திங்கள், 1 ஜூன், 2009

ராஜீவ் கொலைக்கு பழிவாங்க காங்கிரஸ் அரசு துடித்தது; இனப்படுகொலைக்கு இந்தியா துணைபோனது: படை அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
[திங்கட்கிழமை, 01 யூன் 2009, 05:17 பி.ப ஈழம்] [வி.நவராஜன்]
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா மறைமுகமாக துணை போயிருப்பதாக இந்தியப் படையின் முன்னாள் அதிகாரி அசோக் மேத்தாவும், மனித உரிமை ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராஜீவ் காந்தி படுகொலைக்காக விடுதலைப் புலிகளை பழிவாங்கும் நோக்குடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா பல்வேறு ஆயுத உதவிகளை வழங்கியதாகவும் அசோக் மேத்தா கூறியிருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான இலங்கைப் போரின் கடைசி பகுதியில் சிறிலங்காவுக்கு இந்தியா மறைமுகமாக துணை போனது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காவுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்த இந்தியா, இறுதி வரை அதில் உறுதியாக இருந்தது. அதே நேரத்தில் களத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து தடுக்க இந்தியா தவறிவிட்டது.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு வருத்தமளிப்பதாகவும் கவலை அளிப்பதாகவும் உள்ளது என்று இந்தியப் படையில் உயரதிகாரியாகப் பணியாற்றியவரும் இலங்கை சென்ற அமைதிப் படையின் தளபதியாக இருந்தவருமான அசோக் மேத்தா லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் குற்றம் சாட்டியிருக்கிறார்.

சிறிலங்காவுக்கான ஆயுத விற்பனையை சீனாவும் பாகிஸ்தானும் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்தன. இலங்கையில் அந்த நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக இந்தியாவும் சிறிலங்காவுக்கு ஆயுத உதவிகளை வழங்கியது.

அது மட்டுமின்றி இப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க வேண்டும் என்றும் இந்திய அரசாங்கம் விரும்பியது என்றும் அசோக் மேத்தா கூறினார்.

இந்தியாவில் 6 கோடி தமிழர்கள் இருக்கும் போதிலும் அவர்களின் உணர்வுகளை பொருட்படுத்தாமல் சிறிலங்காப் படையினருக்கு ஆயுத உதவி, போர்ப் பயிற்சி ஆகியவற்றை இந்தியா வழங்கியது விடுதலைப் புலிகள் குறித்த உளவுத் தகவல்களையும் சிறிலங்காவுக்கு இந்தியா தெரிவித்தது என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி சிறிலங்கா அரசுக்கு இந்தியா தொடர்ந்து தூதரக வழியில் ஆதரவு தெரிவித்தது என்றும் போர்ப் பகுதியில் சிக்கியிருந்த தமிழ் மக்களை காப்பாற்ற, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி போர் நிறுத்தத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது என்றும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்ததாக 'த ரைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை சீனா, ரசியா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவும் முறியடித்தது.

மேலும் சிறிலங்காவை புகழ்ந்து அந்நாடே கொண்டுவந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் காசா பகுதி மீது குண்டுவீச்சு நடத்தி 926 பேரை படுகொலை செய்ததற்காக இஸ்ரேல் மீது போரியல் குற்ற வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்த இந்திய அரசு,
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை மட்டும் எதிர்த்ததாக 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

இலங்கைப் போருக்கு இந்தியா உதவியதை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு இயக்குநர் பிறட் அடம்சும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலங்கையில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய மனிதப் பேரழிவு ஏற்பட இருப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்த பிறகும் இலங்கை இனச்சிக்கலில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்தாததற்காக அந்த நாடு என்ன காரணங்களை கூறினாலும் அதனை ஏற்க முடியாது.

இதில் இந்தியா சற்று தீவிரமாக செயல்பட்டிருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என 'த ரைம்ஸ்' நாளிதழிடம் பிறட் அடம்ஸ் கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது பெருமளவிலான மக்கள் கொல்லப்படுவார்கள் என்பது தெரிந்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் போரை இந்தியா முழுமையாக ஆதரித்தது என்று பொது மன்னிப்புச் சபையின் ஆசிய இயக்குநர் சாம் ஜரிஃபி கூறியுள்ளார்.

இலங்கைப் போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக இந்திய வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.

ஆனால், இந்தியத் தரப்பிடம் இருந்து எந்த வலியுறுத்தலும் வரவில்லை. இந்தியாவின் சார்பில்தான் நாங்கள் விடுதலைப் புலிகளுடன் போரிடுகிறோம் என்பது இந்திய அரசுக்கு தெரிந்திருக்கும் என்று என்.டி.ரி.வி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

அது மட்டுமின்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இந்திய அரசு எங்களுக்கு அளித்த ஆதரவு மிகவும் முக்கியமானது என்று 'தி வீக்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் மகிந்த ராஜபக்ச கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக