ஆங்கிலமும், கணிதமும் கடினமில்லை
"தேறாத கேஸ்' எனப், பள்ளியால்
ஒதுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களை, 22 ஆண்டுகளாக ஊக்குவித்து, மேலும்
அதிகம் படிக்க வழிகாட்டும், பாசுகரன்: நான், காஞ்சிபுரம் மாவட்டம்,
செங்கல்பட்டு அருகே உள்ள, திருமணி கிராமத்தை சேர்ந்தவன். சுற்றுவட்டார
கிராம பகுதியில், பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் மற்றும் 10ம் வகுப்பு
கூட தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை, அதிகமாக இருந்தது.
மாணவர்களின் பெற்றோர், படிப்பறிவற்றவர்களாக இருப்பதும், சரியான
வழிகாட்டுதல் இல்லாததுமே, இதற்கு காரணமாக உணர்ந்தேன். அதனால், நண்பர்கள்
உதவியுடன், 1992ம் ஆண்டு, இலவச மாலை நேர பள்ளியை ஆரம்பித்தேன். பொதுவாக
கிராமப்புற மாணவர்கள், இங்கிலிஷ் மற்றும் கணித பாடத்தை கண்டு பயப்படுவதால்
தான், படிப்பை பாதியிலேயே கைவிடுவது அதிகமாகிறது. இம்மாணவர்களுக்கு, இந்த
இரண்டு பாடங்கள் குறித்த மனநிலையை மாற்றி, ஆங்கில இலக்கணம் மற்றும் கணித
வாய்ப்பாடுகளையும், எளிதாக சொல்லி கொடுத்து, தேர்ச்சியடைய வைப்பதே,
எங்களின் இலக் காக நிர்ணயித்தோம். இதை செயல்வடிவ மாக்கிய போது, நல்ல பலன்
கிடைத்தது. எங்களின் இந்த கல்வி சேவையால், 10ம் வகுப்பு கூட முடிக்காத பல
கிராமப்புற மாணவர்கள், பி.ஏ., - பி.காம்., என, பட்டம் பெற்றுள்ளனர்.
யாருக்கும் படிப்பு வராது என, முடிவு செய்துவிட கூடாது. போதிய ஊக்கமளித்து,
முயற்சியை தூண்டினாலே போதும்; படிப்பதற்கான ஆர்வம் ஏற்படும். 2003ம்
ஆண்டு, "திருவள்ளுவர் மழலைகள் பள்ளி' என்ற குழந்தைகளுக்கான பள்ளியை
ஆரம்பித்து, நடத்தி வருகிறேன். இங்கு படிக்கும் குழந்தைகளின், 5 சதவீத
பெற்றோர் மட்டுமே, 10ம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள். ஏனெனில்,
படிப்பறிவற்ற கூலித் தொழிலாளியின் குழந்தைகளுக்கே, முன்னுரிமை தருகிறோம்.
எங்களிடம் படிக்கும் மாணவர்கள் உதவியுடன், கையெழுத்து போட
தெரியாதவர்களுக்கு, அவர்களின் கையெழுத்து போட கற்றுத் தருகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக