வியாழன், 4 ஜூன், 2009

இலங்கை முகாமில் உணவு, குடிநீர் இன்றி அகதிகள் தவிப்பு



ராமேசுவரம், ஜூன் 3: இலங்கை முகாமில் உள்ள அகதிகள் உணவு, குடிநீர், மருந்து இன்றி தவித்து வருவதாக புதன்கிழமை தனுஷ்கோடி வந்த அகதிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடைபெற்ற சண்டையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சுமார் 3 லட்சம் தமிழர்கள் வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ முகாமில் தங்கியுள்ளனர். இந் நிலையில் முல்லைத் தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தங்கராஜ் (80), இவரது மனைவி சிவமணி (69), மருமகன் கிறிஸ்டின் ராஜ்குமார் (31), இவரது மனைவி சந்திரகலா (31), பேரன் இளங்கதிர் (3) ஆகிய 5 பேரும் தலைமன்னார் கடற்கரையில் இருந்து ராமேசுவரத்திற்கு படகில் புறப்பட்டனர். இவர்கள் மே 31-ம் தேதி இரவு தனுஷ்கோடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள 5-ம் தீடையில் இறக்கிவிடப்பட்டனர். 3 தினங்களாக உணவு, குடிநீர் இன்றி தீடையில் பரிதவித்த இவர்களை இந்தியக் கடற்படையினர் ஜூன் 3-ம் தேதி காலை மீட்டனர். இதேபோல் ஜூன் 3-ம் தேதி மாலை இத்தீடையில் இருந்த 7 ஆண்கள், 3 பெண்கள், 4 சிறுவர்-சிறுமிகள் ஆகிய 14 பேரையும் இந்தியக் கடற்படையினர் மீட்டு தனுஷ்கோடி போலீஸôரிடம் ஒப்படைத்தனர். இலங்கை நிலவரம் குறித்து அகதி கிறிஸ்டின் செய்தியாளர்களிடம் கூறியது: முல்லைத் தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் நடந்த போரில் வீடுகள், கடைகள், உள்ளிட்ட அனைத்துக் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. போரில் காயம் அடைந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்து இன்றி ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். முகாமில் போதிய இடவசதி இன்றி வெயிலில் பலர் தங்கி உள்ளனர். முகாமில் போதிய குடிநீர் இல்லாமல், பசி, பட்டினியால் பரிதவித்து வருகின்றனர். இனிமேல் அங்கு வாழ முடியாத நிலையில் பல ஆயிரம் தமிழர்கள் அகதியாக தனுஷ்கோடி வருவதற்கு காத்திருக்கின்றனர். அவர்களை இலங்கை ராணுவம் தடுத்து வருகிறது. நாங்கள் யாருக்கும் தெரியாமல் இரவில் புறப்பட்டு வந்தோம் எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

ஈழத்தமிழர்களே! பாவிகளாகிய எங்களை மன்னியுங்கள்! சூடு சொரணை, உணர்ச்சி அற்ற அடிமைகள் நாங்கள்! இந்தியர்கள் துன்புற்றால் உடனடியாக முதல்உதவி எங்களிடம் இருந்துதான் செல்லும். ஆனால் தமிழர்கள் அல்லலுறும் பொழுது நாங்கள் வாய்மூடி அமைதியாகத்தான் இருப்போம். ஏனெனில் நாங்கள் எங்களுக்கு எதிரான இந்தியர்களை மட்டுமே போற்றுவோம்! அவர்களுக்கு மட்டுமே உதவுவோம்! தமிழர்களுக்கு உதவுவதைப் பாவச் செயலாகக் கருதுவோம்! பொழுது போகாமல் யாரும் வீர உரை ஆற்றினால் நம்பாதீர்கள்! எங்களை நம்பி இதுவரை நீங்கள் அழிந்தது போதும்! இனியேனும் விழித்து எழுங்கள்! எங்களை நம்பும் நேரத்தில் மனித நேயம் மிக்க அமைப்புகளையும் நாடுகளையும் ஆர்வலர்களையும் நம்பினால் சிறிதாவது பயன் கிடைக்கும். இப்படிக்கு அடிமைத் தமிழர்களில் ஒருவனான


இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/4/2009 4:34:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக