பிரபாகரன் செய்த ஒரே தவறு, நல்லவனாக, அற்புத மனிதனாக இருந்ததுதான்: சீமான் ஆவேசம்
- Sunday, May 31, 2009, 0:38
- ஈழம்
- lankatime.com
பிரபாகரன் செத்துவிட்டாராம். மாவீரனுக்கு ஏதடா மரணம். வார்த்தையில் வேண்டுமானால் அவர் மரணம் அடைந்திருக்கலாம். வாழ்க்கையில் அவர் ஒருபோதும் மரணம் அடையமாட்டார். பிரபாகரன் செய்த ஒரே தவறு, நல்லவனாக, அற்புத மனிதனாக இருந்ததுதான் என்று இயக்குனர் சீமான் கூறினார்.
|
இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இயக்குனர் சீமான் பேசுகையில்,”இயக்குனர் பாரதிராஜா ஒரு மாபெரும் கலைஞன். பாலா, சேரன், தங்கர்பச்சான் உள்ளிட்ட எண்ணற்ற கலைஞர்கள் பூத்துக்குலுங்க காரணமாக உள்ள அடிமரம். அவர் அலுவலக வாசலில் உள்ள வேப்பமரமும் நாங்களும் ஒன்றாக வளர்ந்தவர்கள். அவர் அலுவலகத்தை தாக்கியுள்ளனர். ஒரு தமிழன் தமிழனாக இருந்ததற்காக கிடைத்த பரிசு இது. ஈழத் தமிழர்கள் இலங்கையில் மிரட்டப்படுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் இங்கு மிரட்டப்படுகிறார்கள். என்னைத் தொடர்ந்து 4 முறை சிறையில் அடைத்தார்கள். நான் என்ன தவறு செய்தேன். என் இனம் அழிக்கப்படுவதைக் கண்டு நல்ல அப்பனுக்குப் பிறந்த என்னால் பொறுக்க முடியவில்லை. நான் சிறையில் அடைக்கப்பட்டதால் என் தொழில் பாதிக்கப்பட்டது. என்னுடைய காரை எரித்தார்கள். உயிர் என்பது உதிரும் மயிரைப் போன்றது. ஒரு லட்சம் துப்பாக்கிகளைக் கடந்து சென்று பிரபாகரனை சந்தித்தவன் நான். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். பேசினா அடிப்போம் இதுதான் ஜனநாயகமா? தா.பாண்டியன் காரை எரித்தார்கள். யாரை கைது செய்தீர்கள். தமிழன் மனதில் இடிவிழுந்து நிற்கிறான். தமிழ்ச்சாதி உறைந்து போய் கிடக்கிறது. இந்தியா நடத்த வேண்டிய போரை நாங்கள் நடத்தியுள்ளோம் என்று ராஜபக்சே கொக்கரிக்கிறான். 25,000 ஈழத் தமிழர்களை உயிரோடு புதைத்துள்ளனர் சிங்களவர்கள். பிரபாகரன் இறந்து விட்டார், அவர் உடலை எரித்து சாம்பலை கடலில் வீசிவிட்டோம் என்கின்றனர். பிரபாகரன் செத்துவிட்டாராம். மாவீரனுக்கு ஏதடா மரணம். வார்த்தையில் வேண்டுமானால் அவர் மரணம் அடைந்திருக்கலாம். வாழ்க்கையில் அவர் ஒருபோதும் மரணம் அடையமாட்டார். பிரபாகரன் செய்த ஒரே தவறு, நல்லவனாக அற்புத மனிதனாக இருந்ததுதான். திருகோணமலையை அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுத்திருந்தால் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்து இருக்க மாட்டார். சிங்களவர்கள் செய்த அட்டூழியத்தைப் போல நாமும் செய்திருக்க வேண்டும். ஆனால் பிரபாகரன் செய்யவில்லை. கற்பழிப்புகளை நடத்தினார்கள். பச்சிளங் குழந்தைகளை கொன்று குவித்தார்கள். பிரபாகரன் உத்தரவிட்டிருந்தால், கொழும்பு நகருக்குள் புகுந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்திருக்க முடியும். அதை அவர் விரும்பவில்லை. மருத்துவமனை, பள்ளிக்கூடம், பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டுபோட வேண்டாம் என்று கூறிவிட்டார். இன்றைக்கு, பிரபாகரனின் 75 வயது தந்தையும், 72 வயது தாயாரும் சிங்கள இராணுவத்தின் பிடியில் இருக்கிறார்கள். விசாரணை என்கிற பெயரில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களை எப்படியெல்லாம் சித்ரவதை செய்கிறார்களோ? தெரியவில்லை. சிங்கள இராணுவம் செய்த அத்துமீறல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரம் இருப்பதாக இன்றைக்கு அமெரிக்கா சொல்கிறது. இந்த அமெரிக்கா அன்றைக்கு ஏன் சொல்லவில்லை?ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் எல்லாம் முடிந்த பிறகு இன்று இலங்கைக்கு சென்று பார்வையிடுகிறார். உலகத் தமிழ் இனமே வேண்டுகோள் விடுத்திருந்தபோது அன்றைக்கு அவர் சென்றிருக்கலாமே? அன்று செல்லவில்லை. சீனா செங்கொடி தூக்கி நிற்கிறது. அந்தக் கொடியை தூக்க அதற்கு என்ன தகுதி இருக்கிறது. இங்கிலாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகள் எல்லாம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வந்து நிற்கின்றன. ஆனால் இந்தியா எதிராக உள்ளது. இதைச் சொன்னால் இறையாண்மை மீறலா? நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட 350 பேர் வெள்ளைக்கொடி தாங்கி சிங்கள இராணுவத்தை நோக்கி வந்தார்கள். அவர்களை வஞ்சகமாக கொன்று கொடுஞ்செயல் புரிந்ததை உலகில் யாராவது கண்டித்துள்ளார்களா? இதுவரை நடந்தது முன்னோட்டம்தான். இனி தாண்டா போர் நடக்கப் போகிறது. 5ஆம் கட்டப் போரில் பிரபாகரன் கடைப்பிடித்த மரபுகளை நாங்கள் கடைப்பிடிக்கப் போவதில்லை. ஒரு சிங்களவன் கூட நிம்மதியாக உறங்க முடியாத அளவிற்கு தாக்குவோம். கொழும்பு நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம். மானமுள்ள கடைசி ஒரு தமிழன் இருக்கும்வரை சிங்களவர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும். நள்ளிரவில் ஒரு பெண் நகை அணிந்து பாதுகாப்பாக நடந்து செல்லும் போதுதான் சுதந்திரம் கிடைத்து விட்டதாக அர்த்தம் என்று காந்தி கூறினார். இந்த காந்தியின் கனவை பிரபாகரன் நனவாக்கினார். அற்புதமான தமிழ்த் தேசத்தை அங்கு நிர்மாணித்தார். நீதித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கட்டமைத்தார். அங்கு திருடன் இல்லை, எந்த குற்றமும் நடைபெறவில்லை. அப்படிப்பட்ட தேசத்தை சிதைத்து விட்டார்கள். இதற்கு காரணமாக இருந்த இந்திய அரசை கண்டிப்பது தவறா? இந்தியா என்றால் ஒரு தேசம். வாஜ்பாய் உள்ளிட்ட வேறு பலரும் பிரதமராக இருந்துள்ளார்கள். தேசத்தை நான் குறை கூறவில்லை. காங்கிரஸ் அரசையும் அதன் தலைமையையும்தான் குற்றம்சாட்டுகிறேன். இங்குள்ள தமிழர்கள் பலர் நடந்து கொண்டதை நினைக்கும்போது அவமானமாக இருக்கிறது. பணமா? போராட்டமா? என்ற கேள்வி எழுந்த போது, பணத்தின் பக்கம் சேர்ந்து விட்டானே என் தமிழன் என்று நினைத்து வெட்கப்படுகிறேன். என் வீட்டுக் கூரை தீப்பிடித்து எரியும்போதுதான், தண்ணீர் எடுத்து வருவேன் என்ற எண்ணத்தில் பல தமிழர்கள் இங்கு உள்ளனர். இந்தநிலை நல்லதா? உனக்கு பாதிப்பு வரும் போது உதவுவதற்கு அருகில் யாரும் இருக்க மாட்டார்கள். வைகோ, தா.பாண்டியன் பாராளுமன்றத்தில் இருந்தால், தமிழக மீனவர்கள் கடலில் சுடப்பட்டு செத்திருப்பார்களா? இனிமேலாவது தமிழர்கள் வெகுண்டு எழ வேண்டும். இல்லைவிட்டால், தமிழ் இனத்தை காப்பாற்ற வேண்டும். இன்றைக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு உகந்த நபர் மாவீரன் பிரபாகரன்தான். இந்தியாவும் சீனாவும் பாகிஸ்தானும் எந்த காலத்திலாவது ஒன்றாக சேர்ந்ததுண்டா? எந்தப் பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும் சீனாவும், இந்தியாவும் அல்லது இந்தியாவும், பாகிஸ்தானும் எதிரும் புதிருமாகத்தான் இருப்பார்கள். அவர்கள் மூன்று பேரையும் ஒன்றாக சேர்த்து வைத்த பெருமை பிரபாகரனைத்தான் சேரும். பிரபாகரனை எதிர்ப்பதற்குத்தான் இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்துள்ளார்கள். இலங்கைக்கு எதிராக ஐ.நா.சபையில் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் இன்றைக்கு தோற்கடிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஆதரவாக நின்று இந்த தீர்மானத்தை இந்தியா தோற்கடித்திருக்கிறது. தீர்மானம் வெற்றி பெற்றிருந்தால் முதல் குற்றவாளியாக இந்தியா நின்றிருக்கும். அதன் அருகில் சீனாவும், பாகிஸ்தானும் நிற்கும். அந்தப் பழிக்கு பயந்துதான் தீர்மானத்தை இந்தியா தோற்கடித்துள்ளது. எங்கள் ஆழ்மனதில் வேதனைத் தீ எரிந்து கொண்டிருக்கிறது. அது எப்படி வெடித்து வெளிக்கிளம்பப் போகிறது? என்பதைப் பார்க்கத்தான் போகிறீர்கள். மானமிக்க வீரம் பொருந்திய தமிழர் கூட்டம் இன்னும் இருப்பதை மறந்துவிட வேண்டாம்” என்று இயக்குனர் சீமான் பேசினார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக