ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

சங்கப் பலகை: தமிழ் இலக்கிய மாணவர்களுக்கான புதிய களம்

நல்ல பணி. பாராட்டிற்குரிய சிறந்த பணி.இதனை மாணாக்கர்கள் நல்ல வகையில பயன்படுத்திக் கொண்டு தரமான ஆய்வுக்கட்டுரைகளைப் படைக்க வேண்டும். பெரும்பாலும் இப்போதைய தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழாசிரியர்கள் எதையும் படித்து ஆராய்ந்து எழுதுவதில்லை. மேம்போக்காவும் கூறியதையே கூறலாகவும் தரமற்றும் எழுதுகின்றனர்.  நல்ல படைப்பாளிகள் வெளி உலகிற்குத் தெரிவதில்லை. அவ்வாறில்லாமல் மாணாக்கர்கள் எழுதப்போகும்  பொருண்மை தொடர்பான நூல்கள் அல்லது கட்டுரைகளை நன்கு ஆழ்ந்து படித்துச் சிறப்பான ஆழமான படைப்புகளை அளித்துப் பெருமை பெற்றுத் தினமணிக்கும்  பெருமை சேர்க்க வேண்டும்.
ஆங்கிலத் தொடரைச் சரியாக ஆங்கிலத்தில் தெரியும்படி வெளியிட தினமணியை வேண்டுகின்றேன்.
தினமணியின் சங்கப்பலகை சங்கத்தமிழ் போல் புகழ் பெறுவதாக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

சங்கப் பலகை: தமிழ் இலக்கிய மாணவர்களுக்கான புதிய களம்"சங்கப்பலகை' - என்ற இப்புதிய பகுதிக்கு, தமிழ் இலக்கியத்தை முதன்மைப் பாடமாக (இளங்கலை, முதுகலை, இளம் முனைவர், முனைவர்) எடுத்துப் படிக்கும் மாணவர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் இந்த சங்கப்பலகையில் ஏறும் தகுதிபெறும்.
மாணவர் பெயர், முழு முகவரி, தொ.பே.எண், படிக்கும் கல்லூரி / பல்கலைக்கழகத்தின் பெயர், அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றை இணைத்து மூன்று பக்கங்களுக்கு மிகாமல் (500 சொற்களுக்குள்) எழுதி அனுப்பவும். கட்டுரைக்கான அடிக்குறிப்புகள் (புஃட்நோட்), மற்றும் கட்டுரை தொடர்பான ஆதாரங்கள் (படங்கள், கல்வெட்டு, செப்பேடு போன்றவை) இணைக்க
வேண்டும். மின்னஞ்சலில் அனுப்புவோர் ஜ்ர்ழ்க் மற்றும் ல்க்ச் ஃபைல் இணைத்து அனுப்ப வேண்டும்.
-ஆசிரியர்

அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர்,
தினமணி - தமிழ்மணி
"சங்கப்பலகை'
29, 2-ஆவது பிரதான சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை,சென்னை-58.

3 கருத்துகள்:

 1. தினமணியின் முயற்சிக்குப் பாராட்டும் வெற்றி காண வாழ்த்தும்!

  தினமணிக் குழுவினருக்கு என் வேண்டுகோள்:

  1. மாணவர்களிடமிருந்து உறுதிமொழி பெறவேண்டும். "இந்தக் கட்டுரை இதுவரை வேறு எந்த இதழிலும் வந்ததில்லை. இது என் சொந்த ஆய்வின் அடிப்படையில் எழுதிய கட்டுரை. பிறருடைய கருத்துகளை என்னுடைய கருத்தாகக் கடத்தல் செய்து இக்கட்டுரையில் எழுதவில்லை."

  2. மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் முறுக்குப் பிழியும் அச்சு போல் ஒரு வகை அச்சுத் தகடு (template) கொடுக்கலாம். காட்டாக, கட்டுரை நான்கு பகுதிகளாக அமையலாம்: முகப்பு (கட்டுரை இதைப் பற்றியது; என் கருதுகோள் இது; ... இப்படி), பிறர் கருத்து (எடுத்துக்கொண்ட பொருள் பற்றி ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்து), என் கருத்து, தொகுப்பும் முடிபும்.

  இந்த மாதிரி அமைப்பு எல்லாக் கட்டுரைகளையும் சீரான வடிவுக்குள் அமைக்கும். கட்டுரைகளைச் சீர் தூக்கிப் பார்க்கவும் உதவும். அதோடு, எண்ணங்களைக் கோவையாக வெளிப்படுத்தவும் மாணவர்களுக்குப் பயிற்சி கிடைக்கும்.

  கட்டுரைகளைப் படித்துக் கருத்துச் சொல்ல உதவி தேவையானால் தெரிவிக்கவும். என்னாலான உதவி செய்கிறேன்.

  இப்படிக்கு,
  இராசம்
  தமிழ் மன்றக் குழு வழியாக

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு,
  தமிழ் ஆசிரியர்களைத் திட்டித் தீர்க்கும் வரிசையில் தாங்களும் சேர்ந்துள்ளது மிகவும் வருத்தம் தருகிறது.
  எல்லாத் துறைகளிலும் திறமை உள்ள ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆர்வமில்லாத ஆசிரியர்களும் இருக்கிறார்கள். இது இந்தியக் கல்வி அமைப்பின் இன்றைய நிலை. அவ்வாறு இருக்க, தமிழ் ஆசிரியர்களை மட்டும் இவ்வாறு கணிப்பது சரியா?

  கல்வி அமைப்பைச் சாடுங்கள். தமிழ் ஆசிரியர்களைத் தனிமைப்படுத்தித் திட்டாதீர்கள்.

  //பெரும்பாலும் இப்போதைய தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழாசிரியர்கள் எதையும் படித்து ஆராய்ந்து எழுதுவதில்லை. மேம்போக்காவும் கூறியதையே கூறலாகவும் தரமற்றும் எழுதுகின்றனர்.//

  அன்புடன்
  ந. தெய்வ சுந்தரம்
  தமிழ் ஆசிரியர்
  சென்னை
  தமிழ்மன்றக் குழு வழியாக

  பதிலளிநீக்கு
 3. மதிப்பிற்குரிய பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களுக்கு வணக்கம். நான் மேம்போக்காக வோ கூட்டத்தோடு சேர்ந்து திட்டம் வகையிலோ எதையும் கூறவில்லை. உண்மையைத்தான் கூறுகின்றேன்.
  1990 களில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பணியிடங்களுக்குத் தமிழ் முனைவர் , ஆய்வு நிறைஞர் பட்டம் பெற்றவர்களிடமிருந்து வந்த விண்ணப்பங்களில் ஒன்றுகூடப்பிழையின்றி அமையவில்லை. அவர்கள்தாம் இன்று ஆசிரியர்கள். பிழையின்றி எழுதுவது மட்டுமல்ல, தமிழ்ச் சொற்கள் எவை எனத் தெரியாமலேயே தமிழ்ஆசிரியர்கள் இன்று உள்ளனர். இஃதும் உண்மையே அன்றி மிகைவுரை அன்று! தமிழாசிரியர்களால் திருத்தப்பெற்ற மாணாக்கர்களின் கட்டுரை ஏடுகளை வாங்கிப் பாருங்கள்! திருத்தப்படாத பிழைகள் மலிந்துள்ளமையைக் காணலாம். தமிழாசிரியர்களிடம் கேட்டால் தேர்ச்சி குறைந்தால் அவப்பெயர் கிடைக்கும், நன்கொடை கொடுத்துச் சேர்ந்தவர்கள் பள்ளியில் தொடரமாட்டார்கள் என்பன போன்ற காரணங்களைக் கூறுகின்றனரே தவிரத் தங்களைத் திருத்திக் கொண்டு மாணாக்கர்களையும் செம்மைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. கருத்தரங்கக் கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள்! தரமற்றும் பிழை மலிந்தும் உள்ளவற்றைக் காணலாம். பொதுவான கல்வியமைப்பிலும் ஆசிரியர் பயிற்சியிலும் குறைபாடுகள் உள்ளமை உண்மை. அவற்றிற்கும் அப்பாற்பட்டு நன்கு தேர்ச்சியுறாமலும், படிப்பு என்பது தொடர்பணி என உணராமலும் தமிழ்த்தரமற்றவர்கள் ஆசிரியர்களாக உள்ளனர் என்பது பேருண்மை.


  பதிலளிநீக்கு