யாழ்ப்பாணத்தில் கால்பதிக்கும் சீன நிறுவனங்கள்: இந்தியாவை ஓரம் கட்டுகிறது இலங்கை அரசு
இலங்கையில்,
வரும் நவம்பர் மாதம், "காமன்வெல்த்' மாநாடு நடைபெற உள்ளது. இலங்கையில்
மனித உரிமை மீறல் நடைபெறுவதால், இந்த மாநாட்டை, கனடா நாடு புறக்கணிக்க
முடிவு செய்துள்ளது. "இதே போல, இந்தியாவும் இந்த மாநாட்டை புறக்கணிக்க
வேண்டும்' என, தமிழகத்தில் உள்ள கட்சிகள், பிரதமர் மன்மோகன் சிங்கை
வற்புறுத்தி வருகின்றன. இந்த மாநாட்டையொட்டி, காமன்வெல்த் நாடுகளின்
வர்த்தக நிறுவனங்களின் கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்,
காமன்வெல்த் அமைப்பில், உறுப்பினர்களாக இல்லாத நாடுகளும் பங்கேற்க அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சீனா, தங்கள் நாட்டை
சேர்ந்த, 120 வர்த்தக நிறுவன பிரதிநிதிகளை, இம்மாநாட்டிற்கு அனுப்ப
திட்டமிட்டுள்ளது.
இலங்கையின் பல்வேறு வளர்ச்சி பணிகளில், சீனா,
முக்கிய பங்கு வகித்து வருகிறது. இலங்கையின் அரசியல் விவகாரத்தில்
இந்தியாவின் தலையீடு அதிகம் உள்ளதால், வர்த்தக விஷயங்களில், இந்தியாவை
ஓரம்கட்டும் நடவடிக்கையில், ராஜபக்ஷே அரசு மறைமுகமாக ஈடுபட்டுள்ளது.
விரிவான பொருளாதார உடன் படிக்கை திட்டத்தில், இந்தியாவுடன்
மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் கிடப்பில் உள்ளன. ""இந்த திட்டங்களுக்காக
இனியும் காத்திருக்க முடியாது,'' என, இலங்கை அதிபரின் தம்பியும், பொருளாதார
வளர்ச்சித்துறை அமைச்சருமான, பசில் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
சீன
வர்த்தக நிறுவனங்கள், தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில்,
தொழில்களை துவங்க ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன. காமன்வெல்த் மாநாடு
முடிந்ததும், சீன வர்த்தக நிறுவனங்கள், இப்பகுதியில் தொழில் துவங்க அனுமதி
வழங்கப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுடன் மேற்கொண்டுள்ள
ஒப்பந்தத்தின் படி, இலங்கை தன்னுடைய பங்குக்கு, ரப்பர், தேயிலை,
நவரத்தினங்கள், நகைகள், ஜவுளி வகைகள், எளிய இன்ஜினியரிங் பொருட்கள்
உள்ளிட்டவற்றை, அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதா வேண்டாமா என்ற இழுபறி நிலையில்,
இந்தியா, இலங்கையுடனான வர்த்தக வாய்ப்பை இழந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக