ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

அ.) மற்றவர்களுக்கு உதவுவதே வாழ்க்கை! ஆ.) சிற்றூர்ப்புற இளைஞர்களும் அருவினை ஆற்றலாம்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_79835420130908003720.jpg


சிற்றூர்ப்புற இளைஞர்களும்  அருவினை ஆற்றலாம்!

காவல்துறை,  படைத் துறை போன்ற, பாதுகாப்பு த் துறை பணியிடங்களுக்கு இலவச ப் பயிற்சியளித்து, 1,308 பேரின் கனவை நிறைவேற்றிய, பாரதி: நான், விழுப்புரம் மாவட்டம், கொசப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவன். என் சொந்த முயற்சியால், மத்திய காவல் துறை பயிற்சி மையத்தில், பயிற்சியாளராக பணிக்கு சேர்ந்தேன். கிராமப்புற இளைஞர்களிடம், போலீஸ், ராணுவம் போன்ற பாதுகாப்பு துறை பணியிடங்களுக்கான தேர்வில், போட்டியிட்டு வெற்றி பெற இயலாது என்ற தாழ்வு மனப்பான்மை அதிகம்.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை, நகர்ப்புற மக்களுக்கு நிகராக உயர்த்த, கிராமப்புற இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சியளித்து, பாதுகாப்புத் துறை பணிகளில், அதிக அளவு இடம் பெறச் செய்தால் தான் சாத்தியமாகும் என்பது, என் நம்பிக்கை. அதனால், 14 ஆண்டு கால பயிற்சியாளர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, 2008ம் ஆண்டு, "நிலா அறக்கட்டளை'யை, என் சொந்த ஊரிலேயே ஆரம்பித்தேன். இதன் மூலம், பாதுகாப்புத் துறை பணிகளுக்கு தேவையான உடற்தகுதி, பொது அறிவு, தனித் திறன், நேர்மை, ஒழுக்கம் என, அனைத்து பயிற்சி வகுப்புகளையும், இலவசமாக நடத்துகிறேன். இவர்களுக்காக இலவச தங்கும் விடுதியும், உடற்பயிற்சிக் கூட வசதியும் செய்து தந்துள்ளேன். அரசுப் பணிக்கு தேர்வாகும் வரை, இங்கேயே தங்கியிருக்கலாம் என்றாலும், இங்கு பயிற்சி பெறுவோர் அதிகபட்சம் இரண்டு ஆண்டிற்குள், பணிக்கு தேர்வாகி விடுகின்றனர். தற்போது, ஆண்கள் மற்றும் பெண்கள் என, மொத்தம், 586 பேர் இலவச பயிற்சி பெற்று வருகின்றனர். இதுவரை, எங்கள் மையத்திலிருந்து, 1,308 பேர் போலீஸ், ராணுவம் போன்ற பாதுகாப்பு துறை பணிகளுக்கு தேர்வாகி, வெற்றிகரமாக பணியாற்றி வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும், 452 இளைஞர்கள், போலீஸ் பணிக்கு தேர்வாகினர். இதன் மூலம், நகர்ப்புற இளைஞர்களுக்கு இணையாக கிராமப்புற இளைஞர்களாலும், சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டினேன். தொடர்புக்கு: 96261 14560


மற்றவர்களுக்கு உதவுவதே வாழ்க்கை!

எய்ட்ஸ் பாதித்த, நூற்றுக்கணக்கான குழந்தைகளை படிக்க வைத்து, பராமரித்து வரும் மருத்துவர், மனோரமா பினாகபாணி: நான், குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றுகிறேன். மின்சாரமே இல்லாத காலத்தில், விளக்கை வைத்து, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் செய்த மருத்துவ சேவையை, அப்பா கதையாக கூறுவார். அதனால், மற்றவர்களுக்கு உதவுவது தான் வாழ்க்கை என்ற எண்ணம் உருவாகி, மருத்துவம் படித்தேன். கடந்த, 1977ல், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், மூத்த பயிற்சி மருத்துவராக பணியாற்றினேன். அப்போது, இரு குழந்தைகளுக்கு, எச்.ஐ.வி., இருப்பதாக மருத்துவ சோதனையில் அறிந்து, அழைத்து வந்தவரிடம் கூறினேன். அவரோ, "எங்கள் குழந்தைகள் காப்பகத்தில், 400 பேர் உள்ளனர். இந்த குழந்தைகளை மறுபடியும் அழைத்து சென்றால், மற்ற, 400 குழந்தைகளுக்கும் எய்ட்ஸ் பரவிவிடும். என்னால் அழைத்து செல்ல இயலாது' என, வெளியேறினார். வாயில்லா ஜீவன், சாலையில் அடிபட்டால் கூட, "புளூ கிராஸ்'க்கு தகவல் தெரிவித்து பலர் உதவுவர். ஆனால், இந்த குழந்தைகளுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. நானே, வீட்டுக்கு அழைத்து சென்றேன். அன்று ஆரம்பித்த பணி, இன்று, " கம்யூனிட்டி ஹெல்த் எஜுகேஷன் சொசைட்டி' எனும், அமைப்பாக மாறி, 93 எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை வளர்ப்பதுடன், 252 குழந்தைகளுக்கு, மறு வாழ்வும் அளித்துள்ளேன். 1980களில், எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், இக்குழந்தைகளை வளர்க்க, அதிகம் கஷ்டப்பட்டேன். ஆனால், இன்றளவும் எயிட்ஸ் பாதித்த குழந்தைகளை வளர்க்க, பெற்றோர் பயப்படுகின்றனர். எச்.ஐ.வி., பாதித்த பெண்களுக்கு குழந்தை பிறந்தால், மூன்றில் ஒரு சதவீத குழந்தைக்கு மட்டுமே, இந்நோய் தாக்கம் இருக்கும். முறையான சிகிச்சை அளித்தால், நோய் தாக்கத்தையும் குறைக்கலாம் என்பதால், பெற்றோர் பயப்பட தேவையில்லை. இப்படி, 43 குழந்தைகளை குணப்படுத்தியிருக்கிறேன். தொடர்புக்கு: 94440 77177.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக