ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

தமிழை த் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் : இராமதாசு

தமிழை த் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் : இராமதாசு

தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் மாநில நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநில வாரியாக பிரிந்து குரல் கொடுக்கும் காட்சிகள் மட்டும் தான் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், முதன்முறையாக பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என குரல் கொடுத்திருப்பதுடன், அம்மொழியை நாடெங்கும் பரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் கடந்த 5ஆம் தேதி  உத்தர்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி உறுப்பினரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அரசியல் சீடருமான தருண் விஜய் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறார். தமிழ் மொழியின் சிறப்புகளையெல்லாம் பட்டியலிட்ட அவர், தமிழை இந்தியாவின் தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார். அத்துடன் நிற்காமல் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் தமிழுக்கு தேசிய இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும்; வட இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தமிழின் சிறப்பை பரப்ப வேண்டும்; தமிழ் மொழியை பயிலும் வட இந்தியர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும்; ஏழு கடல், ஏழு மலை தாண்டி சிறந்து விளங்கும் செம்மொழியான தமிழின் சிறப்பை வட இந்தியரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தருண் விஜய் வலியுறுத்தியிருக்கிறார். தமிழுக்காக தமிழ்நாட்டு உறுப்பினர்கள் குரல் கொடுத்தாலே அதை அனுமதிக்க வட இந்திய உறுப்பினர்கள் மறுத்து வந்த நிலையில் தமிழுக்காக வட இந்திய உறுப்பினர் ஒருவரே குரல் கொடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி  அளிக்கிறது. இதற்காக பா.ச.க. உறுப்பினர் தருண் விஜய்க்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகின் மூத்த மொழியான தமிழின் சிறப்புகளை அழிக்க திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டும் தமிழ்நாட்டில்   தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்படவில்லை ; செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு தமிழே தெரியாத ஒருவரை இயக்குனராக நியமித்ததன் மூலம் அதன் பணிகள் முடக்கப்பட்டிருக்கின்றன; சென்னைக் கோட்டையில் செயல்பட்டு வந்த பாவேந்தர் செம்மொழி நூலகம் மூடப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் குப்பைகளைப் போல குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கெல்லாம் மேலாக, தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் அறிவிக்க வேண்டிய தமிழக அரசு, அரசுக்கு சொந்தமான பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி முறையை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது. தமிழை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசே தமிழை அழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில், எங்கோ பிறந்த, இந்தி பேசும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழுக்காக வாதாடியிருப்பது உண்மையிலேயே பெருமிதம் அளிக்கிறது. தமிழ் உலகமெல்லாம் போற்றப் படவேண்டும் என்ற தமிழர்களின் கனவு நனவாகி விட்டதாகவே தோன்றுகிறது.
இந்த மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் மத்திய அரசு தமிழுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  7 ஆண்டுகள் ஆன பிறகும் அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கெல்லாம் காரணம் தமிழ் தேசிய மொழியாக அறிவிக்கப்படாதது தான். எனவே தமிழின் சிறப்பையும், தமிழர்களின்  உணர்வுகளையும் மதித்து தமிழை தேசிய மொழியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று  வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக