தமிழறிஞர்களை அவமதிக்கும் மத்திய அரசு
2009-10, 2010-11 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான செம்மொழித்
தமிழ் விருதுகளை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. ஆனால், இந்த விருதுகள் குறித்துப்
பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் குமுறிக்கொண்டிருக்கிறார்கள் தமிழறிஞர்கள்.
தமிழ்ச் செம்மொழிக்காகப் பன்னெடுங்காலமாகக் குரல் கொடுத்துவரும் தமிழ்க்காப்புக்கழகத் தலைவரும் தமிழறிஞருமான
இலக்குவனார் திருவள்ளுவனிடம் நாம் பேசியபோது, "செம்மொழித்தகுதி
பெற்ற மொழிகளுக்கான விருதுகள் ஒவ்வொரு
வருடமும் குடியரசுத்தலைவரால் இந்திய
விடுதலை நாளில் வழங்கப்பெறுகின்றன. செம்மொழித்தகுதி பெற்ற சமசுகிருதம், அரபி, பெர்சியன், பாலி/பிராகிருதம்
மொழிகளுக்கு வருடம்தோறும் இவ்விருதுகளை வழங்குகிறது மத்திய அரசு. ஆனால், தமிழுக்கு மட்டும் காலம் தாழ்த்தியே வழங்குகின்றனர். 2009-10, 2010-11 ஆண்டுகளுக்கு
இப்போதுதான் அறிவிப்பே செய்திருக்கிறார்கள். பிற மொழிகளுக்கு உரிய காலத்தில்
விருதுகளை வழங்கும்போது, தமிழுக்கு மட்டும் தனி அநீதி
வழங்குகிறார்கள். இது தமிழறிஞர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இது குறித்து
மத்திய அரசைக் கேள்வி கேட்கவேண்டிய தமிழக
அரசோ, செம்மொழி பெற்றுத் தந்த முந்தைய அரசோ குரல் கொடுப்பதில்லை என்கிறபோது கோபம்
அதிகரிக்கவே செய்கிறது.
உரிய காலத்தில் வழங்காதது ஒரு புறமென்றால், பிற
மொழிகளில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை தமிழ்மொழியில் கடைப்பிடிக்கப் படுவதில்லை. அதாவது
தற்போது, தொல்காப்பியர் விருதும் குறள்பீட விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியர் விருது இந்தியத்தமிழ் அறிஞர் ஒருவருக்கும் குறள்பீட விருது அயல்நாட்டுத் தமிழ் அறிஞர் ஒருவருக்கும் அயல்நாடு
வாழ் இந்தியத்தமிழ் அறிஞர் ஒருவருக்கும் என மொத்தம் மூன்று விருதுகள் வழங்கப்பட
வேண்டும். இது செம்மொழிக்கான விருதுகள் விதிகளிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும்
3 விருதுகளுக்குப் பதிலாக 2 விருதுகள்
மட்டுமே வழங்குகின்றனர். அயல்நாட்டுவாழ் இந்தியத் தமிழறிஞர்களுக்கான விருதுகள் கொடுக்கப்படுவதே இல்லை. ஆனால், பிற மொழிகளுக்கு மட்டும்
அறிவிக்கப்பட்ட விருதுகள் தவிரக் கூடுதலாகவும் விருதுகளை வாரி
வழங்குகின்றனர். இப்படித் தமிழறிஞர்களை
மத்திய அரசு புறக்கணிப்பது தமிழுக்குச் செய்கிற துரோகம். தமிழைச்
சிறுமைப்பபடுத்துகிற செயல். தமிழுக்கு விருதுகள் பெறும் தகுதி இருக்கவில்லை எனப்
பறைசாற்றுகிற சதி.
இதுமட்டுமல்ல. 60 அகவைக்கு மேற்பட்ட மூத்த செம்மொழி
அறிஞர்களுக்கு அவரதுவாழ்நாள் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 50,000 உரூபாய் வழங்கப்பட வேண்டும். இதனைப் பாராளுமன்றத்திலே அறிவிக்கவும்
செய்தனர். ஆனால், இதுவரை
மூத்த செம்மொழி அறிஞர்களுக்கான விருதும் வழங்கவில்லை. 50,000 பணமும் வழங்கவில்லை. அதேசமயம்,
சமசுகிருதம், அரபி, பெர்சியன் மொழி அறிஞர்களுக்கு 1958-இலிருந்தும் பாலி/பிராகிருத மொழி
அறிஞர்களுக்கு 1996-இலிருந்தும் விருதும் பணமும் வழங்கி வருகின்றனர்.
ஆனால், நாடாளுமன்றத்தில் அறிவித்தும் தமிழுக்கு
மட்டும் இதனை நடைமுறைப்படுத்த மறுக்கிறது மத்திய அரசு. இதன் மூலம், 'தமிழில் மூத்த
அறிஞர்கள் யாரும் இல்லை என்றும் அந்த விருதினைப் பெறும் அளவிற்குத் தமிழ் மொழி
வளர்ச்சியடையவில்லை' என்றும் பொய்யான தகவலைப் பரப்பி
வருகின்றனர் டெல்லியில் உட்கார்ந்திருக்கும் தமிழ்ப்பகைவர்கள். இப்படி நிறைய சொல்லலாம்" என்கிறார் மிக
உக்கிரமாக.
தமிழ்ச் செம்மொழியைச் சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கும் மத்திய அரசை
வழிக்குக் கொண்டுவரத் தமிழின உணர்வாளர்களும் தமிழக அரசும் கடும் முயற்சி எடுக்க வேண்டும்.
- இரா.இளைய
செல்வன்.
நக்கீரன் செப்.11-13, பக். 32-33
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக