கொழும்பு, ஜூன் 5: இலங்கையில் முகாம்களில் வாழும் இடம் பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களைச் சொற்களில் விளக்க முடியாது என்று இலங்கை தலைமை நீதிபதி சரத் என். சில்வா கவலை தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் உள்ள மரவிலவில் நீதிமன்ற வளாக திறப்பு விழாவில் வியாழக்கிழமை பேசிய அவர் இது குறித்து மேலும் கூறியுள்ளது: வன்னிப் பகுதியைச் சேர்ந்த இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் குடும்பங்கள் தங்கியுள்ள "நிவாரண ஊர்களுக்கு' சென்றிருந்தேன். அவர்கள் படும் துன்பங்களையும், வேதனைகளையும் என்னால் சொற்களில் விளக்க முடியாது. நாட்டில் பெரும்பான்மை இனமோ, சிறுபான்மை இனமோ இல்லை. ஒரே இனம் தான் இருக்கிறது என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்போம் என்றால் அது முழுப் பொய்யாகத்தான் இருக்க முடியும். செட்டிக்குளம் முகாம்களுக்கும் நான் சென்றிருந்தேன். அங்குள்ளவர்களின் பரிதாப நிலையை என்னால் விளக்க முடியவில்லை. அவர்களுக்கு என்னால் ஆறுதல் சொல்லவும் முடியவில்லை. அளவற்ற துன்பத்துக்கும் இடர்களுக்கும் இடையே அவர்கள் உயிர் வாழ்கின்றனர். நமது பகுதிகளில் நாம் மாபெரும் கட்டடங்களைக் கட்டி வருகிறோம். ஆனால் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் கூடாரங்களில் வாழ்கின்றனர். ஒரு கூடாரத்தில் 10 பேர் தங்கியுள்ளனர். கூடாரத்தின் நடுப்பகுதியில் மட்டுமே அவர்களால் நேராக நிமிர்ந்து நிற்க முடியும். மற்ற பக்கத்தில் நிமிர்ந்தால் கழுத்து முறிந்து விடும். கழிப்பிடங்களுக்குச் செல்வதற்குக் கூட அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனது உணர்வுகளை என்னால் அவர்களிடம் வெளிப்படுத்த முடியவில்லை. அவர்களின் துன்பங்களைக் கண்டு நாங்களும் அழுகிறோம் என்பதை அவர்களிடம் என்னால் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு நிவாரண உதவிகளை நாம் போதிய அளவுக்கு வழங்க வேண்டும். அதைச் செய்யத் தவறினால் நாம் பழிக்கு ஆளாவோம். இந்த நாட்டின் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்க முடியாது. அந்த மக்களின் துன்பங்கள் இந்த நாட்டின் நீதிமன்றங்களுக்குக் கொண்டு வரப்படவில்லை. இடம்பெயர்ந்த மக்களின் நலனில் இந்த நாட்டின் சட்டம் எந்த அக்கறையும் காட்டவில்லை. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இவ்வாறு சொல்வதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்று நீதிபதி சரத் என். சில்வா கூறியுள்ளார்.
கருத்துகள்
தமிழர்களின் பேரவல உண்மைகளைச் சொல்வதால் தண்டிக்கப்படலாம் என மனச் சான்று உள்ள தலைமை நீதிபதியே கூறும் பொழுது சிங்கள அரசின் கொடுங்கோலாட்சியைப் புரிந்து கொள்வது எளிதுதானே! ஆனால், இங்குள்ளவர்கள் சிங்களத் தலைவர்களையும் சிங்களத் தளபதிகளையும் போற்றிக் கொண்டும் ஈழத் தமிழரர்களை மேலும் அழிப்பதற்குத் துணை புரிந்து கொண்டும் இருக்கின்றார்களே! கடவுளே இவர்களைத் திருத்தக் கூடாதா! -
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/6/2009 3:38:00 AM
6/6/2009 3:38:00 AM