ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

வங்கியில் பணத்தைப் போல் தரையில் நீரைச் சேமிப்போம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_798246.jpg

வங்கியில் பணத்தை ப் போல் தரையில் நீரை ச் சேமிப்போம்
"நீருக்கும் போர் எழும் சூழ்நிலையில் "நிலத்தடிநீர்' என்பது ஒன்றும் அள்ள அள்ள குறையாத அமுதசுரபி அல்ல. வங்கியில் பணத்தை சேமித்து வைப்பது போலத்தான், சேமிப்பதை விட்டுவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில், கணக்கில் பணம் இருப்பு இல்லை என்றாகி விடும். அதேபோல நிலத்தடிநீரும் அவ்வப்போது கிடைக்கும் நீரை சேமித்து கொண்டே இருந்தால்தான் தேவைக்கேற்றால்போல நாம் எடுத்துக் கொண்டே இருக்க முடியும். சேமிக்கும் பழக்கம் இல்லாமல் போனால், வறட்சி நம்மை தாக்கி, விளைநிலங்கள் பாலைவனமாகும். ""நிலங்களில் விளைபொருட்களைபோல, மழை நீரையும் அறுவடை செய்ய வேண்டும். இதுதான் நிலத்தடிநீர் விவசாயத்தின் முதல்படி,'' என்கிறார் திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலை வேளாண்மை மற்றும் கால்நடைத்துறை பேராசிரியர் டி.டி.ரங்கநாதன்.


மழை நீரை வீணாக்க வேண்டாம்:

அவர் கூறியதாவது: மழை நீரை சேகரிப்பதன் மூலமாக, நிலத்தடி நீர் மட்டத்தை கணிசமாக உயர்த்தலாம். மழை நீரை அடுத்தவர் நிலத்துக்கு போக விடாமல், நமது நிலத்திலேயே தேங்குமாறு செய்ய வேண்டும். இதற்காக நிலத்தில், வேகத்தடைகளை உருவாக்க வேண்டும். அதாவது மழைக்காலத்துக்கு முன்பாகவோ அல்லது ஒரு மழை பெய்தவுடனேயோ, நிலத்தை நன்றாக உழவு செய்து வைக்க வேண்டும். இப்படி செய்தால், பெய்யும் மழை நீர், நிலத்தால் முழுமையாக உறிஞ்சப்பட்டு, அடிமட்டம் வரை சென்று நீர் சேமிக்கப்படும். தமிழகத்தில் இருக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள், மானாவாரி நிலங்களில் இப்படி உழவு போட்டு வைத்தாலே, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும். ஆறுகளில் தடுப்பணை அமைப்பது போல, ஒரு குறிப்பிட்ட வயலில் பெய்யும் மழைநீர், அந்த பகுதியிலேயே தேங்கி, மெதுவாக நிலத்துக்குள் இறங்கும் வரப்புகளை ஏற்படுத்த வேண்டும். நீர் தேங்கும் பகுதியில் வரப்புகளை ஒட்டி இரண்டடி ஆழம், அரையடி அகலத்தில் நீளமாக வாய்க்கால்களை வெட்ட வேண்டும். வரப்புகளை தாண்டி வரும் மழைநீர், அந்த வாய்க்கால்களில் நிரம்பி முழுவதுமாக பூமிக்குள் ஊடுருவும். மானாவாரி நிலங்களில், மழை காலத்துக்கு முன், ஒவ்வொரு மரத்தை சுற்றியும் கொத்தி விட்டு, வட்டப்பாத்தி எடுத்து வைக்க வேண்டும். சரிவான நிலங்களில் மரங்களை வளர்ப்பவர்கள், வழிந்து வரும் நீரை தேக்கும் விதமாக மரங்களின் அருகே பிறை வடிவ வாய்க்கால்களை வைக்கலாம்.


தடுப்பணை தேவை:


விவசாய நிலங்களுக்கு இடையில் ஓடைகள் குறுக்கிட்டால், அங்கு தடுப்பணைகள் கட்டுவதன் மூலமாக நீரை சேமிக்கலாம். நீரை சேமிப்பதைப்போலவே, அதை சிக்கனமாகவும், முறையாகவும் பயன்படுத்த வேண்டியது அவசியம். நமது கிணற்றில்தான் நீர் இருக்கிறதே... என விரயம் செய்யக்கூடாது. சொட்டு நீர் பாசன முறைக்கு மாற வேண்டும். அதிகம் தண்ணீர் தேவைப்படும் தென்னந்தோப்புகளில் இரண்டு வரிசைக்கு இடையில் அரையடி அகலம், இரண்டடி ஆழத்தில் வாய்க்கால்கள் எடுத்து, தென்னங்கழிவுகளை அதனுள் போட்டு பாசனம் செய்வதன் மூலம் வறட்சியான காலத்திலும் மரங்களை காப்பாற்றலாம். இவ்வாறு கூறினார். பேராசிரியருடன் தொடர்பு கொள்ள 94431-89605.


இஸ்ரேல் போல் வருமா:


தமிழகத்தில் சராசரி மழையளவு ஆண்டிற்கு 936 மி.மீ.,. இஸ்ரேலில் 400 மி.மீ., அவர்கள் மழைநீரை சேமித்து விவசாயம், குடிநீருக்கு பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் பெய்யும் அதிகப்படியான மழைநீரில் 14 சதவீதம்தான் சேமிக்கப்படுகிறது. மீதியுள்ள 86 சதவீதம் நீர், கடலில் வீணாக கலக்கிறது. கண்மாய்கள், குளங்கள், வரத்துகால்வாய்களை தூர்வாராத வரை நிலத்தடிநீரை சேமிக்க முடியாது.


கதாநாயகனை கவனியுங்கள்:


தமிழகத்தில், ஆண்டுக்கு ஆண்டு 400 எக்டேர் விளைநிலம், வீட்டு மனைகளாகவும், பிளாட்டுகளாகவும் பிரிக்கப்பட்டு வருகிறது. விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும். மரங்கள்தான் மழைநீரை நிலத்திற்குள் இறக்கி சேமிக்கும் "கதாநாயகன்கள்'. இதனால் மரங்களை நட்டு வளம் பெறுவோம்.


எப்படி தண்ணீரை தேக்குவது



* வரப்பு தடுப்புகள் அமைக்க வேண்டும்

* கண்மாய், குளங்களின் கரைகளை உயர்த்த வேண்டும்

* சமதள வட்ட கரைகள் அமைக்க வேண்டும்.

* நீர் குழிகள் அமைக்க வேண்டும்.

* நிலத்தில் பள்ளங்கள் அமைக்க வேண்டும்.

* நீர் உறிஞ்சும் குழிகள் அமைக்க வேண்டும்.

* கசிவு நீர் குட்டைகள், பண்ணைக்குட்டைகள், சிறு அணைகள் உருவாக்கலாம்

* நீர் வேகத்தை கட்டுப்படுத்தி, குறிப்பிட்ட இடத்தில் நிற்கவும் வைக்க வேண்டும். இதன் மூலம் மழைநீரை சேமிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக