ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 மே, 2024

தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழத்தைப் பகைத்தது இந்தியாவா? இந்தியாவைப் பகைத்தது ஈழமா?

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : கைச்சரக்கா மார்க்குசியம்?-தொடர்ச்சி)

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை கொள்ளாமல், இந்திய அரசை நத்தி ஏதாவது தீர்வு பெற்றுக் கொள்வது என்ற கோழைத்தனமான அணுகுமுறையைத் தமிழ் மக்களின் சார்பிலேயே சிலர் முன்மொழிந்து வரக் காண்கிறோம். அடிப்படையில் இந்திய வல்லரசுதான் ஈழத் தமிழர்களைப் பகைத்துக் கொண்டது என்ற உண்மையைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டு தமிழீழ மக்கள் மீதும் புலிகள் மீதும் இவர்கள் சுற்றடியாகப் பழி போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இப்போதைக்கு ஈழத் தமிழர் நலனை விடவும் இந்திய வல்லரசின் நலன்தான் உயர்ந்தது என்ற கருத்தைத் தலைவர் பிரபாகரன் பெயரிலேயே செல்லுபடியாக்க இழிமுயற்சி செய்து வருகின்றனர். இவர்களின் பொய்மைகளைத் தோலுரிக்கவும், ஈழ தேசத்துக்கும் இந்திய வல்லரசுக்குமான உறவு எத்தகையது என்பதை விளக்கவும் தேவை இருப்பதாக நம்புகிறேன். தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரைகளையே எடுத்துக் காட்டி வரலாற்றுப் புரட்டர்களை மறுதலிக்க முடியும் என நம்புகிறேன். படியுங்கள்! புரிந்து கொண்டு உரையாடுங்கள்!

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்று எழுந்துள்ள பல்வேறு சிக்கல்களுக்கும் மையமாக இருக்கும் ஒரு வினா: இந்திய அரசு குறித்தான நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?

ஒருசில நண்பர்கள் அடிக்கடி சொல்லி வரும் கருத்துத் துளிகள் இவை: நாம் இந்தியாவையே நம்பியிருக்கிறோம். இந்தியாவின் தயவில்தான் ஈழம் அமைக்க முடியும். இந்தியாவைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பது மட்டுமன்று, இந்தியாவைக் குறை கூறவே கூடாது. இந்தியாவின் நிகழ் அணுகுமுறையை மட்டுமன்று, கடந்த கால நடைமுறையையும் கூட குற்றாய்வு செய்யக் கூடாது. இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்குத் தனித் தமிழீழமே ஏற்றது என்பதை இந்திய அரசுக்குப் புரிய வைக்க வேண்டும்.

இந்த இந்தியச் சார்புக் கொள்கையினர் தமிழீழ விடுதலைப் புலிகளையும் தேசியத் தலைவர் பிரபாகரனையும் போற்றக் கூடியவர்கள். அவர் பெயரால் தம் அணுகுமுறையை நியாயப்படுத்தவும் செய்கிறவர்கள்.

ஆனால் தலைவர் பிரபாகரனின் ஆழ்ந்த பார்வைகளுக்குச் சான்றாகத் திகழும் அவரது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இந்தியச் சார்பு ஈழக் கொள்கையினர் வாதுரைப்பதில்லை. 1987 ஆகட்டு 4 சுதுமலைச் சாற்றுரை ஈழத் தேசத்துக்கும் இந்திய வல்லரசுக்குமான உறவு பற்றிய முகன்மையான ஆவணமாகும். அடுத்து, தலைவர் பிரபாகரன் 1989 முதல் 2008 வரை ஆற்றிய 20 மாவீரர் நாள் உரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. இன்னும் சில செவ்விகளும் உள்ளன. இவற்றைப் படித்துப் புரிந்து உள்வாங்கிக் கொள்வது இந்திய வல்லரசு குறித்தான ஈழத் தேசக் கொள்கையை வகுக்க உதவும்.

ஈண்டு நான் தலைவர் பிரபாகரனின் இறுதி மாவீரர் நாள் உரையை (2008 நவம்பர் 27) எடுத்துக்காட்டி அவரது அணுகுமுறையை விளங்கிக் கொள்ளவும் விளக்கிக் காட்டவும் முயல்கிறேன். இந்த உரையில் நம் கருத்தாய்வுக்குப் பொருத்தப்பாடுள்ள சில பகுதிகளைப் பார்ப்போம்.

“உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டு கொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.”

தமிழின அழிப்புப் போருக்கு முண்டு கொடுத்து நின்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்றல்லவா? அதிலும் முதன்மையான ஒன்றல்லவா? போரியல் வகையிலும், பொருளியல் வகையிலும் மட்டுமன்று. அரசியல் வகையிலும் அரசதந்திர வகையிலும் சிங்களத்தின் நேர் இன அழிப்புப் போருக்கு இந்திய வல்லரசு முண்டு கொடுத்து நின்றதும், இன்றளவும் கட்டமைப்பியல் இன அழிப்புக்கு முண்டு கொடுத்து நிற்பதும் இந்திய வல்லரசே என்ற உண்மையை மறுக்கவோ மறக்கவோ மறைக்கவோ எப்படிக் கூடும்?

இன அழிப்புக்கு ஈடுசெய் நீதி பெறுவதற்காகத் தமிழீழத் தேசம் பன்னாட்டு அரங்கில் எடுத்து வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று இந்திய அரசு தன் பாவத்துக்குக் கழுவாய் தேட முயன்றிருக்கலாம் அல்லவா? மாறாக, ஐநா மனிதவுரிமைப் பேரவை விவாதங்களிலும் தீர்மானங்களிலும் நேரடியாகவும் சுற்றடியாகவும் சிங்கள அரசைப் பாதுகாக்கும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வரக் காண்கிறோம்.

கடந்த காலத்திய, நிகழ்காலத்திய உண்மைகளை மூடி மறைப்பதுதான் அரசதந்திரம் என்று இந்திய சார்பு ஈழக் கொள்கையினர் நம்புவதாக இருக்கக் கூடும். ஆனால் இந்த அரசதந்திரத்தால் இது வரை என்ன பயன் விளைந்துள்ளது? என்று அவர்கள் விரல்விட்டுச் சொல்லட்டும். இந்தியா குட்டக் குட்ட நாம் குனிவதும், நாம் குனியக் குனிய அவர்கள் குட்டுவதும்தானே கண்ட பலன்?

இத்தனைக்குப் பிறகும் நம் அன்பர்களில் சிலர் “நாங்கள் இந்தியாவைத்தான் நம்பியிருக்கிறோம்” என்று திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருப்பதில் பொருளில்லை. தந்தை செல்வா அவர்களோ, தலைவர் பிரபாகரன் அவர்களோ இந்தியாவை நம்பியோ பிற அயல் அரசுகளை நம்பியோ இந்த விடுதலைப் போராட்டத்தை நடத்தவில்லை. வேறு எதை நம்பித் தொடங்கி நடத்தினார்கள்? கேளுங்கள், தலைவரே உங்களுக்கு விடை சொல்வார்: “எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.”

கடந்த காலத்தில், குறிப்பாக 1983 கறுப்பு யூலைக்குப் பின் “இந்தியப் படையை ஈழத்துக்கு அனுப்பித் தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று தமிழ்நாட்டில் ஒரு கோரிக்கை எழுந்ததுண்டு. திராவிட முன்னேற்றக் கழகம் இதற்காக ஒரு மறியல் போராட்டமே நடத்தியது. ஆனால் எவ்வித நெருக்கடியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தக் கோரிக்கையை வழிமொழிந்ததில்லை.

“எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.”

தலைவர் பிரபாகரன் குறிப்பிடும் “வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகள்” யார்? சிங்களம் தவிர, தமிழீழத்தை ஆக்கிரமித்த எதிரி என்பது இந்தியாவே அல்லவா? ஈழத்தைப் பகைத்து இந்தியாவா? இந்தியாவைப் பகைத்தது ஈழமா?

“இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறு விளைவிப்பதாக அமைந்தது.”

சமாதான முயற்சிகளுக்கு ஊறு விளைவித்த உலக நாடுகளில் இந்தியாவுக்கு முக்கிய இடமுண்டா? இல்லையா?

“எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.”

சிறிலங்கா தவிர ஈழ விடுதலை இயக்கத்தை ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சித்திரித்த முதல் நாடு இந்தியாதான். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு முதன்முதலாகத் தடை விதித்ததும் இன்றளவும் தடையை நீடித்து வருவதும் இந்தியாதான்.

ஈழத் தமிழர்கள் மறக்கக் கூடாத ஒரு வரலாற்று உண்மை என்ன தெரியுமா? சிங்களம் தவிர, தமிழீழத்தின் மீது படையெடுத்த ஒரே அயல்நாடு இந்திய வல்லரசுதான்! தமிழ் மக்கள் இன்றளவும் ஒவ்வொரு ஒன்றுகூடல் நிகழ்வைத் தொடங்கும் போதும் அகவணக்கம் செலுத்துவது சிங்களப் படைகளாலும் இந்தியப் படைகளாலும் கொலையுண்ட தமிழர்களுக்கே அல்லவா? இந்த அகவணக்கத்திலிருந்து இந்தியப் படையால் கொலையுண்டவர்களை நீக்கினால்தான் இந்திய வல்லரசின் பரிவைப் பெற முடியும் என்று நினைப்பதே அம்மக்களின் நினைவைக் களங்கப்படுத்துவது அல்லவா?

எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.

“தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.”

இப்படியெல்லாம் இந்தியா செய்யவில்லை என்று நம் இந்தியச் சார்பு ஈழக் கொள்கையினரால் சொல்ல முடியுமா?

“மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக் கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும், இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.”

இந்தச் சில நாடுகளில் இந்தியாவும் முதன்மையான ஒன்றில்லையா?

ஈழப் போராட்டம் இந்திய நாட்டின் தேசிய நலன்களுக்கு எதிரானதா? இந்த வினாவிற்குத் தலைவர் பிரபாகரனின் விடை இதோ:

“உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

“எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.”

இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல, வேறு எந்த நாட்டுக்கும் ஈழ விடுதலைப் போராட்டம் எதிரானதன்று. நீண்ட போராட்ட வரலாற்றில் எந்த நாட்டையும் நாம் பகைத்துக் கொண்டதில்லை. இந்தியாவை மட்டும் எதற்காகப் பகைத்துக் கொள்ளப் போகிறோம்? இந்தியா தன் வல்லரசிய நலன்களுக்கு ஈழப் போராட்டம் எதிரானது எனக் கருதினால் அதற்கு நாம் எப்படிப் பொறுப்பாவோம்?

“எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும், எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.

“இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்து விடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மைத் தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்து கொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.”

அன்று இந்தியாவுடன் நட்பை வளர்த்துக் கொள்ளவே தலைவர் விரும்பினார். இன்றும் ஈழ மக்களின் விருப்பம் அதுவே. ஆனால் அன்றும் இன்றும் தடை விதித்து நட்புக்குத் தடை போட்டுக் கொண்டிருப்பது இந்திய வல்லரசுதான் என்பது கண்கூடான உண்மையல்லவா?

“நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகைச் சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.”

இந்தியா சாதகமான நிலைப்பாட்டை எடுப்பதானால் அதற்கான முதல் நடைபடி, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதுதான். பதினைந்து ஆண்டுகள் கரைந்த பின்னும் தலைவர் பிரபாகரனின் சொற்கள் உண்மையாக ஒலிக்கின்றன. இந்தியாவைப் பகைச் சக்தியாக நாம் கருதவில்லை, கருத வேண்டிய தேவையும் இல்லை. இந்தியாவை நட்புச் சக்தியாகவே தமிழர்கள் கருதினார்கள், இன்றும் கருதுகின்றார்கள். ஆனால் இந்தியப் பேரரசின் அணுகுமுறைதான் ஈழ மக்களுக்கும் அவர்தம் போராட்டத்துக்கும் பகையாக உள்ளது.

கற்றுக்குட்டித்தனமான சில நாடகங்களை அரங்கேற்றுவதன் மூலம் இந்திய வல்லரசின் இந்த அணுகுமுறையை மாற்றி விட முடியாது என்பதை “இந்தியாவையே நம்பியிருக்கும்” நம் அன்பர்கள் விரைவில் உணர்ந்து கொண்டால் நன்று.

வியாழன், 19 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 244 : பொல்லாத பதின்மூன்று

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 243 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

போகாத ஊருக்கு வழிகாட்டும் பொல்லாத பதின்மூன்று

13ஆம் திருத்தச் சட்டம் ஈழத் தமிழர்களின் தேசியச் சிக்கலுக்கு அரசியல் தீர்வாக முடியுமா? இலங்கை அரசவையில் 13ஆம் திருத்தச் சட்டம் இயற்றப்பட்டு36ஆண்டுக் காலமாயிற்று. இந்த 36 ஆண்டுகளில் அதனால் விளைந்த பயன் என்ன? அது தீர்வாகவில்லை என்பது மட்டுமன்று, தீர்வை நோக்கிய பயணத்தில் ஓரங்குலம் கூட முன்னேறவில்லை என்னும் போது 13ஆம் திருத்தச் சட்டம் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டது என்று பொருள்.

36 ஆண்டுகளுக்கு முன் இராசீவ்-செயவர்த்தனா உடன்படிக்கையின் தொடர்ச்சியாக 13ஆம் திருத்தச் சட்டம் முன்மொழியப்பட்ட நேரத்தில் அன்றைய இந்தியத் தலைமையமைச்சர் இராசீவு காந்திக்கு ஈழத் தேசிய அரசியல் கட்சிகள் எழுதிய கடிதத்தில் 13ஆம் திருத்தச் சட்டத்தை கேலிக் கூத்து என்று சாடின.

13ஆம் திருத்தச் சட்டம் குறித்து ஏமாற்றம் தெரிவிக்கும் வகையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசிதம்பரம், செயலாளர் அமிர்தலிங்கம், துணைத் தலைவர் சம்பந்தன் ஆகிய மூவரும் இந்தியத் தலைமையமைச்சர் இராசீவு காந்திக்கு 1987 அட்டோபர் 28ஆம் நாள் எழுதிய கடிதம் ஒரு வரலாற்று ஆவணம். இந்தக் கடிதத்தில் அவர்கள் தெளிவாகக் கூறினார்கள்:

“இந்த முன்மொழிவுகள் தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவு செய்யவில்லை. தமிழ் மக்கள் சந்தித்துள்ள உயிரிழப்பு, இன்னல்கள், துயரங்களுக்கு எவ்விதத்தும் ஈடாகவும் இல்லை.”

சுருங்கச் சொல்லின் 13ஆம் திருத்தச் சட்டம் ஒரு கேலிக்கூத்து! ஒரு மோசடி! இந்தக் கேலிக் கூத்தைத்தான், இந்த மோசடியைத்தான் இப்போது முழுமையாகச் செயலாக்கச் சொல்லித் தமிழ் அரசியல் தலைவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு சிங்கள அரசிடம் பேரம் பேசுகின்றது இந்திய வல்லரசு.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணம் அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் கூட இந்திய அரசிடமிருந்து வரவில்லையே, ஏன்? ஒரு பன்னாட்டு ஒப்பந்தத்தின் படி வலியுறுத்த வேண்டிய கோரிக்கையை வாய்மொழியாகக் கூட பேசாமல் மோசடியான 13ஆம் திருத்தச் சட்டத்தை ஈழத் தமிழர்கள் தலையில் கட்ட முயலும் இந்திய அரசின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த 13ஆம் திருத்தச் சட்டம் எவ்வகையிலும் தமிழர்களின் தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வாகாது என்பது மட்டுமல்ல, சிங்களத்தின் கட்டமைப்பியல் இனவழிப்புக்குத் துணை செய்வதாகவும் அமையும் என்பது ஆய்ந்து தெளிந்த முடிவாகும்.

ஈழத் தமிழர் தொடர்பான இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு 13ஆவது திருத்தச் சட்டம்தான் என்பதால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று சொல்லக்கூடிய தமிழ்த் தலைவர்களும் உள்ளனர், ஆய்வு அறிஞர்களும் உள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்ட ஈழத் தமிழர் இனவழிப்பு குறித்து இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி கோரும் தமிழர் போராட்டம் குறித்து இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் போர்க் குற்றங்களும் மானிட விரோதக் குற்றங்களும் நிகழ்ந்துள்ளன என்ற நம்பகமான குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கும் மூன்று ஐநா அறிக்கைகள் (தாருஸ்மன், சார்லஸ் பெற்றி,மனிதவுரிமை ஆணையர் அலுவலகத்தின் அறிக்கை)குறித்து இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? இந்தக் குற்றச்சாட்டுகள் மீது புலனாய்வு செய்ய உள்நாட்டுப் பொறிமுறையா? பன்னாட்டுப் பொறிமுறையா? கலப்புப் பொறிமுறையா? என்ற வினாவில் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன?

ஐநா மாந்தவுரிமைப் பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கையும் இந்தியாவும் உள்ளிட்ட கூட்டு முன்மொழிவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் குறித்தும், அதிலிருந்து சிறிலங்கா ஓடிப்போனது குறித்தும் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? ஐநா மனிதவுரிமைப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானங்களில் இந்தியா தொடர்ச்சியாகவும் முன்பின்முரணின்றியும் கடைப்பிடித்துள்ள கொள்கை நிலைப்பாடு என்ன?
ஈழத் தமிழினம் கோருவது இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி, குற்றவியல் நீதியும் அரசியல் நீதியும்! இந்தியா ஏனோதானோ என்று முன்வைப்பது தமிழர்களால் மறுதலிக்கப்பட்ட 13ஆம் திருத்தம்! இது மோசடியான கேலிக்கூத்து என்று கருநிலையிலேயே தலைவர்கள் சிவசிதம்பரமும் அமிர்தலிங்கமும் சம்பந்தர் ஐயாவும் தோலுரித்துக் காட்டிய பின், அதையே வரலாற்றின் குப்பைத் தொட்டியிலிருந்து தூக்கி வந்து சீவி சிங்காரித்து அம்பலத்தில் ஆடவைக்க இந்தியா செய்யும் சூழ்ச்சிக்குப் பலியாகலாமா தமிழர்கள்?
பரமபத விளையாட்டு போல் இஃது இந்தியாவின் 13பத விளையாட்டு!
தமிழினம் போரிலே தோற்றபின் வெற்றியாளனின் நீதிக்குத்தான் பணிந்து போக வேண்டும் என்று சிங்களப் பேரினவாத அரசுக்கு அடங்கிப் போகச் சொல்லும் இரண்டகக் கும்பல் ஒரு பக்கம்! இந்தியாவின் விரிவாதிக்க அரசியலுக்குத் துணைநின்று அது ஈவதை இரந்து பெற்றுக்கொள்ள ஓடேந்தி நிற்கும் இரவலர் கும்பல் மறுபக்கம்! இந்த இரண்டகர்களையும் இரவலர்களையும் எதிர்த்துப் போராடி வெல்வதுதான் விடுமை வாழ்வுக்கு வழி!
இந்தியாவுக்கு என்ன வந்தது? அது ஏன் 13ஆம் திருத்தத்தைப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்? இந்திய வல்லரசின் புவிசார் அரசியல் அப்படி! சீனக் கொள்ளையருக்கும் இந்தியக் கொள்ளையருக்கும் இலங்கை என்னும் கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வதில் போட்டி! இலங்கை என்னும் சதுரங்கப் பலகையில் தமிழர்களைப் பகடைகளாக உருட்டுவது இந்தியாவின் உத்தி! அதற்காகத் தமிழீழ விடுதலையையும் ஏற்றுக் கொண்டு விடக் கூடாது! தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு! பன்னாட்டு நீதிப் பொறிமுறை! குற்றவாளிகளைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்றுவது! பொதுவாக்கெடுப்பு வழியிலான அரசியல் தீர்வு! இவற்றில் எதுவும் சிங்கள அரசை மிரட்டிக் கைக்கடக்கமாக வைத்துக் கொண்டே சீனச் செல்வாக்கைக் கட்டுப்படுத்த உதவாது. மாறாகத் தமிழர்களின் விடுமைப் பயிருக்கு இவையெல்லாம் நீர் பாய்ச்சுவதாகி விடும்.
3ஆம் திருத்தம் வெறும் புழு! யாரையும் கடிக்காது. 13ஆம் திருத்தம் தமிழ் மக்களின் எந்த உரிமையையும் மீட்டுக் கொடுக்காது. தமிழர் தாயகத்தின் மீதான வன்பறிப்பை (ஆக்கிரமிப்பை) முடிவுக்குக் கொண்டுவராது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துக் கொடுக்காது. சிறையில் அடைபட்டுள்ள போர்க் கைதிகளை விடுவிக்காது. தமிழ் நிலத்தின் சிங்கள பௌத்த மயமாக்கத்தைத் தடுக்காது. சிங்கள வன் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தாது.
13ஆம் திருத்தத்துக்காக இந்தியக் குடுமி ஆடுவதேன்? இந்தக் கேள்விக்குத் தெளிவான விடை: முள்ளிவாய்க்காலுக்கு முன் நேர் இனவழிப்புக்குத் துணைபோன இந்திய வல்லரசு இப்போது தொடரும் கட்டமைப்பியல் இனவழிப்புக்கும் துணைபோய்க் கொண்டிருக்கிறது என்பதே!
எச்சரிக்கை தமிழா!


(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 272

வெள்ளி, 27 நவம்பர், 2020

வணக்கத்திற்குரிய நவம்பர் 27

 அகரமுதல

வணக்கத்திற்குரிய நவம்பர் 27

இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்!

கலையாத வீரமும்  குறையாத ஈரமும் ஓர்
களங்கம்வாராத தீரமும்
கன்றாத படைமையும் குன்றாத துணிவும்
நலிவிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத நட்பும்
தவறாத சொல்லும்
தாழாத எழுச்சியும் மாறாத புகழும்
தடைகள் வாராத செயலும்
தொலையாத பற்றும் கோணாத தலைமையும்
துன்பம் எதிர்கொள்ளும் பாங்கும்
இணைந்து வாழ்ந்த மாவீரர்கள்
இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

 


சனி, 16 மே, 2020

வலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் !


வலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் !

வைகாசி 05, 2051 / 18.05.2020




அழிக்கப்பட்ட இனத்தின் சான்றாக இன்றும் நிலைத்து நிற்கும் முள்ளிவாய்க்கால் வாரத்தின் வலிசுமந்த வரிகளோடு இரண்டாம் நாள் – கவிதை
வைகாசி 06, 2051 / 19.05.2020


அழிக்கப்பட்ட இனத்தின் சான்றாக இன்றும் நிலைத்து நிற்கும் முள்ளிவாய்க்கால் வாரத்தின் வலிசுமந்த கவிதைகளுடன் 11ஆம் ஆண்டின் மூன்றாம் நாள்  – களத்தின் கவிதைகள்

வைகாசி 07 , 2051 / 20.05.2020


ஞாயிறு, 26 ஜனவரி, 2020

‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..?’’ – புகழேந்தி தங்கராசு



‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..?’’

‘‘காணாமல் போனதாகச் சொல்லப்படுகிற 20,000 பேரும் உயிருடன் இல்லை… இறந்துவிட்டனர்…’’  – மரண வியாபாரி கோதபாய இராசபச்சவின் இந்தப் பொறுப்பற்ற வாக்குமூலம், பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
  1. காணாமலாக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இருபதாயிரம் மட்டும்தானா?
  2. ஒரு நாட்டின் அதிபர் என்கிற பொறுப்பான பதவியில் இருக்கிற ஒருவர், எந்த அடிப்படையில் இந்த எண்ணிக்கையை உறுதி செய்தார்?
  3. அவர்கள் இறந்துவிட்டதாக மெய்ப்பிக்கத் தேவையான ஆதாரங்கள் / தடயங்கள் / சாட்சியங்கள் இலங்கை அரசின் கைவசம் இருக்கின்றனவா?
  4. அவை இருந்தால், இத்தனை ஆண்டுகளாக அதை வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தது ஏன்?
  5. இறந்துவிட்டார்கள் என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னால் என்ன பொருள்? அவர்கள் கொல்லப்பட்டார்களா?
  6. கொல்லப்பட்டார்கள் – என்றால், எங்கே… எப்போது… யாரால்?
  7. இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள் அவர்களில் எத்தனைப் பேர்?
  8. நோய்வாய்ப்பட்டு இறந்தார்கள் என்றால், அதற்காக எந்த மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை தரப்பட்டது?
  9. அவர்களது உடல்கள், உறவினர்களிடம் எதனால் ஒப்படைக்கப்படவில்லை?
  10. உடல்கள் எங்கே புதைக்கப்பட்டன / மறைக்கப்பட்டன?
இதில் எந்தக் கேள்விக்கும் கோதபாய இராசபச்ச பதில் சொல்லப் போவதில்லை.
யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட ஓர் உயிரோ ஈர் உயிரோ அல்ல! இருபதாயிரம் உயிர்கள்… இருபதாயிரம் உடல்கள்.
அவை எங்கே என்பது மிக மிக முதன்மையான கேள்வி.
இனப் படுகொலைக்கு நீதி கேட்கிற வேள்விக்கு மிக மிகப் பயனுள்ள கேள்வி.
கோதபாய சொல்வதை வைத்துப் பார்க்கிறபோது, அந்த உடல்கள் தனித்தனியாகப் புதைக்கப்பட வாய்ப்பேயில்லை. பத்துப் பத்தாகவோ நூறு நூறாகவோ ஒன்றாகத்தான் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். எரித்தால் உண்மை அம்பலமாகிவிடும் என்பதால், புதைத்திருப்பதற்கான வாய்ப்புதான் அதிகம்.
சிங்களச் சிப்பாய்களின் வெறியாட்டத்துக்குப் பிறகு, கல்லூரி மாணவி கிருசாந்தியும் அவளது தாயும் செம்மணியில் ஒரே குழியில் புதைக்கப்பட்டிருந்தார்களே, அதுதான் நடந்திருக்க வேண்டும் இப்போதும்!
செம்மணி வெளியில் மட்டுமே ஏறத்தாழ 400 இளைஞர்களின் உடல்கள் இரகசியமாகப் புதைக்கப்பட்டிருந்ததை ஒப்புக் கொண்ட சோமன இராசபச்ச என்கிற சிப்பாயின் வாக்குமூலத்தை மீண்டும் புரட்டிப் பார்க்கிற எவரும் இதை மறுக்க முடியாது.
காணாமல் போன இருபதாயிரம் பேர் உயிருடன் இல்லை – என்று அதற்கு காரணமானவர்களே சொல்வதிலிருந்து, அந்த எண்ணிக்கை இரண்டு மடங்குக்கு மேல் இருக்கக் கூடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவ்வளவு உடல்களை வேறெப்படி மறைக்க முடியும்?
தமிழர் தாயகமெங்கும் பன்னாட்டு வல்லுநர் குழுக்களை வைத்துத் துப்புரவாக அலசி ஆராய்ந்தால், செம்மணியைக் காட்டிலும் மோசமான ஆயிரக் கணக்கான மனிதப் புதைகுழிகளை நிச்சயமாகக் கண்டுபிடிக்க முடியும்.  இராசபச்சக்களை மின்சார நாற்காலியில் ஏற்ற, அது மட்டுமே போதும். பிணங்களைத் தோண்டி எடுக்க எவரையும் அனுமதித்துவிடக் கூடாது என்பதால்தான், பன்னாட்டு விசாரணைக்கு அனுமதிக்கவே மாட்டோம் என்று கதவைப் பூட்டிக் கொள்கிறது இலங்கை.
இந்த இருபதாயிரமும், 2008 – 2009 இனப்படுகொலையின் போது முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சமும் வேறு வேறு!
இன அழிப்பின்போது  கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் எண்ணிக்கை, ஏறக்குறைய ஒன்றரை இலட்சம். இது, எந்த விதத்திலும் மிகைப்படுத்தப்பட்டதல்ல! மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இதைத்  துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னவர் பழுத்த ஆன்மிகவாதியான மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு சோசப்பு. “போருக்கு முந்தைய கணக்கெடுப்பில் இருந்த 1,46,679 பேர் இப்போது எங்கே” என்பது இராயப்பர் எழுப்பிய உறுதியான கேள்வி.
“இனப்படுகொலை – என்கிற குற்றச்சாட்டு பொய்யானது…
இலங்கையில் நடந்தது உள்நாட்டுப் போர்…
அந்தப் போரில் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே…
ஓர் அப்பாவி ஆட்டுக் குட்டி கூட கொல்லப்படவில்லை…” – என்றெல்லாம், தொடக்கத்தில் சமத்துகாரமாகப் பேசியது இலங்கை. அது பச்சைப்பொய் என்பதை, ஐ.நா. அமைத்த வல்லுநர் குழு அம்பலப்படுத்தியது.  40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதை, அந்தக் குழு உறுதி செய்தது. அதன்பிறகு விசாரித்த ஐ.நா.வின் உள்ளக விசாரணைக் குழு, உயிரிழந்தோர் எண்ணிக்கை எழுபதாயிரத்துக்கும் அதிகம் என்றது.
இராயப்பரின் ஆதாரப்பூர்வமான கணக்கின்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,46,679. காணாமல் போனதாகக் கூறப்படுகிற பெருந்தொகையான மக்கள் இறந்துவிட்டதாக, இலங்கை அரசு வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருப்பது இதுதான் முதல் முறை. இப்படி ஒப்புக் கொண்டிருப்பதற்கு, அமெரிக்காவின் அழுத்தம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதுவராக, சென்ற வாரம் ஆலிசு வெல்சு என்கிற பெண் அதிகாரி கொழும்பு வந்திருந்தார். அவர், தெற்காசிய மண்டல விவகாரங்களைக் கவனிக்கிற வெளியுறவுத் துறைத் துணைச் செயலாளர்.
கோதபாயவிடம் திரம்பின் கடிதம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்  ஆலிசு. அந்தக் கடிதத்தில். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செனிவா கூட்டத்தில் இலங்கை கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் குறித்தும், காணாமல் போனோர் குறித்தும் திரம்ப்பு சுட்டிக்காட்டியிருப்பதாகத் தெரிகிறது. 
இலங்கையில் சீனா வலுவாகக் காலூன்றுவதற்கு முட்டுக்கட்டை போடுவதே அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், சுற்றிவளைத்து, தமிழினத்துக்கான நீதியை ஒரு புள்ளி நகர்த்துவதாக அஃது இருந்திருப்பதை கோதபாயவின் அறிவிப்பு உணர்த்துகிறது.
ஆலிசு ஒரே ஒரு நாள்தான் கொழும்பில் இருந்தார். அவர் வந்து போன பிறகு, கொழும்பிலிருக்கும் ஐ.நா. சார்பாளரான ஆனா சிங்கரை அழைத்து இருபதாயிரம் பேர் இறந்துவிட்டதாகக் கோதபாய கூறியிருப்பது, திரம்பு கடிதத்தின் எதிர் விளைவாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
கோதபாயவின் நகர்வை முன்கூட்டியே கணிப்பது கடினம். செனிவா மனித உரிமைகள் பேரவை கூட இருக்கிற நிலையில்,   நாற்பதாயிரம், எழுபதாயிரம், ஒன்றரை இலட்சம் என்கிற கணக்கெடுப்புகளின் தீவிரத்தைக் குறைப்பதற்காக அல்லது மறைப்பதற்காக,  ‘இருபதாயிரம்’ என்கிற துருப்புச் சீட்டை கோதா  பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.
அதிபர் என்கிற பொறுப்புள்ள பதவியில் இருக்கிற கோதபாய, தனது கடமையைத் தட்டிக்கழிப்பதற்காக, ‘அனைவரும் இறந்துவிட்டனர்’ என்று பொதுப்படையாகவும்  பொறுப்பில்லாமலும் பேசுகிறார் – என்பது வடமாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் விக்னேசுவரனின் குற்றச்சாட்டு.
காணாமல் போன  ஒவ்வொருவர் குறித்தும் விசாரணை ஏதாவது நடத்தப்பட்டதா – என்பது விக்னேசுவரனின் சட்டப்பூர்வமான  கேள்வி. ‘எந்த அடிப்படையில் இருபதாயிரம் பேர் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது’ என்று சாடுகிறார் அவர்.
வடமாகாண அமைச்சராக இருந்த அனந்தி சசீதரன், தன்னுடைய கணவர் சசீதரன் என்கிற எழிலனை 2009 மே மாதம், இராணுவத்திடம் ஒப்படைத்தவர். அதே நாளில், அவரைப் போலவே பலரும், தங்கள் கணவரையோ, மகனையோ மகளையோ இராணுவத்திடம், அரைகுறை நம்பிக்கையோடு, ஒப்படைத்தார்கள்.
‘நாங்கள் உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே’ என்று பத்தாண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அனந்தியும் அவருடன் சேர்ந்து குரல் கொடுக்கும் காணாமல் போனவர்களின் உறவுகளும்! பதினோராவது ஆண்டில், ‘அவர்களில் யாரும் உயிருடன் இல்லை’ என்று கொஞ்சம்கூட குற்றவுணர்ச்சியின்றி நின்று நிதானமாகப் பதில் சொல்கிறார் கோதபாய.
கோதபாய சொன்னது புதிதுமில்லை. இதற்கு முன்பே, முன்னாள் தலைமையமைச்சர் இரணில் சொன்னதுதான் இது. ‘காணாது போனோர் உயிருடனிருக்க வாய்ப்பில்லை’ என்று சென்ற ஆண்டே சொன்ன பிரகசுபதி அவர். ‘வாய்ப்பேயில்லை’ என்று இரணில் சொன்னதைக், கோதபாய திட்டவட்டமாகச் சொல்கிறார் என்பதொன்றே வேறுபாடு.
“கோதபாயவின் அறிவிப்பு ஒரு மோசடி… உலகை ஏமாற்றுகிற வேலை” என்கிறார் அனந்தி. காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் முன் நின்ற அவர்,  தமிழின அழிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் WAN போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுபவர்.  அதற்காக ராணுவத்தின் கடுமையான கண்காணிப்பில் இருந்தவர், இருப்பவர்.
போர் முடிந்த பின்பும், தமிழர் பகுதிகளில் காணாமல் போதல் தொடர்வதைப் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டிய அனந்தி, இப்போதும் அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.  ‘2009-க்குப் பிறகு கடத்தப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்’ என்று கோதபாயவைக் கேட்கிறார் அவர்.
மகிந்த இராசபச்ச அதிபராக இருந்தபோது, காணாது போனோர் குறித்து விசாரிக்க ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. மைத்திரிபாலா அதிபரானபிறகு, அதன் அலுவலகம் யாழ்ப்பாணத்திலும் தொடங்கப்பட்டது. அந்த ஆணையம், யாழ்ப்பாண அலுவலகம் எல்லாமே கண்துடைப்பு நடவடிக்கை என்பதை அதன் நடவடிக்கைகள் உணர்த்தின.
காணாமல் போனோருக்கான அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலேயே திறந்திருக்கிறோம் – என்று பன்னாட்டினருடனும் மைத்திரிபாலா அரசு தம்பட்டமடிக்க மட்டுமே அது பயன்பட்டது. பல்லாயிரம் பேர் காணாமலாக்கப்பட்டிருக்கும் யாழ் பகுதியில், அந்த ஆணையத்தை நம்பியோ வேறு வழியில்லாமலோ முறையிட்டவர்கள் 2,000 பேர் மட்டுமே! அந்த 2,000 முறைப்பாடுகள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைப் பற்றிக் கூட,  ஒரு வார்த்தை பேச மறுக்கிறது அந்த ஆணையம்.
காணாது போன உறவுகளுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து அந்த அலுவலகத்துக்குப்  போனவர்களிடம், மரணச் சான்றிதழ்  தருவதாக அந்த அலுவலக அதிகாரிகள்   பேரம் பேச, ‘மரணச் சான்றிதழ்  அலுவலகம்’ என்றே அதற்குப் பெயர் சூட்டி விட்டனர், காணாது போனவர்களின் உறவினர்கள்.
மரணச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டால், மாதாமாதம் துயரீட்டுத் தொகை  கிடைக்கும், காணாது போனவரின் வங்கிக் கணக்குகளைக் கையாள முடியும், அவரது சொத்துகள் மற்றும் உடைமைகளுக்கு உரிமை கொண்டாட முடியும். ஆனால், இந்த வசீகர வலையில் விழுந்துவிடவில்லை தமிழீழ மக்கள்.
‘உன் துயரீட்டை நீயே வைத்துக் கொள்.. விசாரணைக்கு அழைத்துச் சென்ற  என் மகனைத் திருப்பிக் கொடு’ என்று வீதிக்கு வந்து போராடினார்கள் தமிழீழ தமக்கை, தம்பியர்.
அங்கே கெடுசுரம்(அபசுரம்) பாடுகிற அரசியல்வாதிகளில் முதலிடம் சுமந்திரனுக்குத் தான்! ‘இனப்படுகொலை என்றெல்லாம் சொன்னால் பன்னாடுகளிடம் நீதி பெற முடியாது… போர்க்குற்றம் என்று சொல்வதுதான் புத்திசாலித்தனம்’ என்ற நச்சுக் கருத்தை விதைத்த அந்த மனிதர்தான், ஆளுக்கு முந்திக்கொண்டு இப்போதும் களத்தில் இறங்குகிறார்.
‘மரணச் சான்றிதழ் அலுவலகம் – என்று பட்டப் பெயர் சூட்டியிருப்பது பிழை’ என்பது சுமந்திரனின் வாதம்.
“காணாமல் போனோருக்கான அலுவலகத்தில் முறைப்பாடு கொடுத்ததும், அதுபற்றி விசாரித்து உறுதி செய்தபிறகு, காணாமல் போயிருப்பதாகச் சான்றிதழ் வழங்குவார்கள். அதன் மூலம் மாதாந்திர உதவித்தொகையைப் பெற முடியும். அதன்பிறகு, எப்படிக் காணாமல் போனார்கள், அதற்கு யார் காரணம் என்பது குறித்து விசாரிக்கப்படும்” என்று இலங்கை அரசின் அந்தப் போலி நாடகத்துக்கு ஆள் பிடிக்கப்பார்க்கிறார் சுமந்திரன்.
‘உலகம் முழுவதிலுமே காணாமல் போனோர் விவகாரம் மிக மிகச் சிக்கலானது.. அதற்கான தீர்வை எட்டுவதுதான் இந்த அலுவலகத்தின் நோக்கம்’ என்று சுமந்திரன் சொல்வது, பொருள்பொதிந்தது. அது, ஒரு பெரிய கோட்டைப் பக்கத்தில் போடுவதன் மூலம், இங்கேயுள்ள கோட்டைச் சிறியதாகக் காட்டுகிற முயற்சி.
‘இங்கே மட்டுமா நடக்கிறது… உலகம் முழுவதும் ஆட்கள் காணாமல் போகிறார்கள்… அவர்களெல்லாம் வீதிக்கு வந்தா போராடுகிறார்கள்… கொடுக்கிற பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேருங்கள்’  என்பதைத்தான் இவ்வளவு அழகாக எடுத்துச் சொல்கிறார் சுமந்திரன் என்கிற சட்டத் தரணி.
இராணுவத்தால் அல்லது காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பாதோர், வெள்ளை ஊர்தியில் கடத்திச் செல்லப்பட்டவர்கள், இராணுவத்திடம் சரணடைந்தவர்கள்… என்று காணாமல் போனோரின் எண்ணிக்கை முப்பதாயிரத்துக்கும்  அதிகம் என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள். பல ஆண்டுகளாக அவர்களைத் தேடுவதையே வாழ்வின் முதன்மை வேலையாகக் கொண்டிருந்த உறவுகளுக்கு, ‘அவர்கள் உயிருடனில்லை’ என்கிற செய்தி, நிச்சயம் அதிர்ச்சி அளித்திருக்கும்.
இந்த அதிர்ச்சிக்கிடையிலும், தடுமாறாமல் பேசுகிற தாய்மார்கள் இருக்கிறார்கள் ஈழத்தில்! ‘கோதபாயவின் கூற்றில் உண்மையில்லை, அதில்  ஏதோ சூழ்ச்சி இருக்கிறது’ என்று அனந்தியைப் போலவேதான் அவர்களும் நினைக்கிறார்கள். அந்த அவ நம்பிக்கைக்கிடையிலும்,  ‘உயிருடனில்லை என்றால், கொன்றவன் யாரென்று சொல்… குற்றவாளியைக் கூண்டில் நிறுத்து… என் மகனைக் கொன்றவனுக்குத் தண்டனை கொடு’ என்கிறார்கள் ஓர்மத்துடன்!
காணாமல் போன அத்தனைப் பேருமே கொல்லப்பட்டு விட்டார்களா – என்கிற கேள்விக்கு உடனடியாக விடை காண முடியவில்லை. ஆனால், காணாமல் போனோர் அனுபவித்த கொடுமைகளை எந்தத் தமிழ் உறவும் அனுபவிக்கக் கூடாது என்பதை தெள்ளத் தெளிவாகக் கூற வேண்டியிருக்கிறது.
காணாமல் போனோருக்கான விசாரணை ஆணையத்தின் தலைவராக மகிந்த இராசபச்சவால் நியமிக்கப்பட்டவர், மகசுவெல் பராக்கிரம பரணாகம. காணாமல் போனோருக்கு நியாயம் வழங்குவதைக் காட்டிலும், புலிகள் மீது புழுதி வாரித் தூற்றுவதிலேயே கவனமாக இருந்தவர் அவர்.
அப்படிப்பட்ட பரணாகமவின் விசாரணை அறிக்கை கூட, சிங்கள இராணுவத்தினரின் பாலியல் வன்முறைகள் குறித்துப் பேசாமல் இருக்க முடியவில்லை. அதுகுறித்து விரிவாகவும் தெளிவாகவும் பேசியது. பெண்களை மட்டுமின்றி, ஆண்களையும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய இராணுவத்தினரை ஒரு பிடி பிடித்தது. பாலியல் வன்முறை என்கிற அந்த அருவருப்பான குற்றச்சாட்டைப் புலிகள் மீது சுமத்த பரணாகமவாலேயே கூட முடியவில்லை.
பரணாகமவின் குற்றச்சாட்டை, நெஞ்சைப் பிழியும் அளவுக்கு  உறுதி செய்தவர் இலங்கைக்கான  பிபிசி செய்தியாளராக இருந்த  பிரான்சேசு ஆரிசன். வக்கிர மனம் படைத்த படையினரின் பாலியல் வன்முறைக்குத் தமிழ்ப் பெண்கள் மட்டுமின்றி இளைஞர்களும் இரையாவதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியவர் அந்த உடன்பிறந்தாள்.                                                                                                            பிரான்சேசு ஆரிசன் எழுதிய ஒரு செய்திக் கட்டுரையை முழுக்கப் படித்தால் மனமுடைந்துவிடுவோம். என்றாலும், அதன் ஒரு பகுதியை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
“குழந்தையை அவளிடமிருந்து பறித்து வெளியே இருக்கிற மற்றவர்களிடம் கொடுத்துவிட்டுக், கதறி அழுகிற அவளை அறைக்குள் இழுத்துச் செல்கின்றனர் சிப்பாய்கள்.
அவளுடைய உடைகள் கிழிக்கப்படுகின்றன…
அவளுடைய கதறல் அதிகரிக்கிறது…
கதறலை நிறுத்தாவிட்டால், வெளியே இருக்கிற குழந்தையை அவள் உயிருடன் பார்க்க முடியாது என்று மிரட்டுகிறார்கள்…
அந்த இளம் தாயின் கதறல் நிற்கிறது… அவள் மௌனமாகிறாள்…
வெளியே இருப்பவர்களுக்கும், நடப்பது என்னவென்பது புரிகிறது…
ஒருவராலும் ஒரு வார்த்தை கூட பேச முடியாத நிலை.
அவள் திரும்பி வருகிற வரை குழந்தையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது மட்டும்தான் அவர்களது ஒரே வேலை…
இன்னொரு இளம் தாய் வெளிப்படையாகவே மிரட்டப்படுகிறாள்.
‘நீ வர மறுத்தால், உனக்குப் பதில் உன் மகளை அழைத்துச் செல்வோம்’ என்கிறார்கள். அந்த மிருகங்களை எதிர்த்து அந்தத் தாயால் ஒரு வார்த்தை கூட பேச முடியாத நிலை…
தங்கள்  மீது நடவடிக்கை எடுக்க ஒருவர் கூட முன்வரப் போவதில்லை… என்கிற திமிரில், தங்களுக்கு இரையாகும் பெண்களை அதே கோலத்தில் படம்பிடித்து மகிழ்கிறார்கள் புத்தனின் புத்திரர்கள்.
போர்க்காலத்தில், இராணுவம் வீசிய குண்டுகள் மானாவாரியாக வெடித்துச் சிதறியபோது, குழந்தைகளைக் காப்பதற்காக தன் உடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர்கள் அந்தத் தமிழ்ப் பெண்கள்…
இப்போது சமாதானக் காலம். இராணுவ முகாமில் என்ன நடக்கும் என்பது தெரிந்தே, குழந்தைகளைப் பாதுகாக்க அவர்கள் போக வேண்டியிருக்கிறது…
எந்த மொழியில் இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடுவது என்று விவாதித்துக் கொண்டிருப்பதில் இல்லை நல்லிணக்கம் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.” –
இப்படியொரு இராணுவம்… காணாமலாக்கப்பட்டவர்களை என்னென்ன செய்திருக்கும்… என்பதைச் சிந்தித்துப் பார்க்கிற எவருக்கும், அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் நிச்சயமாக வரும். ஆனால், இப்படியெல்லாம் சந்தேகம் வருவதைக் காட்டிலும், இதை அறிந்ததும் உச்சந்தலைக்கு ஏறுகிற அளவுக்கு அறச்சீற்றம் வருவதுதான் குறிப்பிடத்தக்கது.
“இந்த உலகில் மற்றெவரையும் காட்டிலும் இலங்கை அரசு செய்த இனப்படுகொலைக்கு நீதி கேட்பதற்கான கடமை தமிழகத் தமிழர்களுக்குத் தான் அதிகம்” – என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னவர், இன அழிப்புக்கு நீதி கேட்பதில் தமிழ் மக்களோடு இணைந்து செயல்படுகிற அமெரிக்க  மருத்துவரான எலினா சான்டர். எபிரேய(யூத)ப் பெண்மணியான அவர், கடல்கோளால் பாதித்த தமிழீழப் பகுதியில் சில மாதங்கள் தங்கிப் பணியாற்றிய போது, அந்த மக்களை அணு அணுவாக அறிந்தவர். அதனால்தான் அவர் பேசுகிறார். தொப்புள்  கொடி உறவு என்று வார்த்தைச்சாலம் பேசுகிற நமக்கு நமது கடமையை நினைவுபடுத்துகிறார்.
காணாமல் போனவர்கள் பெயரில் துயரீடு(நிவாரணம்) வாங்க அந்த உறவுகள் சம்மதிக்கவில்லை.
எங்கள் உறவை எங்களிடம் திருப்பிக் கொடு  – என்கிறார்கள் உறுதியுடன்.
‘கொன்று விட்டாயா… அப்படியானால் நீதி கொடு’ என்று ஓர்மத்துடன் கேட்கிறார்கள்.
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உண்மையான துயரீடு எது என்பதையும், அதன் எல்லைகளையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள்..  நீதி கிடைத்ததும் அந்தத் துயரீடும் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
நம்மில் பெரும்பாலானோர் மது மயக்கத்திலும் தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் நட்சத்திர மோகத்திலும் நம்மை நாமே தொலைத்துக் கொண்டவர்கள். நம்மை நாமே காணாமல் போகச் செய்துகொண்ட பிரகசுபதிகள். இதிலிருந்து விடுபட்டு 26 ஆவது கல்லிலிருந்து கேட்கிற அழுகுரலைக் காதில் வாங்க நாம் முன்வருகிறபோது, ‘ஒருவரும் உயிருடனில்லை’ என்று பேசுகிற துணிச்சல் அங்கேயிருக்கிற எவருக்கும் வராது.
– புகழேந்தி தங்கராசு, தொடர்புக்கு: pugazendhithangaraj@gmail.com
– தினச்செய்தி, 23.01.2019