்ல பணி புரிந்து இருந்தேன். மனித நேயப் பணிகளைச் செய்து இருந்தேன்.
ஆனால், கவனக்குறைவு என்று தயவுசெய்து கருதாதீர்கள். நான் வெற்றி பெற்று விடுவேன் என்று அதிக நம்பிக்கையில் இருந்ததாக கந்தசாமி அவர்கள் சொன்னார்கள். நான் எப்பொழுதும் அதிக நம்பிக்கையில் பணியாற்றாமல் இருந்தது இல்லை. எல்லைமீறிய பணம் கொட்டப்பட்டது. முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு பல வியூகங்களை வகுத்துக் கொடுத்தார், அவர் பிள்ளைகள் மூலம், அமைச்சர்கள் மூலம் - அவர்களது கட்சியின் பிரமுகர்கள் மூலம். அதை எல்லாம் நான் இங்கு விவரிக்க விரும்பவில்லை.
அதை நான் கடைசியில் உணரமுடிந்தது. சிலரைப் போட்டியிட வைத்தார்கள். சிலரைப் போட்டியில் இருந்து விலக்கினார்கள். சிலரைப் போட்டியில் இருந்து விலக வைத்தார்கள். ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தார்கள். இவை எல்லாவற்றையும்விட பல வாக்குச்சாவடிகளில் கடைசி ஒருமணிநேரத்தில் 20 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஆகவே, இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறக்கூடும் என்று நம்பி இருந்த நிலையில், 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற இயலாமற் போயிற்று.
அண்ணன் துரைசாமி அவர்கள் சொன்னார்களே, வீட்டில் இருந்து கைக்காசைக் கொண்டுவந்து செலவழித்து நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பத்தரை மாற்றுத் தங்கங்கள் இந்தக் கட்சியில் இருக்கிறபோது எதைப்பற்றி எனக்கு கவலை இருக்கிறது?
ஒரு படிவத்தின் விலை இரண்டு ரூபாய்தான். ஆனால், மாவட்டச் செயலாளர்கள் கழகத்துக்கு ஒரு உந்துதல் தரவேண்டும் என்பதற்காக என்னிடம் வந்து படிவங்கள் பெறவேண்டும். அதற்கு 100 ரூபாய் தந்தால் கட்சிக்கு நிதிசேரும் என்று அவர்களாக அந்தத் திட்டத்தை வகுத்தார்கள். இந்தத் திட்டத்தை நான் வகுக்கவில்லை. மற்ற மாவட்டச் செயலாளர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.
தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் தொடங்கி வைத்தார். இன்றைக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?தமிழ்நாட்டில் முதன்முதலாக நிதியைத் திரட்டிய போது நீங்கள்தான் 60 இலட்சம் கொடுத்து அன்றைக்கு முதல் இடத்தைப் பெற்றீர்கள். இன்றும் முதல் இடத்தைப் பெற்று இருக்கிறீர்கள். 1,55,750 ரூபாய் படிவத்துக்குத் தந்து இருக்கிறீர்கள். இரண்டாவது இடத்தில் நெல்லை மாவட்டம் இருக்கிறது. 82,000 ரூபாய். அநேகமாக மூன்றாவது இடம் என்று நினைக்கின்றேன், கரூர் மாவட்டம் 72,000 ரூபாய். இதெல்லாம் ஏற்பாடு செய்து தரவில்லை. கேட்காமலேயே கிடைக்கிற தொகை.
இங்கே இப்படிக் கொடுக்க வேண்டும் என்று பூங்கொடி சுவாமிநாதன் சொன்னபோது, நமது மாவட்டச் செயலாளர் சொன்னபோது, நான் ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டே இருந்தேன். ஊருக்குத் திரும்பிப் போவதற்கு மட்டும் கொஞ்ச பணத்தைப் பையில் வைத்துவிட்டு, மிச்சப் பணத்தை எல்லாம் கொடுத்து விட்டுப் போய்விட்டார்கள். நான் சொன்னேன், அவர்கள் ஊருக்குத் திரும்பிப் போக வேண்டாமா? என்று. இது நமது குடும்பத்துக்குள் பேசுகிறமாதிரி.
நமது இயக்கத்தில் பந்த பாசமும், கொள்கை உறுதியும், இலட்சியதாகமும் இருக்கிற போது இந்த இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது.
இயக்கத்துக்கு ஆபத்து என்கிற பேச்சுக்கே இடம் இல்லை. அது முடிந்துபோயிற்று. எந்த எதிரியும் இந்த இயக்கத்தின் பக்கம் நெருங்க முடியாது. ஒவ்வொரு கட்டத்திலும் திட்டமிட்டு கருணாநிதி அழிக்க நினைத்தபோதிலும், ஒவ்வொன்றிலும் நாம் மீண்டு வந்து இருக்கிறோம். அவருடைய முயற்சியை முறியடித்து இருக்கிறோம். அவருடைய திட்டத்தைத் தவிடு பொடியாக்கி இருக்கிறோம்.
இந்த இயக்கம் 15 ஆண்டுகளைக் கடந்து இருக்கிறது. அவரால் இதை அழிக்க முடியவில்லை. இனி விரும்புகிற வெற்றியைப் பெறுவது எப்படி? தமிழகத்துக்கு நல்ல மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது எப்படி? அந்தக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
நான் இராமகிருஷ்ணனுக்கு அதைத்தான் சொன்னேன். எங்கேயாவது ஒன்றிரண்டு தேள் கொட்டும். அதுதானே அதன் இயல்பு. அப்படி சில தேள்கள் ஆங்காங்கு இருக்கிறது. பாம்பு என்றால் கொத்தத்தான் செய்யும். அய்யோ பாம்பு கொத்துகிறது என்றால் அதன் இயல்பே அதுதானே.
அப்படி சில நச்சுப் பாம்புகள் சில கருந்தேள்கள், பொய்ச்செய்திகளை ஏடுகளுக்குத் தருகின்றன. அவர்களுக்கு ஒன்றும் நோக்கம் கிடையாது. இப்பொழுது இருப்பது பரபரப்பு ஜெர்னலிசம். 20 ஆண்டுகளுக்கு முன்பு இது கிடையாது.
ஆகையால் இப்படி செய்திகள் வரத்தான் செய்யும்.
அதை எல்லாம் அலட்சியப்படுத்த வேண்டும். அதைப்பற்றிக் கண்டுகொள்ளவே கூடாது. விளக்கம் சொல்ல வேண்டுமா அதற்கு? வீதியில் நின்று கொண்டு நான் கற்பு நிறைந்தவள் என்று எந்தக் கற்புக்கரசி சொல்வாள்? அந்த வார்த்தையை உதட்டில் உச்சரிப்பதே தனக்கு இழுக்கு என்று கருதுவாள். ஆகையால் நீங்கள் இதையெல்லாம் கொஞ்சம்கூட பொருட்படுத்தக்கூடாது.
ஒரு துரும்பைக்கூட இங்கிருந்து அசைக்க முடியாது. இந்த நேரத்தில் போய் இருக்கிறார்கள். நாமாக வெளியே பிடுங்கிப் போடவில்லை. களைகளாக அகன்று இருக்கிறது. அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? பயிராக வளர்த்தோம்; பதராகப் போய்விட்டது. இந்த நேரத்தில் போய் பிடுங்கிப் போடவா, இருந்து விட்டுப் போகிறது என்று நினைத்தோம். காற்றில் பதர்கள் போய் விட்டன. அவ்வளவுதான்.
543 எம்.பி.க்களில் ஒரு ஆள் தானே உங்க ஆள் போய் இருக்கிறார் என்றார்கள். காட்டில் ஒன்று தானய்யா சிங்கம் (பலத்த கைதட்டல்). மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு கொள்கைச் சிங்கம் கணேசமூர்த்தி.
நாடாளுமன்றத்தில் பேசாததை எல்லாம் பேசியதாக, பத்திரிகைக்கு எழுதி அனுப்புகிற பேர்வழிகளை எல்லாம் எனக்குத் தெரியும்.ஆனால், நமது கணேச மூர்த்தி அவர்கள் என்ன உரையாற்றினாரோ, அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை மொழிமாற்றம் செய்து ஏடுகளுக்கு அதையும் சேர்த்து அனுப்பினோம்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் இது ஒரு முக்கியமான காலகட்டம். அடுத்த மாநாடு எங்கே? திருச்சியில்.. அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு.
நான் கொஞ்சம் வித்தியாசமான வேலைத்திட்டத்தை நினைக்கிறவன், எல்லா வற்றிலும். தோற்றவுடன், அய்யோ தோற்றுப் போயிற்றே என்று நினைக்கவில்லை. அடுத்த ஆறு மாதங்களுக்கு என்ன வேலைதிட்டம்? என்றுதான் முடிவு செய்தேன். நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள் கடந்த 15 ஆண்டுகளில். 3 மாதத்துக்கு ஒரு வேலைத் திட்டம். 6 மாதத்துக்கு ஒரு வேலைத்திட்டம் என்றே கொண்டு வந்து இருக்கிறோம்.
எழுச்சிப் பேரணி, 1994 நடைப்பயணத்தில் இருந்து 1996 தேர்தல் தோல்விக்குப்பிறகு வரிசையாகப் பாருங்கள். திருச்சி மாநில மாநாடு, ஈரோடு மாநாடு, காஞ்சி மாநாடு, சென்னை மாநாடு, மதுரை மாநாடு, மறுமலர்ச்சிப் பயணம், சைக்கிள் பேரணி, முல்லைப் பெரியாறு, காவிரி நடைப்பயணங்கள், உண்ணாநிலை அறப்போராட்டங்கள் என எத்தனையோ நிகழ்ச்சிகள்.
அதைப்போல அடுத்த 3 மாதகால, 6 மாதகாலத்துக்கு ஒரு வேலைத்திட்டம் வைத்து இருக்கிறேன். அடுத்த வேலைத்திட்டம்தான் உறுப்பினர் சேர்ப்பது. தேர்தலில் தோற்ற நேரத்தில் உறுப்பினர் சேர்க்கச் சொல்கிறாரே என்று ஒன்றிரண்டு தோழர்களுக்கு எண்ணம் வந்தது. அது தப்பு இல்லை. இப்பொழுது தோல்வி அடைந்து இருக்கிறோமே, நான்கு இடத்திலும் வெற்றிபெற்று நீங்கள் உறுப்பினர் சேர்க்கச் சொன்னால், இன்னும் கொஞ்சம் வேகமாக இருக்கும்.
இப்பொழுது இந்தநேரத்தில் மனதில் சோர்வாக இருப்பார்களே, இப்பொழுது சென்று உறுப்பினர் சேர்க்கச் சொன்னால் எப்படி என ஒன்றிரண்டு தோழர்கள் என்னிடம் கலந்து பேசினார்கள்.
நாங்கள் விளக்கம் சொன்னோம். அண்ணன் துரைசாமி இருந்தார். மாவட்டச் செயலாளர்கள் இருந்தார்கள். அனைவரும் உட்கார்ந்து பேசினோம். அப்பொழுது நான் சொன்னேன். இதுதான் சரியான நேரம். மக்களிடம் நம்மீது நல்லெண்ணமும், பரிவும் இருக்கிறது. ஒரு அலட்சியம் இல்லை. நான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று வருகிறேன். மக்களைக் கவனிக்கிறேன். கொடிகட்டிய காரில் முன்சீட்டில் உட்கார்ந்து செல்லும்போதும், காரில் இருந்து இறங்கி தெருவில் அழைத்துக் கொண்டு செல்லும்போதும் அங்கு உள்ள மக்களை அவர்களது முகங்களை கணப்பொழுதில் பார்ப்பேன். அதில் அலட்சியம் தெரிகிறதா? வெறுப்பு இருக்கிறதா? என்று.
சிலகாலங்களில் அலட்சியம் இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். இப்பொழுது அலட்சியத்தைப் பார்க்கவில்லை. அன்பைப் பார்க்கிறேன் மக்கள் முகங்களில். நம் இயக்கத்தின்மீது ஒரு பரிவைப் பார்க்கிறேன். இந்தப் பரிவும், அன்பும்தான் நமக்கு முதலீடு.
நான் தோற்று இருக்கக் கூடாது என்று பலர் பேசுவதாகச் சொன்னீர்கள் அல்லவா? அதுதான் இன்றைக்கு நமக்கு வண்டல் உரம். நம்மீது ஒரு நல்லெண்ணம் இருக்கிறது அல்லவா? அதுதான் நம் இயக்கத்துக்கு மூலதனம். ஒரு அரசியல் கட்சிக்கு அதுதான் மூலதனம். எனவே, இந்தக் கட்டத்தில் நீங்கள் முயற்சி செய்யுங்கள்.
கிராமத்தில் பேசிக் கொள்வார்கள். என்னப்பா, மழை பெய்து இருக்கிறதே, எப்படி? பதத்துக்குப் பெய்து இருக்கிறதப்பா என்பார்கள் கிராமத்தில். பதத்துக்குப் பெய்து இருக்கிறது என்றால், அப்போது உழவு பிடிக்கலாம், விதைக்கலாம். அப்பொழுதுதான் முளைக்கும். பெரிய வெள்ளமாக வந்து விட்டாலும் உடனே விவசாயம் செய்ய முடியாது. இரண்டு தூறல் விழுந்தாலும் ஒன்றும் முடியாது.
ஆடிப்பட்டம் தேடிவிதை என்பார்கள்; பருவத்தே பயிர் செய் என்பார்கள். இதெல்லாம் நமது விவசாயிகள் முன்பு சொன்னது. நம்முடைய தாய்மார்களுக்கு எளிதாகச் சொன்னால் புரியும். ஏனென்றால், அவர்கள் தயார் செய்தால்தான் நாம் சாப்பிட முடியும். தோசை போட வேண்டும் என்றால், வெறும் மாவை எடுத்து கல்லில் போட்டால் தோசை வராது. அடுப்பை மூட்டி தோசைக் கல்லைக் காய வைத்து எண்ணெயை எடுத்து லேசாக ஊற்றி, உங்களுக்கு உரிய கைப்பக்குவத்தில் மாவைச் சுற்றி விட்டு, இரண்டு நிமிடத்தில் அதைப் புரட்டிப் போட்டால் சுவையான தோசை கிடைக்கும்.
கல் சூடாக இருக்கும்போதுதான் மாவை ஊற்ற வேண்டும். அதுபோல மக்கள் மனதில் நம்மீது நல்லெண்ணம் இருக்கிற நேரத்தில், உடனே அணுகுங்கள். நீங்கள் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று சொல்லுங்கள். புதிய இளைஞர்களைக் கட்சியில் சேருங்கள். இங்கு நிறைய இளைஞர்கள் வந்து இருக்கிறார்கள் எனக்கு மகிழ்ச்சியே அதுதான்.
1993இல் இளைஞர்களாக இருந்த பலர் இப்பொழுது குடும்பÞதராக ஆகிவிட்டீர்கள். திருமணமாகி குழந்தைகள் எல்லாம் வந்தாகிவிட்டது. நான் அதைத்தான் கவனிக்கிறேன். பதினைந்து ஆண்டுகள் ஆயிற்று அல்லவா? அன்றைக்கு 20 வயதானவர்களுக்கு இன்றைக்கு 35 வயதாகி விட்டது. அடுத்த தலைமுறை இளைஞர்கள் நம்மீது பற்றுதலாக இருக்கிறார்கள். சேலத்தில் நேற்று சட்டக் கல்லூரி மாணவர்கள், 50 பேர் கட்சியில் சேர்ந்தார்கள். அந்தத் தம்பிகள் அனைவரும் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தவர்கள்.
ஆகவே, இளைஞர்களிடம் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அரசியல் மீது விரக்தியும் வெறுப்பும் பல பகுதிகளில் வளர்ந்து வருகிறது. அரசியல் என்பதே, ஊழல் கூடாரம் தானோ? அதிகாரம் என்பதே கொள்ளை அடிப்பதற்குத்தானோ? தேர்தல் என்பதே கொள்ளை அடித்த பணத்தை விநியோகித்து ஓட்டுகளை விலைக்கு வாங்கத்தானோ? இந்த நாடு எங்கே போகிறது? மக்கள் ஆட்சிக்கு எவ்வளவு பெரிய கேடு நேர்ந்து வருகிறது என்று கவலைப்படுகிற மக்கள் மனதில் ஒரு வெறுப்பு உருவாகி இருக்கிறது.
ஆனால், இந்த விஷச்சுழலில் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்க முடியும். இன்று மக்கள் ஆட்சிக்கு இருமுனைத் தாக்குதலை கருணாநிதி நடத்துகிறார். அண்ணா ஜனநாயகப் பேரொளியாகத் திகழ்ந்தார். அண்ணா மக்கள் ஆட்சி ஒளிச்சுடரை துணைக்கண்டத்துக்கே உயர்த்திக் காட்டினார். அந்தத் தென்னகத்துத் திருவிளக்கு இந்தியத் துணைக்கண்டத்துக்கு, மக்கள் ஆட்சிக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்ந்தது, காஞ்சித் தலைவனின் வழிகாட்டுதலில்.
இன்று என்ன நிலைமை? பெருங்கேடு சூழ்ந்து விட்டது தமிழ்நாட்டில். எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, வீடுவீடாகச் சென்று பணத்தைத் திணிக்கின்ற கொடுமை.. எங்கோ அங்கொன் றும் இங்கொன்றும் இலைமறைகாயாக இருந்தது. ஒரு ஊருக்குச் சென்று, உங்கள் ஊருக்குக் கோயில் கட்டித் தருகிறோம், சத்திரம் கட்டித் தருகிறோம், அல்லது உங்கள் ஊருக்கு ஏதாவது செய்கிறோம் என்று வெளியில் தெரியாமல் சின்னச்சின்ன உதவிகள் செய்வது தேர்தல்களில் நடந்தது.
ஆனால், வரிசையாக வீடுதோறும் சென்று விடியற்காலை 4 மணிக்குக் கதவைத்தட்டி கவரில் பூத் சிலிப்பும், 3,000 ரூபாயும் போட்டுவிட்டு வருவது தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நடந்தது கிடையாது.
இதனால் மக்கள் திகைத்துப் போனார்கள். எத்தனையோ வீடுகளில் 1000 ரூபாயை ஒருசேரப் பார்த்தது இல்லை. எத்தனை செலவுகள் வீடுகளில்? மருத்துவச் செலவுக்கு, மருந்து வாங்குவதற்குப் பணம் இல்லாமல் இருந்து இருக்கும்.
கிழிந்த துணிகளைப் போட்டுக்கொண்டு தங்கள் பிள்ளைகள் வருவதைப் பார்த்து வேதனைப்பட்டு ஒரு புதுத்துணி வாங்கிக் கொடுக்க வழியில்லையே என்று எத்தனை ஏழைக் குடும்பங்கள் ஏங்கித்தவித்து இருக்கும். அப்படிப்பட்ட சூழலில், 2,000, 3,000, 4,000 ரூபாய் வீட்டுக்கு வருகிறது என்றால் அதைத் தூக்கி வீதியில் எறியவா மனம் வரும்?
அதைப்போல உழைக்கின்ற மக்கள், கஷ்டப்படுகிற மக்கள் வீடுகளில் 2,000 ரூபாய் கொடுக்கிற போது இது திடீர் தாக்குதல், இதற்கு முன் அவர்களுக்கு அனுபவம் இல்லை. இது கொள்ளை அடித்த பணம், ஊழல் பணம் இதை வாங்கக்கூடாது என்கிற அளவுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நிலைமை ஏற்படவில்லை. எடுத்த எடுப்பில், திடீரென்று கொடுத்த உடனே, அதில் ஏற்பட்ட மனப் போராட்டத்தில் வாக்குகள் அந்தப் பக்கம் விழுந்தது. இது நிரந்தரமாக விழாது. இன்னும் பணத்தைக் கொண்டு வருவார்கள். இன்னும் அதிகமாகக் கொடுப்பார்கள். ஏனென்றால், நிறையக் கொள்ளை அடித்து இருக்கிறார்கள். மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து இருக்கிறார்கள்.
ஆனால், மின்வெட்டால் ஏற்பட்ட கஷ்டத்தை, நட்டத்தை நீங்கள் மறந்து விடாதீர்கள் அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது என்று வையுங்கள் சட்டசபை தேர்தலுக்கு. நான்கு ஆண்டுகால கணக்குப் போடுங்கள். இன்றைக்கு உள்ள கணக்குப்படி மாதம் ஆயிரம் ரூபாய் நட்டம். ஆண்டுக்கு 12,000 ரூபாய் மூன்று ஆண்டுகளுக்கு 36,000 ரூபாய்.. அடுத்த ஆண்டு தேர்தல் வரும்போது 48,000 ரூபாய். உங்கள் தலையில் கல்லைப் போட்டவர்கள் இவர்கள், இன்றைக்கு 5000 ரூபாய் கொடுத்து உங்கள் ஓட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அதை வாங்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் பணம். இவர்கள் திரும்பவும் ஆட்சிக்கு வந்தால், திரும்பவும் கொள்ளை அடிப்பார்கள். எனவே தோற்கடியுங்கள். இந்த விழிப்பு உணர்வை நாம் ஏற்படுத்த முடியும்.
ஒரு பக்கத்தில் நமது இயக்கம் வைரம் பாய்ந்து கொண்டு இருக்கிறது. கொள்கை உரம் பெற்றுக் கொண்டு இருக்கிறது. ஆனால், அங்கே அண்ணா உருவாக்கிய இயக்கத்தின் உயிர்த்தன்மை செத்துக் கொண்டு இருக்கிறது. இலட்சிய தாகம் கிடையாது, கொள்கை கிடையாது. அதனுடைய விளைவு என்னவாகும் என்றால், அந்த இயக்கத்துக்கு ஒரு சரிவு வருகிறபோது, தூக்கி நிறுத்த வாய்ப்பே கிடையாது.
இதற்குமுன்பு, புரட்சித்தலைவர் ஆட்சியில் இருந்த காலத்தில் அன்றைய தி.மு.க. நிலைவேறு - இன்றைய தி.மு.க. நிலைமை வேறு. இன்று அவருடைய குடும்பத்துக்காகத்தான் கட்சி நடத்துகிறார், ஆட்சி நடத்துகிறார். அவருடைய மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள் இந்தக் குடும்பத்தைத்தான் அதிகார பீடத்தில் உட்கார வைத்து இருக்கிறார். அதற்கு விளக்கம் தருகிறார். தங்கச் சங்கிலி போட்டு மகிழ்கிறார்.
என்ன ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திரனா? கரிகாலன் மகனா? மகேந்திரவர்மனின் மகன் மாமல்லனா? இது என்ன மக்களாட்சியா? மன்னராட்சி காலமா? அண்ணா உருவாக்கிய இயக்கம் எங்கே? இன்றைக்கு ஒரு குடும்பத்துக்காக இத்தனை இலட்சம் தொண்டர்களின் கண்ணீரை வியர்வையை இரத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்றைக்கு நான் நெஞ்சை நிமிர்த்திப் பேசுகிறேன். ஏனெனில், என்னிடம் சுயநலம் இல்லை. ஒரு போதும் இந்தக் கட்சியை என் குடும்பம் பயன்படுத்தாது. என் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்த மாட்டார்கள். இந்தக் கட்சியின் தாழ்வாரத்தில்கூட என் பிள்ளைகள் வந்து நின்றது கிடையாது. எனக்குக் கட்சிதான் குடும்பம். என் தோழர்கள்தான் உறவினர்கள் என்ற முறையில் நாங்கள் கட்சி நடத்திக் கொண்டு இருக்கிறோம்.
அதிகார பீடத்தில் கிடைத்து இருக்கிற பதவிகளால் செய்யப்படும் விளம்பரங்களால், ஏடுகளில் ஊடகங்களில் பிரதான இடங்களைப் பெற்று இருக்கிற நிலைமை நீடிக்காது.
இருமுனைத் தாக்குதல் என்று சொன்னேன். ஒன்று, பணம் கொடுத்து மக்கள் ஆட்சித் தத்துவத்தை அழிக்கிறார். இன்னொன்று, தன் குடும்பத்துக்காகவே கட்சியை ஆட்சியை நடத்துகிறார். இந்தக் கேடு தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் இதுவரை நடக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் நடக்கவில்லை. புரட்சித் தலைவரின் அண்ணா தி.மு.க. ஆட்சியிலும் நடக்கவில்லை. இப்பொழுது நடக்கிறகேடு தமிழக வரலாற்றிலேயே நடக்கவில்லை. வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து இன்றுவரை தேர்தல்களில், மக்களாட்சிக்குக் கேடுசெய்கின்ற ஊழல் பணத்தின் ஆதிக்கம் தலைகாட்டியது இல்லை.
இவ்வளவு சுயநலம் வந்தபிறகு, இவ்வளவு கொள்ளை பணத்தைச் செலவழித்து தேர்தலில் ஓட்டு வாங்கலாம் என்று அக்கிரமத்தைச் செய்தபிறகு, குடும்பத்தினருக்குப் பதவி வாங்குவதற்கு, தில்லிக்குச் சென்று காத்திருந்து மந்திரி சபையில் கேட்ட பதவிகளை வாங்குவதற்கு, பிளாக்மெயில் செய்து பதவிகளைப் பெற்றவரா, இனத்தைப் பற்றிக் கவலைப்படப் போகிறார்?
தமிழ் இனத்துக்கு அவர் செய்து இருக்கின்ற கேடு, வேறு யாரும் செய்தது இல்லை. இங்கே பேசியவர்கள் மிகுந்த வேதனையுடன் சொன்னார்கள். திராவிட இயக்கத்தின் வரலாற்றில் இது ஒரு மிக சோதனையான வேளை. ஏன் தெரியுமா? தமிழர்களின் நலனுக்காக அண்ணா ஒரு இயக்கத்தை உருவாக்கினார், தனிநாடு கேட்டார், திராவிட நாடு கேட்டார். பின்னர், ‘திராவிட நாட்டை நாங்கள் கைவிட்டுவிட்டோம். ஆனால், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’ என்றார். முதலமைச்சரானபிறகும்கூட தனிநாடு கேட்டதற்கான காரணங்கள் உயிரோடு இருக்கின்றன என்று சொன்னார்.
இன்றைக்கு அந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற கருணாநிதி, ஆட்சியில் இருக்கிற நேரத்தில், இந்திய அரசு துரோகம் செய்தது. தமிழ் இனத்தை அழித்தது. இங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கவில்லை. தி.மு.க. பெயரில் ஆட்சி. அங்கே இனத்தை அழிக்கின்ற கொடுமை நடந்தது. உலகில் எங்கே நடக்கும் இந்தக் கொடுமை? எந்த இனத்தில் நடக்கும்? எந்த இனம் இதை அனுமதிக்கும்?
யூதர்கள் தங்களுக்கு என்று ஒரு நாடு அமைக்கத் தீர்மானித்தபோது, அமெரிக்கச் செல்வந்த யூதர்கள் பணத்தை அள்ளிக் கொடுத்தனர். இரண்டு கப்பல்களில் ஆயுதம் வாங்கினார்கள். எங்கோ 6,000 மைல்களுக்கு அப்பால் இருக்கிற அமெரிக்காகாரன், தன் தொப்பூள்கொடி உறவாக இருந்தவன் யூத நாட்டுக்காரன் என்று இஸ்ரேல் என்ற நாட்டை அமைப்பதற்கு உதவினான்.
இன்றைக்கு அதே அமெரிக்காவின் குடியரசுத் தலைவர், கெய்ரோவுக்குச் சென்று பேசுகிறார் பாலஸ்தீனியர்களுக்கும் ஒரு தனி நாடு வேண்டும். அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இரு தேசங்கள். ஒன்று இஸ்ரேல் நாடு - இன்னொன்று பாலஸ்தீனம். இந்த இரண்டையும் ஏற்றுக் கொண்டால்தான், பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படும். அடுத்துச் சொல்கிறார் பாலஸ்தீனியர்களின் பூர்வீக பூமி என்று கருதப்படுகிற இடத்தில் யூதக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும் என்று சொல்கிறார். அமெரிக்க யூத கோடீஸ்வரர்கள் தயவில் அங்கே அரசியல் நடத்தவேண்டிய நிலைமையில் இருக்கிற பாரக் ஒபாமா சொல்கிறார்.
இங்கு என்ன நிலைமை? இந்திய அரசு சொல்கிறது. இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற நாங்கள் இராணுவ உதவி செய்தோம் என்று வெட்கமில்லாமல் துணிச்சலாக டாக்டர் மன்மோகன் சிங் எனக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.
எங்கள் இன மக்கள் சாவுக்கு நீங்கள் காரணம். ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் இந்திய அரசு காரணம். தமிழர்கள் சிந்துகிற ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.. வருங்காலத்தில் நீங்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவீர்கள் என்று நான் கடிதம் எழுதி அனுப்பி இருந்தேன்.
இந்தக் கடிதத்துக்குப் பிரதமர் எனக்குக் கடிதம் எழுதுகிறபோது முதல் வாக்கியமே ‘உங்கள் கடிதத்தின் வாசகங்கள் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டன’ என்றுதான் எழுதி இருந்தார். எனக்குத் தனிப்பட்ட முறையில் அவர்மீது பகையா? எனக்குத் தனிப்பட்ட கசப்போ வெறுப்போ கிடையாது. அவர் இந்த நாட்டின் - நான் குடி மகனாக இருக்கின்ற நாட்டின் பிரதமர். நான் இந்தியக் குடிமகன். எங்கள் தொப்பூள் கொடி உறவுகள் கொல்லப்படுவதற்கு இந்த நாட்டின் ஆயுதங்கள் தரப்பட்டால், எங்கள் உள்ளம் கொதிக்காதா? இரத்தம் கொதிக்காதா?
சிலருக்கு வேண்டுமானால் கேலியாகத் தெரியும். வைகோ ஆவேசமாகப் பேசினார் என்று பேசலாம். இதுவெறும் ஆவேசம் அல்ல. எங்கள் இரத்தத்தில் கொதித்துக் கொண்டு இருக்கும் உணர்ச்சி. இந்த உணர்ச்சிதான் முத்துக்குமாரைத் தீக்குளிக்க வைத்தது. இந்த உணர்ச்சிதான் பதினான்குபேரைத் தீக்குளிக்க வைத்தது. இப்படிப்பட்ட உணர்ச்சிதான் சிவலிங்கம், சின்னசாமி, அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, கீரனூர் முத்து ஆகியோருக்கு தணலை தங்கள் மேனியில் போட்டு சாகத் தூண்டியது.
இது தமிழ் உணர்ச்சி - இது மான உணர்ச்சி - தந்தை பெரியார் ஊட்டிய உணர்ச்சி - அண்ணா ஊட்டிய உணர்ச்சி - பட்டுக்கோட்டை அழகிரி ஊட்டிய உணர்ச்சி - திராவிட இயக்கத்தின் தீரர்கள் ஊட்டிய உணர்ச்சி - எங்கள் நாடிநரம்புகளில் ஓடுகிற குருதி ஓட்டத்தில் கலந்து இருக்கிற உணர்ச்சி - நாங்கள் சாகிறவரை இந்த உணர்ச்சி எங்கள் உடம்பை விட்டு அகலாது.
என் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று சொன்னார்கள். எனக்கும் அந்த ஆசைதான் பதவிகளுக்காக அல்ல. பதவியில் உட்கார வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. கொள்கைக்காக பொதுவாழ்வுக்கு வந்தோம். இலட்சியத்துக்காக பொதுவாழ்க்கைக்கு வந்தோம். தமிழ் இன மேம்பாட்டுக்காக அண்ணாவின் இயக்கத்துக்கு வந்தோம். நம் வாழ்வை அதற்காகத் தந்தோம். அதற்காகவே இனியும் பாடுபடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக