வெள்ளி, 13 செப்டம்பர், 2013

மும்பை இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்: பின்தொடர்ந்தவர்களுக்குச் சிறை


http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_802407.jpg

மும்பை இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்: பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்களுக்கு ஓராண்டு ச் சிறை
மும்பை: ஆட்டோவில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை, பின்தொடர்ந்து, தொந்தரவு செய்த இளைஞர்களுக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞர்களின் தொந்தரவை, மொபைல் போனில் படம் பிடித்து, அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அதன் மூலம் அந்த குற்றவாளிகள் மீது போலீசாரை நடவடிக்கை எடுக்கச் செய்த பெண்ணை பலரும் பாராட்டியுள்ளனர்.


ஆட்டோவில் தனியாக:

பத்து நாட்களுக்கு முன், மும்பையில், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு, ஆட்டோ ஒன்றில் பயணித்து கொண்டிருந்தார். ஆட்டோவை டிரைவர் ஓட்ட, பின் இருக்கையில், அந்தப் பெண் மட்டும் இருப்பதைப் பார்த்த, பைக்கில் வந்த இரு இளைஞர்கள், அந்தப் பெண் சென்ற ஆட்டோ அருகில் பைக்கை ஓட்டியபடி வந்து, கேலியும், கிண்டலும் செய்துள்ளனர். ஆட்டோ டிரைவர், வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றால், அவர்களும் வேகமாக வந்து, அந்தப் பெண்ணை, "ஈவ் - டீசிங்' செய்துள்ளனர். இதனால், அந்தப் பெண் மிகுந்த மனவேதனை அடைந்தார்.


மொபைலில் படம்:

இது போன்ற சம்பவங்கள், மும்பை சாலைகளில் வெகு சாதாரணம் என்பதால், இதற்கு முடிவு கட்ட விரும்பிய அப்பெண், தன் கையிலிருந்த மொபைல் போனில், அந்த இளைஞர்களின் அட்டூழியத்தை படம் பிடித்தார். வீட்டுக்குச் சென்ற அப்பெண், உடனடியாக, அவர்களின் சேட்டையை, சமூக வலைதளம் ஒன்றில், பதிவேற்றம் செய்து, "இது போன்ற அட்டூழியங்கள் தடுக்கப்பட வேண்டும்' என, வலியுறுத்தினார். அந்தப் படங்களை, சமூக வலைதளத்தில் பார்த்தவர்கள், இளம் பெண்ணை தொந்தரவு செய்த இளைஞர்கள் யார் என்பதை அறிந்து, அந்தத் தகவலை, போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.


துப்புரவு மேற்பார்வையாளர்கள்:

அதன் பிறகு, அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட போலீசார், அவரிடம் புகார் எழுதி வாங்கிய பின், அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் இருவர் மீதும், சமீபத்தில் அமலுக்கு வந்துள்ள, இந்திய குற்ற நடைமுறைச் சட்டம், 354 மற்றும் 354 டி பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். விசாரணையில், பைக்கில் வந்த அந்த இளைஞர்கள், மும்பை மாநகராட்சியில், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்தப் பெண்ணின் விவரங்கள், வெளியிடப்படவில்லை. அந்தப் பெண்ணை, சக பெண்கள் பலரும், இணையதளத்தில் பாராட்டியுள்ளனர். குற்ற நடைமுறைச்சட்டம், 354 பிரிவின் கீழ், மும்பையில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இது தான்.


குற்ற நடைமுறை சட்டம் 354, 354 டி:

டில்லியில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, பெண்களின் பாதுகாப்பிற்காக, குற்ற நடைமுறை சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டன. அதன் படி, பெண்களைப் பின் தொடர்ந்து, தொந்தரவு செய்பவர்களுக்கு, ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்க முடியும். பின்தொடர்தல் என்றால், பெண் பின்னால் வந்து தொந்தரவு செய்வது முதல், போனில் தொடர்பு கொண்டு வழிவது, இன்டர்நெட்டில் ஆபாசமாக பேசுவது, வேறு எந்த விதமான முறையிலும், அப்பெண்ணுக்கு பயத்தை உண்டு பண்ணுவது, பின்தொடர்தல் என, கருதப்படுகிறது. பின் தொடர்தல் குற்றத்திற்கான ஆதாரங்களை காட்டினால் போதும், பின்தொடர்ந்தவர்களுக்கு, ஓராண்டு சிறை நிச்சயம். மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் கூட விதிக்கப்படலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக