வெள்ளி, 3 ஜூலை, 2009

இலங்கை அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் “தி ஆஸ்திரேலியர்” என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.
தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் திரட்டிய தகவலின் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
புல்மொட்டையில் உள்ள அகதிகள் முகாமில் பெண்களை அதிகாரிகளே கட்டாய விபசாரத்தில் தள்ளுகின்றனர். இதுபற்றி மேல் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அகதி முகாம்களில் உள்ள ஒவ்வொரு கூடாரத்திலும் 3 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். குறுகிய இடத்தில் 3 குடும்பங்கள் தங்கி இருப்பதால் ஒருவருக்கு ஒருவர் இடையூறாக உள்ளது.
அங்கு வரும் ராணுவத்தினர் அகதிகளுக்கு தேவையான இடத்தை ஒதுக்கவும், மற்ற தேவைகளை வழங்கவும் லஞ்சம் வாங்குகின்றனர்.
முகாம்களில் உள்ள குடும்பத்தினர் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டு உள்ளனர். விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படும் ஆண்களும், பெண்களும் வேறு இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களை பற்றிய எந்த விவரங்களையும் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. அவர்களை அழைத்து சென்றவதற்கான ஆதாரம், அடையாள சீட்டு போன்றவையும் வழங்கப்படவில்லை.
முகாமில் இருப்பவர்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கவில்லை. முகாமில் பெரும் நெருக்கடி நிலவுகிறது. இதனால் மக்கள் கிளர்தெழ தொடங்கி உள்ளனர்.
குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாக வெவ்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதால் ரத்த உறவுகளை சந்திக்க மற்ற முகாம்களுக்கு செல்ல முயச்சிக்கின்றனர். இதற்கு ராணுவம் மறுப்பதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இப்படி கிளர்ச்சியில் ஈடுபட்ட 2 அகதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். முகாம்களில் இருப்பவர்களில் 80 சதவீதம் பேர் இந்த வருட இறுதிக்குள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அறிவித்து உள்ளன. ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக