வெள்ளி, 13 செப்டம்பர், 2013

இலங்கை: பொதுவாக்கெடுப்பு மூலம் அரசியல் தீர்வு

இலங்கை: பொதுவாக்கெடுப்பு மூலம் அரசியல் தீர்வு

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு பொதுவாக்கெடுப்பு மூலம் அரசியல் தீர்வு காண ஐ.நா. மன்றம் முன் வரவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஐ.நா.வின் வல்லுநர் குழு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆய்வு செய்து 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் 2012, 2013-ஆம் ஆண்டுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் இவற்றை இலங்கை அரசு செயல்படுத்தவில்லை.
இலங்கை அரசே அமைத்த போரில் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் காணும் குழு வழங்கிய அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற இலங்கை அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இலங்கைக்கு நேரில் சென்று ஐ.நா.மன்றத்தின் முதல் முதுநிலை அலுவலர் நவநீதிம் பிள்ளை ஆய்வு மேற்கொண்டார்.
முள்ளிவாய்க்காலில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ்ப் பெண்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படவில்லை என்றும், விவசாய நிலங்கள் சிங்கள ராணுவத்தால் கைப்பற்றப்பட்டு விட்டன என்றும் நவநீதம் பிள்ளையிடம் கூறியுள்ளனர்.
போரினால் தங்கள் குடும்பங்களில் பலரையும் பறிகொடுத்த பெண்கள் நவநீதிம் பிள்ளையின் கால்களில் விழுந்து கதறித் துடித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நவநீதிம் பிள்ளை அறிக்கை அளிக்க உள்ளார்.
அந்த அறிக்கை ஈழத் தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், தமிழர்களை ஆக்கப்பூர்வமான கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழர்கள் மத்தியில் வளர்ந்துள்ளது.
இலங்கை மீது விசாரணை: இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போர்க்குற்றங்கள் என்றும் இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்.
நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, இனப்படுகொலைகள் தொடர்பாக குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இதற்கு நவநீதம் பிள்ளையின் அறிக்கை எந்த அளவுக்குத் துணை புரியப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
எனினும் இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் உலக நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள் மத்தியில் ஐ.நா.வின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வை முடிவு செய்யும் உரிமையை வழங்க முன் வரவேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக