Last Updated :
ஆங்கிலேயர் ஆரம்பத்தில் சீன தேசத்தில் இருந்து தோட்ட வேலைக்கு ஆட்களை அமர்த்த முடிவு செய்தனர். ஆனால் அதற்குச் செலவு அதிகமாகும் என்ற காரணத்தால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தென் இந்தியா இலங்கைக்கு அருகில் இருந்தால் அதிக செலவின்றிக் கூலிகளைக் கொண்டு செல்ல வாய்ப்பாய் இருந்தது. மேலும் இந்தியாவும் இலங்கையும் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தமையால் இதனைச் சுலபமாகச் செய்யக் கூடியதாகவும் இருந்தது. அத்துடன் அந்தச் சமயம் தமிழகத்தில் கடும் பஞ்சமும் வறட்சியும் நிலவியதால் தமிழக ஏழை மக்களை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வரவும் மிகுந்த வாய்ப்பாக இருந்தது. இதற்காக ஆள்பிடிக்கும் தரகர் பலரை ஆங்கிலேயர் தேடிப்பிடித்தனர். இத்தரகர்கள் தமிழ் ஏழை விவசாயக் கூலிகளை ஆசைகாட்டி, ஏமாற்றி இலங்கைக்கு அழைத்துப் போயினர். இதில் மிகப்பெரிய ஏமாற்று என்னவெனில், பர்மா, மலேசியா, மேற்கிந்தியத் தீவுகள், பிஜித் தீவுகள் போன்ற ஆங்கிலேயரின் குடியேற்ற நாடுகளுக்கு லட்சக்கணக்கானவர்களை அழைத்துச் சென்றபோது, அந்நாடுகளில் பரம்பரையாக வாழும் மக்களுக்கு வழங்கப்படும் சகல உரிமைகளும் சலுகைகளும் கூலிக்கு வேலைக்குப் போகும் இவர்களுக்கும் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தின் மீதே இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆரம்பத்தில் கூலி விவசாயிகள், மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய தென் மாவட்டங்களில் இருந்தே திரட்டப்பட்டனர். இப்படி இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது.* இவர்களை இந்தியாவில் இருந்து நயவஞ்சகமான முறையில் அழைத்து வந்தபோது இவர்கள் அனுபவித்த துயரக்கதைகள் ஏட்டிலும், எழுத்திலும் அடங்காதவை. தமிழ்நாட்டில் தங்கள் கிராமங்களில் இருந்து, ராமேஸ்வரத்திற்கும், தட்டப்பாறைக்கும் (தொண்டி) கால் நடையாகவே அழைத்து வரப்பட்டனர். வழியில் பல சமயங்களில் திருடர்களிடம் தங்கள் உடமைகளைப் பறிகொடுத்துவிட்டு வெறுங்கையோடு தோணிகள் மூலம் இலங்கை சென்றனர். தலைமன்னாரில் இருந்து மீண்டும் கால்நடையாக வனாந்தரங்களில் வன விலங்குகளின் அச்சுறுத்தலுக்கும், மலேரியா போன்ற கொள்ளை நோய்களின் கோரப் பிடியில் சிக்கியும், இவர்களது பயணம் இலங்கையின் மத்திய பகுதியை நோக்கித் தொடர்ந்தது. கொடுமையின் உச்சகட்டமாக, பல சமயத்தில் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் இறந்துவிட்டால், அவர்களது சடலத்துக்கு அருகே உயிருடன் இருக்கும் பச்சைக் குழந்தையையும் விட்டுவிட்டே இவர்களது பயணம் தொடருமாம். தனித்துவிடப்பட்ட குழந்தை அலறுவதைக் கண்டும் ஒன்றும் செய்ய இயலாமல் மற்றவர்கள் பயணத்தைத் தொடர வேண்டிய நிலைமையைக் கற்பனையில் காணும்போதுகூட உடலும் உள்ளமும் நடுங்கத்தான் செய்கிறது. இத்தனை இடர்களுடன் பணப்பயிர் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்ற இவர்களுக்கு அங்காவது வாழ்க்கை துயரமில்லாமல் இருந்ததா என்றால், அங்கும் துயரத்தின் தொடர்கதைதான்! தென் இந்தியாவின் கடும்வெப்பக் காலநிலைக்கு முற்றிலும் மாறுபட்ட குளிர்மிகுந்த மலைநாட்டில் சோர்வுற்ற நிலையில் இவர்கள் குடியமர்த்தப்பட்டபோது, பலர் நிரந்தர நோயாளிகளாக ஆனார்கள். குறுகிய காலத்திற்குள், குறைந்த செலவில் பெருத்த லாபம் சம்பாதிப்பதே தோட்டத்துரைமாரின் நோக்கமாக இருந்தது. எனவே, துரைமார்கள் இம்மக்களின் துன்பங்களைப் பற்றி கொஞ்சம்கூடக் கவலைப்படவில்லை. 10ல10 அடியுள்ள ஓர் அறையில் பட்டியில் மாடு அடைப்பதைப்போல் பத்து பேர் அடைக்கப்பட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் பயிர்களுக்கு உரமாக்கப்பட்டன. எதிர்த்துக் குரல் கொடுத்தால் சாட்டையும், துப்பாக்கியும் பேசின. வியர்வைக்குச் சமமாக ரத்தமும் அவர்கள் உடல்களில் இருந்து வழிவது வாடிக்கையான விஷயமாகிவிட்டது. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான அடக்கு முறையாலும், கொடுமையாலும் நூற்றுக்கு 40 பேர்கள் ஆரம்ப காலத்தில் மரணம் அடைந்ததாக நம்பப்படுகிறது. இந்த மரண விகிதத்தை ஆராய்வதற்காக 1826-இல் ஒரு கட்டளைச் சட்டம் இயற்றப்பட்டது. 1841-ஆம் ஆண்டுக்கும் 1849-ஆம் ஆண்டுக்கும் இடையில் தமிழகத்தில் இருந்து இலங்கை தோட்டத்தில் குடியேறியவர்களில் சுமார் 70,000 பேர் இறந்ததாக ""சண்டே அப்சர்வர்'' அறிவித்தது. அரக்கத்தனமான ஏகாதிபத்தியத்தின் சுரண்டிக் கொழுக்கும் தன்மையால் இந்த மக்கள் பட்ட அவதி கொஞ்ச நஞ்சமல்ல. *அட்டவணை: இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்கள். 1842-இல்--14,000 பேர் 1843-இல்--31,000 பேர் 1844-இல்--71,000 பேர் 1845-இல்--67,000 பேர் 1847-இல்--50,000 பேர் 1877-இல்--1,46,000 பேர்நாளை: பிரஜா உரிமைச் சட்டம்
By Ilakkuvanar Thiruvalluvan
7/2/2009 3:21:00 AM