ஞாயிறு, 31 மே, 2009

அமிழ்தினும் ஆற்ற இனிதே!

First Published : 31 May 2009 12:57:00 AM IST


புவி அனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துத் தமிழ்மொழியைப் புகழிலேற்றிய புதுக்கவிஞன் பாரதி உலக மக்களை நோக்கி, ""தின்று விளையாடி இன்புற்று வாழ்ந்திடுவீர்'' என அறிவுறுத்தினான்.""வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவது'' என்று இதற்குப் பொருளல்ல. தின்பதும் விளையாடுவதும் இன்புறுவதும் கூட்டு வாழ்க்கையின் வெளிப்பாடுகள். குழந்தைகள் தின்பதைக் கண்டு, அவர்களோடு கொஞ்சி விளையாடி மகிழ்ந்திருத்தல் என்பது கூட்டு வாழ்க்கையின் ஓர் அங்கமாகும். மழலைச் செல்வங்கள் உண்ணும் பாங்கினை மையமாக வைத்து வடிக்கப்பட்ட தமிழிலக்கியங்கள், தமிழர் பண்பாட்டினை உலகுக்கே நயம்பட நவில்கின்றன.குழந்தைகளின் கைகளால் பிசைந்த உணவு இந்திரர் அமிழ்தத்திலும் இனிமையானது என்றல்லாவா வள்ளுவர் கூறுகிறார்.""அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ்''வள்ளுவரின் இக்கருத்தைத் தமிழ்ப் பண்பாட்டின் தொட்டிலாக விளங்கும் சங்க இலக்கியத்தின் புறநானூற்றுப் பாடல் ஒன்றிலும் காணலாம். பாண்டியன் அறிவுடை நம்பி, மழலைச் செல்வம் இல்லாதோரின் வாழ்க்கை எவ்வாறு நன்மையற்றுப் போகிறது என விவரிக்கிறார்.""படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைதாம் வாழு நாளே!''(புறம்-188)பலருக்கு விருந்தளித்து அவர்களோடு அமர்ந்து உண்ணும் அளப்பரிய செல்வம் படைத்தோராயினும், இடைப்படக் குறுகுறு நடந்து, தங்கள் சிறு கைகளை நீட்டியும், இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும், நெய்யுடை அடிசிலை (உணவை) மேனியில் விதிர்த்துக் கொண்டும் தோற்றமளிக்கும் "மயக்குறு மக்கள்' இல்லாவிடில், அச்செல்வர் தம் வாழ்வில் பெறக்கூடிய நன்மை ஒன்றுமில்லை.வள்ளுவரின் "சிறுகை அளாவிய கூழிற்கும்' பாண்டியன் அறிவுடை நம்பியின் மெய்பட விதிர்க்கும் நெய்யுடை அடிசிலுக்கும் உள்ள ஒற்றுமை கற்பவரை எவ்வளவு இனிமை கொள்ளச் செய்கிறது! இவ்வினிமையின் தொடர்ச்சியினைப் 12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய "நளவெண்பா'வில் காணலாம். கலித்தொடர்க் காண்டத்தில்,""பொன் உடையரேனும், புகழ் உடையரேனும், மற்றுஎன் உடையரேனும் உடையரோ - இன் அடிசில்புக்கு அளையும் தாமரைக்கை, பூநாறும் செய்யவாய்மக்களை இங்கு இல்லாதவர்?''என்று நளன், மழலைச் செல்வத்தின் மேன்மையைக் கூறுகிறார்.குமரகுருபர சுவாமிகள், ""மழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல்'' என்று முருகப் பெருமானை நயந்து பாடுவார். அதேபோன்று, புகழேந்தியார், ""தாமரைக்கை பூநாறும் செய்யவாய் மக்கள்'' என்று குறிப்பிடுகிறார். இன்னடிசில் நுழைந்து, தம் சிவந்த கைகளால் உணவை அளையும் மக்கட்பேறு இல்லாதவர்கள் பிற பேறுகளைப் பெற்றிருப்பினும் என்ன பயன்? குழந்தைகள் அளாவும் கூழின் இனிமை, கற்றார் ஏத்தும் இலக்கியங்களில் மட்டுமன்றி, ஏழை எளிய மக்களின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் நாட்டுப்புற இலக்கியத்திலும் மிக நுட்பமாகக் காட்டப்படுகிறது.""ஏன் அழறே பெண்ணே? - நீஏன் அழறே பெண்ணே?''என்று வினவுபவரின் கேள்விக்கு மறுமொழியாக அப்பெண் கூறுவது கேட்போரின் காதுகளில் தேனாய்ப் பாய்கிறது.""வட்டிலிலே போட்ட சாதம் - சாமிவாரித்தின்னப் பிள்ளை இல்லை! கிண்ணியிலே போட்ட சாதம் - சாமி கீறித்தின்ன பிள்ளை இல்லை! ....... ......... .........மழைபெய்த வாசலிலே - நான்மைந்தனடி காணேனே!மைந்தனடி காணேனே - நான்மறுகி அழுகிறேனே!''மக்களின் மெய்தீண்டுவது உடலுக்கும், சொல் கேட்பது செவிக்கும் இன்பமானது என்றால், அவர்கள் உணவை வாரி, இறைத்து உண்பது பெற்றோரின் கண்களுக்கு இன்பமானது. இவ்வாறு மக்கட்பேற்றின் இன்றியமையாமை தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக