செவ்வாய், 2 ஜூன், 2009

தடை செய்யப்பட்ட ஆயுதங்களாலேயே அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டனர்: 'அமெரிக்கா' வார ஏடு
[செவ்வாய்க்கிழமை, 02 யூன் 2009, 07:09 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]
வன்னிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் பயன்படுத்திய தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாலேயே அதிகளவிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என 'அமெரிக்கா' என்ற தேசிய கத்தோலிக வார சஞ்சிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னியில் இடம்பெற்ற இறுதிச் சமரில் சில நாட்களில் சிறிலங்கா படையினர் 25 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் பொதுமக்களை படுகொலை செய்தும் காயப்படுத்தியும் உள்ளதாக உதவிப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொத்துக்குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் என்பனவற்றின் செறிவான பிரயோகத்தினாலே அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டதாக ஒரு தொண்டர் நிறுவனப்பணியாளர் தெரிவித்துள்ளார். இந்த வகை ஆயுதங்கள் அனைத்துலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாகும்.

தற்போது மோதல் இடம்பெற்ற பகுதி சுடுகாடாக காட்சி தருகின்றது. அங்கு எதுவுமே இல்லை. கட்டடங்களோ, தேவாலயங்களோ அங்கு இல்லை எல்லாம் அழிவடைந்த நிலையில் உள்ளதாக தொண்டு நிறுவனப் பணியாளர் மேலும் தெரிவித்துள்ளார். அவர் தனது பெயரை குறிப்பிடவில்லை.

ஏனெனில் பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல கொடுமையான சம்பவங்களை பார்வையிட்ட சாட்சி அவர்.

அவர் அனைத்துலக மனிதாபிமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவர். வன்னிப் பகுதியில் பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றிய அவர், கடந்த மே மாதத்தின் நடுப்பகுதியிலேயே அங்கிருந்து வெளியேறியிருந்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக