திங்கள், 29 ஜூன், 2009

இன ஒற்றுமை குறித்து கருணாநிதி பேசுவதா?:
வைகோ



விழுப்புரம், ஜூன் 28: ஈழத்தில் நடத்திய இன அழிப்புப் போருக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுடன் துணை போய்விட்டு இன ஒற்றுமை குறித்து க கருணாநிதி பேசுவது அபத்தமானது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம் சாட்டினார்.

விழுப்புரம் மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று வைகோ பேசியது:


"எல்லோரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் இலங்கையில் இதுபோல் நடந்திருக்குமா என்று கருணாநிதி கூறுகிறார். இலங்கையில் இன அழிப்புப் போரை நடத்திய காங்கிரஸ் அரசுக்கு துணை போய்விட்டு இப்போது இவ்வாறு பேசுவது அபத்தமானது. ஈழத்தில் குழந்தைகள், பெண்கள் என்று பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதை எதிர்த்து குரல் கொடுக்காமல் இப்போது இன ஒற்றுமை குறித்துப் பேசுகிறார் கருணாநிதி.

இரங்கல் தெரிவிக்காதவர்

ஈழப் பிரச்னை காரணமாக 14 பேர் தீக்குளித்தனர். அவர்களுக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்தாரா? ஏன் திமுக தொண்டர்கள் இருவர் தீக்குளித்தனரே அவர்களுக்குக் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.

கெüரவமான தோல்வி

திமுக கூட்டணி பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றிருக்கிறது. நகரங்களில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அங்கு இவர்கள் வாரி இறைத்த பணத்தால் பயன் ஏற்படவில்லை. கிராமப்புற மக்களுக்கு பல கஷ்டங்கள் உள்ளன. அதனால் அவர்களுக்கு கடைசி நேரத்தில் ஒரு மனப் போராட்டம் ஏற்பட்டு மாறி வாக்களித்துவிட்டனர்.
இதனை வரும் சட்டமன்றத் தேர்தலில் மாற்ற வேண்டும். நகரங்களில் ஏற்பட்ட விழிப்புணர்வை கிராமப் புறங்களிலும் ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.

மீண்டும் ஈழப்போர்

ஈழப்போர் மீண்டும் வெடிக்கும். பிரபாகரன் இறந்துவிடவில்லை; உயிருடன் உள்ளார். ராமாயணத்தில் இந்திரஜித் தன் மீது பாய்ந்த அம்பைப் பிடுங்கி போர் தொடுத்ததாக கம்பன் கூறுவான். அதற்கு இணையான வீரர் பிரபாகரன்.


தமிழ் ஈழத்தையும், விடுதலைப் புலிகளையும் நாங்கள் என்றைக்கும் ஆதரிப்போம். இதில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையில் கடைசி தமிழன் இருக்கும் வரை, மானமுள்ள தமிழர்கள் இருக்கும் வரை ஈழப்போர் ஓயாது. இலங்கையில் தமிழர்களுக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம் மட்டுமே.
நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவினர் நான் போட்டியிட்ட தொகுதியில் நன்றாகத் தேர்தல் பணியாற்றினர். பண பலத்தால் நாம் தோற்கடிக்கப்பட்டோம்' என்றார் வைகோ.

இக் கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் ஏ.கே.மணி தலைமை தாங்கினார். மாநில பொருளர் ஆர்.மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துக்கள்

கலைஞர் தன்மீது உள்ள களங்கத்தை மறைப்பதற்காக இவ்வாறு பேசியுள்ளார் என்பதை பிற்காலத் தலைமுறையினர் புரிந்து கொள்வார்கள். கட்சிகளில் ஒற்றுமையின்மையால பிளவுபட்டுப் புதிய கட்சிகள் மலரும் நாட்டில் இருந்து கொண்டு, உட்கட்சி ஒற்றுமையின்மையால் படுகொலைகள் நடக்கும் கட்சியில் இருந்து கொண்டு குடும்ப ஒற்றுமையின்மையால் நாடடைப் போர்க்களமாக்கிய குடும்பத்தில் இருந்து கொண்டு ஒற்றுமையி்ன்மை குறித்துப் பேசக் கூடாதுதான். இதை உணர்ந்து இனியாவது நாம் ஒற்றுமையுடன் இருக்கலாம் அல்லவா? பேரவலப் படுகொலைகளுக்குத் துணைநின்றமையால் இரங்கல் தெரிவிக்கா மனச் சான்றைப் பாராட்டலாம் அல்லவா? அந்த மனச் சான்று இனியேனும் விழித்து எழுந்து இனப்படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கலாம் அல்லவா? அந்த நாளை எதிர்பார்ப்போம்! அதுவரை நாம் மனித நேயத்துடன் ஈழத் தமிழர்களுக்குத் துணை நிற்போம்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/29/2009 3:44:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக