திங்கள், 29 ஜூன், 2009

"ஆங்கிலேயர்கள் வெளியேறினாலும் ஆங்கிலம் வெளியேறவில்லை'



சென்னை, ஜூன் 28: இந்தியா சுதந்திரம் அடைந்து ஆங்கிலேயர்கள் வெளியேறினாலும் ஆங்கிலம் வெளியேறவில்லை என இந்தி பிரசார சபையின் தலைவர் மற்றும் வேந்தரும், நீதிபதியுமான டாக்டர் வி.எஸ்.மலிமத் கூறினார்.

இந்தி பிரசார சபையின் 72வது பட்டமளிப்பு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் நீதிபதி மலிமத் பேசியது:
இங்கு இந்தி மொழியில் பட்டம் பெற்ற மாணவர்கள், தங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஒரு இலக்கை அடைந்து விட்டார்கள். மாணவர்கள் இங்கு பெற்ற கல்வியறிவானது அவர்கள் தங்கள் வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள உதவும்.

முறையான கல்வியானது ஒரு மாணவனுக்கு அவனின் தனித்திறமை, சமுதாயத்தின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விழிப்புடன் செயல்படச் செய்யும். இத்தகைய கல்வி ஒரு மாணவனை சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமகனாக மாற்றும். இந்தியாவின் பண்பாட்டு மதிப்பானது சத்தியம், சிவம், சுந்தரம் என்ற கொள்கைகளில் அடங்கியுள்ளது.
இந்த பண்பாட்டு மதிப்பானது கல்வியின் மூலமே மக்களிடம் விதைக்கப்பட்டது. இந்தி பிரசார சபையானது தேசிய மொழியான இந்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்துடன் காந்தியடிகளால் தோற்றுவிக்கப்பட்டது. நாம் சுதந்திரம் பெற்று ஆங்கிலேயர்களை வெளியேற்றினாலும் ஆங்கிலம் வெளியேறவில்லை.
எல்லா மாநில மக்களும் மற்ற மாநில மக்களுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர். ஆங்கிலமே இந்திய மொழிகளை ஆதிக்கம் செய்கிறது. இந்திய மொழிகளை நம் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தும்போது தான் நாம் உண்மையான சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று பொருள்.
அதனால்தான் காந்தியடிகள் தென் இந்தியாவில் இந்தி பிரசார சபையை தோற்றுவித்தார். தென் இந்திய மாநிலத்தவர்கள் இந்தியை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர் என்றார் மலிமத்.

சபையின் துணைத் தலைவர் பி.சின்னைய்யன், பொதுச் செயலாளர் சி.என்.வி.அண்ணாமலை, பொருளாளர் எஸ்.ரங்கநாதன், பதிவாளர் டாக்டர் திலிப் சிங் உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.


கருத்துக்கள்

ஆங்கிலேய அடிமையில் இருந்து மீட்டு ஆரியத்தில் அடி பணிந்து இருக்கவும் இந்திக்கு அடிமையாக வால்பிடிக்கவும் அரசு ஆயிரங் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கும் பொழுது மொழி அடிமையில் இருந்து எவ்வாறு மீள முடியும்? நாட்டு மொழிகள் அனைத்தையும் தேசிய மொழிகள் என்று சொல்லாமல் இந்தி மொழியை மட்டும் தேசிய மொழி என்று பரப்பினால் எவ்வாறு அயல்மொழி மோகம் நீங்கும்? பாரதி வழியில் 'வேறு வேறு மொழிகளைக் கற்று வீட்டு மொழிகளைக் கற்கா வீணர்களை விரட்டி அடிக்காதவரை' எங்ஙனம் ஆங்கிலம் வெளியேறும்?'நமக்குத் தேவை ஆங்கிலம் பணிப் பெண்ணாக! நமக்குத் தேவை தமிழ் வீட்டுத் தலைவியாக!' என்ற செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் வழியில் ஆங்கிலத்தைக் கற்போம் - உறவுக்காக! அன்னைத் தமிழைப் போற்றுவோம் - உரிமைக்காக!


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/29/2009 4:28:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக