இந்த வாரம் கலாரசிகள்
First Published : 31 May 2009 01:10:00 AM IST
தமிழ் மொழியின் அடிப்படை இலக்கணத்தை வரையறுத்த நூல் தொல்காப்பியம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தொல்காப்பியத்தின் அடிச்சுவட்டில் எழுந்த புறப்பொருள் இலக்கண நூல் பன்னிரு படலம். அதனை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நூல்தான் புறப்பொருள் வெண்பாமாலை. புறப்பொருள் பற்றிக் கூறும் இலக்கண நூல்கள் தமிழில் மிகுதியாகத் தோன்றவில்லை. தொல்காப்பியரும் கூடப் புறத்திணை இயலில் மட்டும்தான் புறப்பொருள் இலக்கணம் பற்றிக் கூறியுள்ளார். வீர சோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் போன்றன ஓரளவு புறப்பொருள் பற்றிக் கூறுகின்றன என்றாலும், பழந்தமிழர் வாழ்வை விவரமாக எடுத்துரைக்கும் நூல் புறப்பொருள் வெண்பாமாலைதான் எனலாம். ""புறப்பொருள் வெண்பாமாலை, பொருளின் பகுதியாகிய புறப்பொருளுக்கு இலக்கணமும் இலக்கியமுமாக அமைந்துள்ளது'' என்பார் "தமிழ்வேள்' முனைவர் சிவ. இரத்தினம். புறப்பொருள் இலக்கணத்தை வெண்பா யாப்பினால் விரித்துரைக்கும் புறப்பொருள் வெண்பாமாலை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என்று 12 படலங்களைக் கொண்டது. இதில் 19 நூற்பாக்கள், 361 வெண்பாக்கள், 341 கொளுக்கள் அடங்கியுள்ளன. ஆமாம், அது என்ன "கொளு'? கொளு என்பது வெண்பாவின் கருத்தைக் கொண்டுள்ள நூற்பா. இது துறையின் இலக்கணத்தை வரையறுக்கும். கொளு கூறும் இலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந்ததுதான் வெண்பா. புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றியவர் சேரர் குலத்தவரான கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐயனாரிதனார் என்பவர். இந்த நூலுக்கு 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜயங்கொண்ட சோழ மண்டலத்து மேற்கானாட்டு மாறகலூர்க்கிழார் சாமுண்டித் தேவநாயகர் என்பவர் எழுதிய பழைய உரை இன்றும் போற்றப்படுகிறது. புறத்துறை அனைத்தும் காட்டப்படும் இந்நூலில் தமிழர்தம் வீரம், பண்பாடு, அறநெறி மற்றும் வீர விளையாட்டுக்களான ஏறுதழுவுதல் முதலானவை விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இலக்கண நூலில் காணப்படும் வெண்பாக்கள் கவிச்சுவையும் பொருட்சுவையும் கொண்டு விளங்குவன. இந்த அற்புதமான இலக்கண நூலுக்குக் கவிஞர் வ.த. இராம சுப்பிரமணியன் சமீபத்தில் உரை ஒன்று எழுதிப் பதிப்பித்திருக்கிறார். தமிழைத் தமது பிழைப்பாகக் கொள்ளாமல் தொண்டாகக் கருதி உழைக்கும் திருமுறை உரை ஆசிரியர் கவிஞர் வ.த. இராம சுப்பிரமணியனின் இந்தப் புறப்பொருள் வெண்பாமாலை உரையின் தனிச் சிறப்பு, இலக்கணம் பற்றிய ஒரு நூலை ஆர்வம் தரும் நடையில் அவர் எழுதியிருப்பதுதான். "இலக்கியத்தைப் படிக்கும் உணர்வுடன் இதனைப் படித்து மகிழலாம்' என்று "தமிழ்வேள்' தமது அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பது உண்மையிலும் உண்மை. சாமுண்டித் தேவநாயகரின் பழைய உரையை, "இதன் பொருள்' என்று குறுந்தலைப்பிட்டும், தமது எளிய விளக்கத்தை விளக்கவுரை என்றும் தந்திருப்பதுதான் இந்த நூலின் தனிச்சிறப்பு. மீனாட்சி புத்தக நிலையத்தாரால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல், தமிழ் இலக்கிய, இலக்கண ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு வரப் பிரசாதம் என்றுதான் கூறவேண்டும். விளக்க உரையாசிரியர் கவிஞர் வ.த. இராம சுப்பிரமணியன் தமிழுக்குத் தந்திருக்கும் கொடை இது!******தங்களது மதத்தைப் பரப்புவதற்காக வந்தவர்கள்தான் கிறிஸ்தவ மத போதகர்களும், பாதிரியார்களும். ஆனால், தமிழகம் கிறிஸ்தவத்தின்பால் காட்டிய ஈர்ப்பைவிட கிறிஸ்தவப் பாதிரியார்களுக்குத் தமிழின் மேல் ஏற்பட்ட காதல்தான் அதிகம் என்பதைக் காலம் நிரூபித்தது. தமிழில் உரைநடை இலக்கியம் தழைத்து வளர்ந்ததற்கு நாம் கிறிஸ்தவ மதபோதகர்களுக்கும், பாதிரியார்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம் என்பது முன்னூறு ஆண்டு வரலாறை உள்ளடக்கியது. வீரமாமுனிவர், வேதநாயக சாஸ்திரியார், கிருஷ்ணப்பிள்ளை என்று தொடங்கி, கவிதை, காப்பியம், நாடகம், புதினம், இலக்கண இலக்கிய ஆராய்ச்சி என்று தங்களது பங்களிப்புகளை வாரி வழங்கியவர்கள் பலர். கடந்த 300 ஆண்டுகளில் எழுந்த கிறிஸ்தவத் தமிழ் நூல்கள் முழுவதும் இன்றளவும் நமக்குக் கிடைக்கப் பெறாமல் உள்ளன. சில அரிய நூல்களின் படிகள் மேனாட்டு நூலகங்களிலும், காப்பகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன. கிறிஸ்தவத் தமிழ் நூல்களைத் தொகுத்து வழங்கும் முயற்சியில் சென்னை பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவத் தமிழ் இருக்கையின் முன்னாள் பேராசிரியர் முனைவர் ஆ. இன்னாசியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. "கிறிஸ்தவத் தமிழ்க் கொடை' என்னும் நூலை இவர் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். "கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம் - ஓர் அறிமுகம்' என்கிற நூலை ஆசியவியல் நிறுவனத்தின் சார்பில் தி. தயானந்தன் பிரான்சிஸ் மற்றும் யோ.ஞானசந்திர ஜாண்சன் ஆகியோர் தொகுத்தளித்திருக்கிறார்கள். வீரமாமுனிவரின் "திருக்காவலூர்க் கலம்பகம்', வேதநாயக சாஸ்திரியாரின் "பராபரன்மாலை' மற்றும் "வண்ண சமுத்திரம்', சுத்தானந்த பாரதியாரின் "இயேசுநாதர் சரிதை', வீ.ப.கா.சுந்தரத்தின் "இயேசுவின் திருப்புகழ், அருட்குறள்', கவிஞர் கண்ணதாசனின் "இயேசு காவியம்' என்று 36 தேர்ந்தெடுத்த படைப்புகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.******ஆசிரியர் "கலைமாமணி' விக்கிரமனிடமிருந்து வந்த கடிதத்தைப் படித்தபோதுதான் தெரிந்தது "இலக்கியபீடம்' திங்கள் இதழ் 100-வது சுவடியைக் கடந்து விட்டிருக்கிறது என்பது. "அமுதசுரபி'யிலிருந்து வெளியேறி சொந்தமாக இலக்கிய பீடத்தை விக்கிரமன் தொடங்கியது நேற்று நடந்தது போல இருக்கிறது. ஜூன் 7-ஆம் தேதி ஒரு விழா கொண்டாட இருப்பதாகவும், அந்த விழாவில் சிறந்த கவிஞர் ஒருவருக்கு பொற்கிழி வழங்க இருப்பதாகவும் அந்தக் கடிதம் மேலும் தெரிவிக்கிறது. "கலைமாமணி' விக்கிரமன் பற்றி எழுதும்போது இன்னொரு விஷயமும் ஞாபகத்திற்கு வருகிறது. அதுதான் அவர் சமீபத்தில் வெளிக் கொணர்ந்திருக்கும் "இதழாசிரியர்கள் மூவர்' என்கிற புத்தகம். இந்த "இதழாசிரியர்கள் மூவர்' புத்தகத்தைப் படிக்கும்போது, எனக்குள் ஒரு குற்ற உணர்வு. அதற்குக் காரணம் என்ன என்பது எனக்கும் ஆசிரியர் விக்கிரமனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்! கல்கியின் எழுத்துக்கு மகுடிக்கு மயங்கும் பாம்புபோல மயங்கிய, மயங்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் அடியேனும் ஒருவன். கல்கியிடம் எனக்கு ஏற்பட்டது மயக்கம் என்றால், எங்கள் ஆசிரியர் சாவியிடம் எனக்கு ஏற்பட்டது மரியாதை. நான் ஏற்கெனவே பலதடவை குறிப்பிட்டிருப்பது போல, சாவி என்கிற பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் அடியேனும் ஒருவன். கல்கியிடம் ஏற்பட்டது "மயக்கம்', சாவியிடம் ஏற்பட்டது "மரியாதை'. அப்படியென்றால் "குமுதம்' நிறுவன ஆசிரியர் எஸ்.ஏ.பி.யிடம் ஏற்பட்டது? வேறு என்ன, "பிரமிப்பு'தான்! தமிழ் இதழியலின் முன்னோடிகள் என்றால் திரு.வி.க.வும், சுப்பிரமணிய பாரதியும். வார இதழ்களின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த மூவர் "கல்கி', "சாவி', மற்றும் "எஸ்.ஏ.பி'. இந்த மூவரிடமும் நெருங்கிப் பழகும் பேறு பெற்றவர் ஆசிரியர் விக்கிரமன். எத்தனை எத்தனையோ சம்பவங்கள். அந்த மாமனிதர்கள் பற்றிய சுவையான செய்திகள். இந்தப் புத்தகத்தின் அட்டையை வடிவமைத்த ஆர்.சி.மதிராஜ், அந்த லேஅவுட்டுடன் சாவி சாரை சந்தித்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார் தெரியுமா? "கல்கிக்குக் கீழே என் படத்தை வைத்து எஸ்.ஏ.பி.யை தனியாக அல்லவா போட்டிருக்க வேண்டும் அதுதானே லாஜிக்' என்று நிச்சயமாகக் கூறியிருப்பார். காலக் கப்பலில் பின்னோக்கிப் பயணித்து கல்கி, சாவி மற்றும் எஸ்.ஏ.பி. போன்ற ஜாம்பவான்களை நேரில் சந்தித்து அளவளாவிய மகிழ்ச்சியை விக்கிரமன் அல்லாமல் வேறு யாரால் தர முடியும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக